Last Updated : 09 Dec, 2024 07:29 PM

 

Published : 09 Dec 2024 07:29 PM
Last Updated : 09 Dec 2024 07:29 PM

தாமிரபரணி ஆற்றின் அகஸ்தியர் அருவி பகுதியில் கழிவுகள் கலக்கிறதா? - ஆய்வுக்கு ஐகோர்ட் உத்தரவு

மதுரை: தாமிரபரணி ஆற்றின் அகஸ்தியர் அருவிப் பகுதியில் கழிவுகள் கலப்பது குறித்து புலிகள் காப்பக இணை இயக்குநர் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நெல்லையில் தாமிரபரணி ஆற்றில் உள்ள பழமையான படித்துறைகள் மற்றும் மண்டபங்களை பழமைமாறாமல் சீரமைக்கவும், தாமிரபரணியில் கழிவுநீர் கலப்பதை தடுக்கவும் கோரி முத்தாலங்குறிச்சியைச் சேர்ந்த எழுத்தாளர் காமராசு, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், புகழேந்தி ஆகியோர் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், அகஸ்தியர் அருவி அருகே உள்ள வனப்பகுதியில் வனத்துறை, மின்துறை குடியிருப்புகள் உள்ளது. அங்குள்ள கழிவுகள் அகஸ்தியர் அருவியில் கலக்கிறது. மேலும் சொரிமுத்து அய்யனார் கோயில் அருகே பக்தர்களால் வெளியேற்றப்படும் கழிவுகளும் அருவியில் கலக்கிறது எனக் கூறப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள், தாமிரபரணி ஆறு - அகஸ்தியர் அருவி பகுதியில் மாசடைந்துள்ளது. இதனால் தாமிரபரணி ஆற்றுத் தண்ணீர் குடிநீருக்கு உகந்தது அல்ல என்று சோதனையில் தகவல் வெளியாகி உள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. அகஸ்தியர் அருவி அருகே தாமிரபரணி ஆற்றில் கழிவுகள் கலப்பது ஏன்? வனப்பகுதியில் இதுபோன்ற நிகழ்வு நடப்பதை எவ்வாறு அனுமதிக்கலாம் எனக் கேள்வி எழுப்பினர்.

பின்னர், இதுகுறித்து களக்காடு முண்டன்துறை புலிகள் காப்பகத்தின் இணை இயக்குநர் ஆய்வு செய்து அறிக்கை சமர்பிக்க வேண்டும். மேலும், நெல்லை மாவட்ட ஆட்சியர், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் ஆகியோர் தாமிரபரணி ஆற்றில் அகஸ்தியர் அருவியில் கழிவுகள் கலந்து நீர் மாசாடைகிறதா? அதை தடுப்பது எப்படி என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x