Published : 10 Dec 2024 06:20 AM
Last Updated : 10 Dec 2024 06:20 AM
சென்னை: தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில், 48-வது சென்னை புத்தகக் காட்சி டிச.27-ம் தேதி தொடங்கி ஜன.12-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இதுகுறித்து, சென்னை நந்தனத்தில், தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் (பபாசி) சங்கத்தின் தலைவர் எஸ்.சொக்கலிங்கம், செயலாளர் எஸ்.கே.முருகன் ஆகியோர் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: 48-வது சென்னை புத்தகக் காட்சி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் டிச.27-ம் தேதி தொடங்கி ஜன.12-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
டிச.27-ம் தேதி மாலை 4.30 மணி அளவில், தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆகியோர் தொடங்கி வைக்கின்றனர். தொடக்க நிகழ்ச்சியில், கலைஞர் பொற்கிழி விருதுகளையும், பபாசி வழங்கும் விருதுகளையும் துணை முதல்வர் வழங்குகிறார்.
விடுமுறை நாள்களில் காலை 11 முதல் இரவு 8.30 மணி வரையும், வேலை நாள்களில் பிற்பகல் 2 முதல் இரவு 8.30 மணி வரையும் புத்தகக் காட்சி நடைபெறும். மொத்தம் 17 நாள்கள் நடைபெற உள்ளது. 900 அரங்குகள் அமைக்கப்படவுள்ளன. அனைத்து நூல்களுக்கும், அனைத்து அரங்கிலும் 10 சதவீதம் சலுகை விலையில் விற்பனை செய்யப்படும்.
பபாசியில் உறுப்பினரல்லாதவர்கள் விண்ணப்பித்த பெரும்பாலானோருக்கும் அரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்து சமய அறநிலையத்துறை சார்பில் வெளியிடப்படும் நூல்களுக்கென இந்த ஆண்டு தனி அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி, ஓவியப் போட்டிகள் நடைபெறுகின்றன.
ஒவ்வொரு நாள் மாலையிலும் சிந்தனை அரங்கில் தமிழகத்தின் தலைசிறந்த அறிஞர்கள், எழுத்தாளர்களின் உரைவீச்சுக்கள் நடைபெற உள்ளன. நிறைவுநாள் நிகழ்வில் உச்ச நீதிமன்ற நீதிபதி மகாதேவன் கலந்து கொள்ளவுள்ளார்.
பொங்கல் விழாவின்போது புத்தகக் காட்சிக்கு மக்கள் குறைந்த எண்ணிக்கையில் வருகை தருவதால், பொங்கலுக்கு முன்பாகவே இந்த ஆண்டு புத்தகக் காட்சியை ஜன.12-ம் தேதி முடிக்க உள்ளோம்.
வாசகர்களுக்கான நுழைவு கட்டணம் ரூ.10 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பள்ளி - கல்லூரி மாணவர்கள் பயன்பெறும் வகையில், 10 லட்சம் விலையில்லா டிக்கெட்கள் வழங்கப்பட உள்ளன.
புத்தகக் கண்காட்சியில் சுமார் 10 ஆயிரம் கார்களும், 50,000 இருசக்கர வாகனங்களும் நிறுத்தும் அளவுக்கு இடவசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது இவ்வாறு அவர்கள் கூறினர். பேட்டியின்போது, பொருளாளர் சுரேஷ், உதவி இணைசெயலாளர்கள் லோகநாதன், சாதிக் பாட்ஷா உள்ளிட்டோர் இருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT