Published : 10 Dec 2024 05:50 AM
Last Updated : 10 Dec 2024 05:50 AM
சென்னை: இந்திய ரயில்வேயின் ஐஆர்சிடிசி இணையதளம் மற்றும் செயலியில் நேற்று காலை திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால், முன்பதிவு டிக்கெட் எடுக்க முடியாமல் பயணிகள் அவதிப்பட்டனர்.
இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் எனப்படும் ஐஆர்சிடிசி இணையதளத்தில் பொதுமக்கள் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து வருகின்றனர். தற்போதுள்ள நிலவரப்படி, 82 சதவீத்துக்கும் மேற்பட்டோர், ஐஆர்சிடிசி இணையதளத்தில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்கின்றனர்.
பேருந்து டிக்கெட், உணவு ஆர்டர் செய்வது, அறைகள் முன்பதிவு உள்பட பல்வேறு கூடுதல் வசதியுடன் இந்த இணையதளம் செயல்படுகிறது. ஆனாலும், இந்த இணையதளத்தில் அடிக்கடி தொழில்நுட்ப கோளாறு ஏற்படுவதால், பயணிகள் அவதிப்படுகின்றனர்.
அந்த வகையில், ஐஆர்சிடிசி இணையதளம் நேற்று காலை 10.15 மணி அளவில் திடீரென முடங்கியது. இதுதவிர, இந்த செயலியில் சிக்கல் ஏற்பட்டது. இதனால், பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாமல் தவித்தனர். குறிப்பாக, தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்வோர், கடும் அவதிப்பட்டனர். இதையடுத்து, பயணிகள் சிலர் முன்பதிவு மையங்களுக்கு சென்று, வரிசையில் காத்திருந்து டிக்கெட் முன்பதிவு செய்தனர். நேற்று நண்பகல் 12 மணிக்கு பிறகே, டிக்கெட் முன்பதிவு முழுமையாக சீரானது.
இதுகுறித்து பயணிகள் சிலர் கூறுகையில், "ஐஆர்சிடிசி இணையதளத்தில் திடீரென தொழில்நுட்ப பிரச்னை ஏற்படுகிறது. இதனால், அவசரத்துக்கு டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாமல் சிரமப்படுகிறோம். இதற்கு தீர்வு காண வேண்டும்" என்றனர்.
இதுகுறித்து ஐஆர்சிடிசி உயர் அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘ஐஆர்சிடிசி இ டிக்கெட் இணையதளத்தில் திடீரென ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால், திங்கள்கிழமை காலை 10:15 மணி முதல் 11:30 மணி வரையில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டது. அதன்பிறகு, இந்த தொழில்நுட்ப கோளாறு சேவை தொடங்கினாலும், நண்பகல் 12:00 மணிக்கு பிறகு, மீண்டும் முழு அளவில் பயன்பாட்டுக்கு வந்தது. இணையதளத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்படாமல் இருக்க தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்" என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT