Published : 10 Dec 2024 05:57 AM
Last Updated : 10 Dec 2024 05:57 AM
மாமல்லபுரம்: மாமல்லபுரத்தை அடுத்த சூலேரிக்காடு, பட்டிபுலம் பகுதிகளில் ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமான நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை, நீதிமன்ற உத்தரவின் பேரில் அகற்ற முயன்ற அறநிலையத் துறை அதிகாரிகளை, அப்பகுதிவாசிகள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் பகுதியில் இருந்து கோவளம் பகுதிவரை ஈசிஆர் சாலையையொட்டி ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமாக 1,050 ஏக்கர் நிலங்கள் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ளன. இந்நிலங்கள் பல இடங்களில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இதனால், அறக்கட்டளைக்கு சொந்தமான நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி நிலத்தைமீட்டு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என கடந்த ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதன்பேரில், செங்கல்பட்டு மாவட்ட அறநிலையத் துறை சார்பில் ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்கபல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில்,மாமல்லபுரத்தை அடுத்த சூலேரிக்காடு பகுதியில் உள்ள 39 ஆக்கிரமிப்பு வீடுகளை இடித்து அகற்ற கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆளவந்தார் அறக்கட்டளை சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளபட்டது.
அப்போது, அப்பகுதிவாசிகள் ஒன்று திரண்டு ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகளை தடுத்து நிறுத்தினர். இதையடுத்து, அதிகாரிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையில், நீதிமன்றத்தை அணுகி முறையாக உத்தரவு பெறுவதாக தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகள், தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன. இந்நிலையில், ஆக்கிரமிப்பாளர்களில் 37 பேர் நீதிமன்றம் அணுகியதாகவும், 2 பேர் அணுகாமல் இருப்பதாகவும் தெரிந்தது. இதையடுத்து, நீதிமன்றத்தை அணுகாமல் இருந்த 2 நபர்களின் வீட்டையும் பூட்டி சீல் வைப்பதற்காக, அறநிலையத் துறை உதவி ஆணையர் ராஜலட்சுமி தலைமையிலான பணியாளர்கள் மற்றும் போலீஸார் அப்பகுதிக்கு வந்தனர். ஆனால், அப்பகுதி வாசிகள் பணிகளை தடுத்த நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர், 2 வீட்டாரும் ஒரு வார காலம் அவகாசம் கேட்டு கடிதம் கொடுத்தனர். இதையடுத்து, அறநிலையத் துறை அதிகாரிகள் அனைவரும் பட்டிபுலம் பகுதிக்கு சென்று 1.3 ஏக்கர் நிலத்திலிருந்த 41 ஆக்கிரமிப்பு குடியிருப்புகளை பூட்டி சீல் வைக்கும் பணிகளில் ஈடுபட்டனர். ஆனால், அதிகாரிகளை உள்ளே விடாமல் மீனவர்கள் தடுத்துநிறுத்தினர். பின்னர், நடைபெற்ற பேச்சுவார்தையில் மேல்முறையீட்டுக்காக நீதிமன்றத்தை அணுக உள்ளதால், கால அவகாசம் வழங்க கோரினர். அதிகாரிகளும் அதை ஏற்று திரும்பி சென்றனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT