Published : 09 Dec 2024 10:48 PM
Last Updated : 09 Dec 2024 10:48 PM
சென்னை: “கெட்டிக்காரன் புளுகு எட்டு நாள் என்பார்கள். பழனிசாமியின் புளுகும் - புளுகுக்குப் புனுகு பூசும் நேர்த்தியும் எட்டு நொடிகூட நிலைப்பதில்லை. அவர் இனிமேலாவது உண்மைகளைப் பேசிப் பழக வேண்டும் என்று அக்கறையோடு கேட்டுக் கொள்கிறேன்” என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது, “மதுரை மக்களுக்கு அதிமுக செய்த துரோகத்துக்கு நாடாளுமன்ற ஆவணங்களே சாட்சி. பூசணிக்காயைக் கட்டுச்சோற்றில் மறைக்கவே முடியாது. மதுரை டங்ஸ்டன் விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் அதிமுக செய்த துரோகம் வீடியோ ஆதாரங்களுடன் அம்பலமானதும், “நான் மசோதாவைத்தான் ஆதரித்தேன், டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை ஆதரிக்கவில்லை” எனத் தம்பிதுரை மழுப்பி இருக்கிறார்.
அதிமுக ஆதரவில் நிறைவேறிய சட்டத் திருத்த மசோதாதான், டங்ஸ்டன் சுரங்கத்தை ஏலம் விடும் அதிகாரத்தை மாநில அரசிடம் இருந்து பிடுங்கி மோடி அரசிடம் கொடுக்கக் காரணமானது. அந்தச் சட்ட மசோதாவைத் திமுக எதிர்த்தது. அதிமுக ஆதரித்தது.
டங்ஸ்டன் உள்ளிட்ட சில அரிய கனிமங்களை ஒன்றிய அரசு மட்டுமே ஏலம் விட முடியும் என்கிற சட்டத் திருத்தத்தைத்தான் தம்பிதுரை ஆதரித்தார். அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கத் தமிழ்நாடு அரசு முன்வரவில்லை. இதே நிலை பல மாநிலங்களில் நீடிப்பதால், ஒன்றிய அரசே ஏலம் விடுவதற்கான திருத்தச் சட்டத்தைத்தான் அதிமுக ஆதரித்தது. இதன் அடிப்படையில்தான் அரிட்டாப்பட்டி சுரங்க ஏலத்தை ஒன்றிய அரசு மேற்கொண்டது.
அதிமுகவின் தொடர் துரோகத்தின் புதிய அத்தியாயம் அம்பலமாகி இருக்கிறது. டெல்லியில் எதிர்க்க வேண்டிய இடத்தில் ஆதரித்துவிட்டு, இங்கே நாடகமாடுவது எடுபடாது. தம்பிதுரை ஆதரித்தது எந்தத் திருத்தத்தை? மாநில உரிமையைப் பறித்து ஒன்றிய அரசுக்கே அதிகாரம் வழங்குவதை அதிமுக ஆதரிப்பது பச்சைத் துரோகம் அல்லவா? இத்தனையும் செய்துவிட்டு, இங்கே நாடகமாடுவது யாரை ஏமாற்ற? கெட்டிக்காரன் புளுகு எட்டு நாள் என்பார்கள். பழனிசாமியின் புளுகும் - புளுகுக்குப் புனுகு பூசும் நேர்த்தியும் எட்டு நொடிகூட நிலைப்பதில்லை. அவர் இனிமேலாவது உண்மைகளைப் பேசிப் பழக வேண்டும் என்று அக்கறையோடு கேட்டுக் கொள்கிறேன்” இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் நாயக்கர்பட்டி கிராமத்தில் இந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட டங்ஸ்டன் சுரங்க உரிமத்தை உடனடியாக ரத்து செய்திடவும், மாநில அரசின் அனுமதியின்றி எந்த சுரங்க உரிமத்தையும் வழங்கக்கூடாது என்று மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் திங்கள்கிழமை அரசின் தனித் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT