Published : 10 Dec 2024 05:40 AM
Last Updated : 10 Dec 2024 05:40 AM

சென்னை மாநகராட்சியில் ரூ.279 கோடி புதிய திட்டப்பணிகள்: துணை முதல்வர் உதயநிதி தொடங்கிவைத்தார்

சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று 559 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். உடன் அமைச்சர்கள் கே.என்.நேரு, தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, மேயர் ஆர்.பிரியா உள்ளிட்டோர்.

சென்னை: சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.279.50 கோடியில் புதிய திட்டப் பணிகளை துணை முதல்வர் உதயநிதி நேற்று தொடங்கிவைத்தார். சென்னை மாநகராட்சியில் ரூ.279.50 கோடியில் 493 புதிய திட்டப்பணிகள் தொடக்க விழா மற்றும் முடிவுற்ற 17 திட்டங்களை பொதுமக்களுக்கு அர்ப்பணிக்கும் விழா ரிப்பன் மாளிகை வளாகத்தில் நேற்று நடைபெற்றது.

மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா அனைவரையும் வரவேற்றார். நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு பங்கேற்று தொடக்கவுரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி பங்கேற்று புதிதாக கட்டப்பட்டுள்ள 3 நாய் இனக்கட்டுப்பாட்டு மையங்கள், ஒரு பள்ளி கட்டிடம், 2 புனரமைக்கப்பட்ட நீர்நிலைகள், 2 புதிய பூங்காக்கள், 8 விளையாட்டுத் திடல்கள் உள்ளிட்ட ரூ.29.88 கோடி மதிப்பிலான 17 திட்டங்களை திறந்துவைத்தார்.

தொடர்ந்து, ரூ.279.50 கோடியில் 10 புதிய ஆரோக்கிய நடைபாதைகள், 3 நுழைவு சாலை பெயர் பலகை, 7644 தெருக்களுக்கு புதிய பெயர் பலகைகளை நிறுவுதல், 148 பள்ளிகளை சீரமைத்தல், 291 அம்மா உணவகங்கள் மேம்பாடு, 12 கால்நடை கொட்டைகள் அமைக்கும் பணி, 2 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைத்தல், 2 சமூகநல மையங்கள் கட்டும் பணி, செவிலியர் மற்றும் பெண்கள் தங்கும் விடுதி, சைதாப்பேட்டை காய்கறி மற்றும் பழங்கள் சந்தை, 12 நீர்நிலைகளை புனரமைத்தல், மெரினா கடற்கரையில் நீலக்கொடி கடற்கரை திட்டம், 3 மழைநீர் வடிகால் பணிகள் என 493 புதிய திட்டப் பணிகளை தொடங்கிவைத்தார்.

அதனைத் தொடர்ந்து 559 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். பின்னர் இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: சென்னையில் அண்மையில் 2 பெருமழை, ஒரு புயல் என ஏற்பட்ட இயற்கை சீற்றத்தில் பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் திமுக அரசு சிறப்பாக செயல்பட்டது. சென்னையில் நீர்நிலை சீரமைப்பு பணிகளை அதிக அளவில் திமுக அரசு மேற்கொள்வதால் 15 செமீ மழை பெய்தும், பெரிய பாதிப்புகள் இல்லை.

கருணாநிதிதான் இம்மாநகருக்கு சென்னை எனப் பெயரிட்டார். சென்னை மாநகர வளர்ச்சிக்கு அன்றும், இன்றும் திமுக அரசு ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. சென்னையில் முதன் முதலில் மேம்பாலம் கட்டியது கருணாநிதி ஆட்சி காலத்தில்தான். டைடல் பார்க், செம்மொழி பூங்கா, மெட்ரோ ரயில் போன்ற பல திட்டங்களை கொண்டுவந்ததும் திமுக அரசுதான். சென்னையில் சீரான வளர்ச்சியை உறுதி செய்ய, வட சென்னை வளர்ச்சித் திட்டத்தை ரூ.6 ஆயிரம் கோடியில் முதல்வர் ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார். இவ்வாறு அவர் கூறினார். இறுதியில் மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன் அனைவரும் நன்றி தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என்.நேரு, தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, மாநகராட்சி துணை மேயர் மு.மகேஷ்குமார், எம்எல்ஏக்கள் ஐ.பரந்தாமன், தாயகம் கவி, மயிலை வேலு, ஆர்.டி.சேகர், ஐட்ரீம்ஸ் மூர்த்தி, மாதவரம் சுதர்சனம், ஜே.ஜே.எபினேசர், ஜோசப் சாமுவேல், வெற்றி அழகன், அரவிந்த் ரமேஷ், எழிலன், பிரபாகர ராஜா, கே.கணபதி, நகராட்சி நிர்வாகத் துறை செயலர் தா.கார்த்திகேயன், மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன், சென்னை குடிநீர் வாரிய மேலாண் இயக்குநர் டி.ஜி.வினய் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x