Published : 10 Dec 2024 01:38 AM
Last Updated : 10 Dec 2024 01:38 AM
நான் முதல்வராக இருக்கும் வரை டங்ஸ்டன் சுரங்கம் வராது. அப்படி வந்தால் நான் முதல்வர் பொறுப்பில் இருக்க மாட்டேன் என்று சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதிபட தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் நேற்று டங்ஸ்டன் சுரங்க உரிமத்தை ரத்துசெய்யக் கோரி முன்மொழியப்பட்ட தனித் தீர்மானம் மீது விவாதம் நடைபெற்றது.
எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி: சுரங்கம் மற்றும் கனிமங்கள் வளர்ச்சி மற்றும் ஒழுங்குமுறை 2023- திருத்தச் சட்டம் அதே ஆண்டு மார்ச் 17 முதல் அமலுக்கு வந்துள்ளதாக, 2023 செப்டம்பரில் மத்திய அரசு கடிதம் அனுப்பியதாக தெரிகிறது. பிளாட்டினம், டங்ஸ்டன் போன்ற 20 அரியவகை கனிமங்களின் ஏல முறையை மத்திய சுரங்கத் துறையே செயல்படுத்தும் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளதாக தெரிகிறது. அப்படியென்றால், 2023 அக்.3-ம் தேதி தமிழக நீர்வளத்துறை அமைச்சர் மத்திய சுரங்கத்துறைக்கு எழுதிய கடிதத்தில், எதிர்ப்பை தெரிவித்துள்ளாரா, நாடாளுமன்றத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி எம்.பி.க்கள் அழுத்தம் கொடுத்து அந்த சட்டத்திருத்தத்தை அங்கேயே தடுத்து நிறுத்தாமல் தவறிவிட்டது.
நிதியமைச்சர் தங்கம் தென்னரசு: மத்திய அரசு இந்த சட்டத்திருத்த முன்வடிவை மாநிலங்களுக்கு அனுப்பி கருத்து கேட்டபோதே, தமிழக அரசு தனது எதிர்ப்பை திட்டவட்டமாக தெரிவித்தது. நாடாளுமன்றத்தில் தங்களுக்குள்ள பெரும்பான்மையின் அடிப்படையில், அவர்கள் அந்த சட்டத்தை நிறைவேற்றியுள்ளனர்.
பழனிசாமி: இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்தின் உரிமம் இறுதி செய்யப்படும்வரை, அதாவது கடந்த நவ.7-ம் தேதி வரை சுமார் 10 மாதங்கள் இந்த அரசு அமைதியாக இருந்துள்ளது. இதை கைவிட மாநில அரசு தரப்பில் மத்திய அரசை கோரவில்லை என்று சுரங்கத்துறை குறிப்பிட்டுள்ளது. மக்கள் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கியதால் வேறு வழியின்றி பிரதமருக்கு முதல்வர் கடிதம் எழுதியுள்ளார். கடந்த பிப்ரவரி மாதமே சுரங்க ஏலத்தை தடுத்திருக்க முடியும்.
அவை முன்னவர் துரைமுருகன்: ஏலம் விடும் அதிகாரம் மத்திய அரசுக்கு மட்டுமே உள்ளது என்று தெரிவிக்கின்றனர். மத்திய அரசுக்கு மாநில அரசு கைகட்டி நிற்க வேண்டுமா. இதுதெரிந்த உடன் 2023 அக்.3-ம் தேதி மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதினேன். இந்த சட்டத்திருத்தம் மாநில அரசின் உரிமைகளை பறிப்பதுபோல் இருப்பதால் குத்தகை அனுமதி வழங்கும் அதிகாரம் மாநில அரசுக்கே அளிக்கும்படி கேட்டு கொண்டேன். அதற்கு அவர்கள், எங்களுக்குதான் அதிகாரம் உண்டு, ஒத்துழையுங்கள் என்று கேட்டனர்.
பழனிசாமி: ஒப்பந்தம் கோரப்பட்டு 10 மாதங்கள் வரை எதிர்ப்பு தெரிவிக்கவில்லையே. தனித் தீர்மானம் கொண்டு வந்தால், ஆமா போட்டுவிட்டு நாங்கள் போக வேண்டுமா. எதையும் சொல்லக்கூடாது. விளக்கம் கேட்கக்கூடாது என்றால் என்ன நியாயம்?
முதல்வர் மு.க.ஸ்டாலின்: திமுக உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் கடுமையாக எதிர்த்துள்ளனர். நிச்சயமாக, உறுதியாக சொல்கிறேன். நாங்கள் தொடர்ந்து கடிதம் எழுதியியுள்ளோம். போராட்டங்களை நடத்தியுள்ளோம். எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்ற தவறான தகவலை பதிவு செய்கிறீர்கள்.
பழனிசாமி: சட்டம் நிறைவேறிய பிறகு தீர்மானம் கொண்டு வந்து என்ன செய்யப்போகிறீர்கள். தொடக்கத்திலேயே நடவடிக்கை எடுத்திருந்தால், தடுத்திருக்கலாம்.
முதல்வர்: ஏலம் விட்டாலும் சரி, நிச்சயமாக, உறுதியாக அதற்கான அனுமதியை தருவதற்கு வாய்ப்பு இல்லை. இதுதான் முடிவு.
அமைச்சர் பி.மூர்த்தி: மத்திய அரசு ஏலம் விடுவதாக இருந்தாலும், அதை தமிழக அரசு அனுமதிக்காது. பேரவையில் தீர்மானம் கொண்டு வரப்படும் என்று அங்குள்ள மக்களிடம் தெரிவித்தேன். அதன்பின், அங்கு எந்த பிரச்சினையும், போராட்டமும் இல்லை.
முதல்வர்: நான் முதல்வராக இருக்கும் வரை நிச்சயமாக மத்திய அரசு இந்த திட்டத்தை கொண்டுவர முடியாது. அனுமதிக்க மாட்டோம். எதிர்க்கட்சிகள் பார்வையில் அலட்சியமாகவும், நாங்கள் தவறிவிட்டோம் என்றுகூட இருக்கலாம். ஆனால், எங்களுடைய பார்வையில் இந்த பிரச்சினையை சுட்டிக்கட்டி கடிதங்கள் எழுதியிருக்கிறோம். எந்த காரணத்தை கொண்டும் இந்த திட்டம் வருவதற்கு வாய்ப்பு இல்லை. அதனை தடுத்து நிறுத்துவோம். அப்படி ஒரு சூழ்நிலை வந்தால் முதல்வர் பொறுப்பில் நான் இருக்க மாட்டேன்.
பழனிசாமி: தமிழக மக்கள் பாதிக்கக்கூடிய எந்த ஒரு திட்டமாக இருந்தாலும் அதிமுக அனுமதிக்காது. அந்த வகையில் இந்த தீர்மானத்தை அதிமுக ஆதரிக்கும். இவ்வாறு விவாதம் நடைபெற்றது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT