Published : 10 Dec 2024 12:47 AM
Last Updated : 10 Dec 2024 12:47 AM
சிவகாசியில் உள்ள அச்சகங்களில் 2025-ம் ஆண்டுக்கான காலண்டர் உற்பத்தி பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
சிவகாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பட்டாசு தொழிலுக்கு அடுத்தபடியாக அச்சகத் தொழில் பிரதானமாக உள்ளது. சிவகாசி பகுதிகளில் உள்ள 800-க்கும் மேற்பட்ட அச்சகங்களில் சீசன் அடிப்படையில் நோட்டுப் புத்தகங்கள், டைரிகள், காலண்டர்கள், வணிக நிறுவனங்களுக்கு தேவையான பில் புக், பேக்கிங் அட்டைகள், அழைப்பிதழ்கள், துண்டுப் பிரசுரங்கள் ஆகியவை அச்சடிக்கப்பட்டு வருகின்றன.
இதில் 50-க்கும் மேற்பட்ட அச்சகங்கள் பிரத்யேகமாக காலண்டர் தயாரிப்பில் மட்டும் ஈடுபட்டு வருகின்றன. தமிழகத்தில் உற்பத்தியாகும் மொத்த காலண்டரில் 90 சதவீதம் சிவகாசியில் உள்ள அச்சகங்களில்தான் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஆண்டுக்கு ரூ.350 கோடி அளவுக்கு காலண்டர் வர்த்தகம் நடைபெறுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆடிப்பெருக்கு அன்று அச்சகங்களில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டு, அடுத்த ஆண்டுக்கான காலண்டர் ஆல்பம் வெளியிடப்படும்.
அதன்படி இந்த ஆண்டும் ஆடிப்பெருக்கு அன்று 2025-ம் ஆண்டுக்கான காலண்டர் ஆல்பம் வெளியிடப்பட்டது. அதில் தினசரி நாட்காட்டியில் உள்ள கியூஆர் கோடை ஸ்கேன் செய்தால் 234 சட்டப்பேரவை தொகுதிகளின் சிறப்புகளை அறிந்து கொள்ளும் வசதி, ஒரே காலண்டரில் கடிகாரம், தினசரி, மாத காலண்டர், பிரத்யேக வடிவமைப்புடன் கூடிய காலண்டர், போட்டோ ஃப்ரேம் காலண்டர் என ரூ.20 முதல் ரூ.2,000 வரை 300 வகைகளில் காலண்டர்கள் தயாராகி வருகின்றன.
கடந்த ஆண்டு மக்களவைத் தேர்தல் காரணமாக அரசியல் கட்சியினரின் ஆர்டர்கள் அதிகரிப்பால் ஜனவரி இறுதிவரை காலண்டர் உற்பத்தி நடைபெற்றது. இதனால் 15 சதவீதத்துக்கும் மேல் உற்பத்தி அதிகரித்து, அந்த வகையில், கடந்த ஆண்டு ரூ.400 கோடிக்கு காலண்டர் விற்பனை நடைபெற்றது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு தேர்தல் இல்லாததால் அரசியல் கட்சியினரின் ஆர்டர்கள் வெகுவாகக் குறைந்துள்ளன.
இதுகுறித்து தமிழ்நாடு காலண்டர் உற்பத்தியாளர்கள் சங்க செயலாளர் ஜெய்சங்கர் கூறும்போது, ‘‘வழக்கமான காலண்டர் ஆர்டரில் பெரிய அளவில் பாதிப்பு இல்லை. தற்போது இறுதிகட்ட பணிகள் நடைபெற்று, காலண்டர்கள் விற்பனைக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. பல்வேறு காரணங்களால் 10 சதவீதம் உற்பத்தி குறைந்துள்ளது’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT