Published : 10 Dec 2024 10:15 AM
Last Updated : 10 Dec 2024 10:15 AM
சென்னை: விசிகவிலிருந்து அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா 6 மாத கால இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் “ஆறு மாதத்திற்குள் ஆதவ் மனம் மாறுவாரா... அல்லது திருமா அணி மாறுவாரா.?” என்று தமிழக பாஜக மூத்த தலைவரும், தெலங்கானா, புதுச்சேரி முன்னாள் துணை நிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னதாக, விசிக துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனாவை கட்சியிலிருந்து ஆறுமாத காலத்துக்கு இடைநீக்கம் செய்வதாக அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் நேற்று அறிவித்தார். கட்சியின் நலன்களை முன்னிறுத்தி, கட்சித் தலைவர் மற்றும் பொதுச் செயலாளர்கள் ஆகிய மூவர் உள்ளடங்கிய தலைமை நிர்வாகக் குழுவில், ஆதவ் அர்ஜுனா மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்வதென தீர்மானிக்கப்பட்டதன் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக திருமாவளவன் குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு எதிர்வினையாற்றியிருந்த ஆதவ் அர்ஜுனா, “துணைப் பொதுச் செயலாளர் என்ற பொறுப்பு கடிதம் கிடைக்கப் பெற்றபோது என்ன மனநிலையில் இருந்தேனோ, அதே மனநிலையில் இப்போது வெளியாகியுள்ள எனது இடைநீக்கம் குறித்த கடிதத்தையும் எதிர்கொள்கிறேன். அம்பேத்கர், பெரியார், அண்ணா ஆகியோரின் கருத்துகளை உள்வாங்கி அரசியல் பயணத்தைத் துவங்கினேன். அந்தக் கொள்கைகளின் வழியில் எனது பயணம் எப்போதும் தொடரும்.” என்று பதிலளித்திருந்தார்.
இந்நிலையில் ஆதவ் விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழிசை சவுந்தரராஜன், “ஆதவ் அர்ஜுனா ஆறு மாதத்திற்கு இடை நீக்கம்... அண்ணன் திருமா அறிவிப்பு.. ஆறு மாதத்திற்குள் ஆதவ் மனம் மாறுவாரா... அல்லது திருமா அணி மாறுவாரா.?” என்று தனது சமூகவலைதளப் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.
விசிகவின் அரசியல் போக்கு பற்றி பல்வேறு ஊகங்கள் அதிகரித்து வரும் நிலையில் தமிழிசை இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார். விசிக பற்றியும் ஆதவ் அர்ஜுனா பற்றியும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் பல்வேறூ விமர்சனங்களை முன்வைத்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT