Published : 10 Dec 2024 12:26 AM
Last Updated : 10 Dec 2024 12:26 AM
சென்னை: தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் நேற்று தொடங்கிய நிலையில், மறைந்த பேரவை உறுப்பினர்கள் மற்றும் ரத்தன் டாடா, சீதாராம் யெச்சூரி உள்ளிட்ட பிரபலங்கள் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
தமிழக சட்டப்பேரவையில், துறைகள் தோறும் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம், கடந்த ஜூன் 20 முதல் 29-ம் தேதி வரை 10 நாட்கள் நடத்தப்பட்டது. பேரவை விதிகள் படி பேரவையின் ஒரு கூட்டம் முடிவுற்றால், அடுத்த 6 மாதங்களில் அடுத்த கூட்டம் நடத்தப்பட வேண்டும். அதன்படி, டிச,9,10 தேதிகளில் சட்டப்பேரவை கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, நேற்று காலை 9.30 மணிக்கு சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது. முதலில், சட்டப்பேரவை உறுப்பிர்னர்கள் மறைவுக்கு இரங்கல் குறிப்புகளை பேரவைத் தலைவர் மு.அப்பாவு வாசித்தார். ஜ.முகமது கனி (புதுக்கோட்டை), எஸ்.ஆர்.ஜெயராமன்( சேலம்-1), பி.எம்.தங்கவேல்ராஜ் (கிருஷ்ணராயபுரம்), சி.கணேசன் (அச்சரப்பாக்கம்), கா.கோ.ரமேஷ் (திருப்பத்தூர்), சி.கண்முகம் (ஆலந்தூர்), வெ.புருசோத்தமன் (பெண்ணாகரம்), முன்னாள் அமைச்சர் க.சுந்தரம் (பொன்னேரி), ஓ.ஆர்.ராமச்சந்திரன் (கம்பம்), எஸ்.என்.பாலசுப்பிரமணியன் (பவானி), மா.தண்டபாணி (வேடசந்தூர்), கி.செல்வராஜ் (கோவை மேற்கு), ஏ.கோதண்டம் ( ஸ்ரீபெரும்புதூர்), சி.சுப்புராயர் (கம்பம்) மற்றும் நியமன உறுப்பினர் மார்கரெட் எலிசபெத் பிலிக்ஸ் ஆகிய 15 பேர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
மேலும், இலங்கையின் முதுபெரும் தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவருமான இரா.சம்பந்தன், மேற்கு வங்க முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்ஜி, இந்திய ராணுவ முன்னாள் தலைமை தளபதி எஸ்.பத்மநாபன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, ஈசிஐ திருச்சபையின் பேராயர் எஸ்றா சற்குணம், பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா, மூத்த பத்திரிகையாளர் முரசொலி செல்வம், தமிழக அரசின் முன்னாள் தலைமை செயலர் பி.சங்கர், புதுச்சேரி முன்னாள் முதல்வர் டி.ராமச்சந்திரன் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தீர்மானங்களை பேரவைத் தலைவர் அப்பாவு கொண்டு வந்தார். தீர்மானங்ளை நிறைவேற்றும் வகையில், உறுப்பினர்கள் மவுன அஞ்சலி செலுத்தினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT