Published : 09 Dec 2024 06:31 PM
Last Updated : 09 Dec 2024 06:31 PM

“ஆயிரம் கைகள் மறைத்தாலும்...” - விசிக சஸ்பெண்ட் செய்த ஆதவ் அர்ஜுனா ரியாக்‌ஷன்

ஆதவ் அர்ஜுனா | கோப்புப்படம்

சென்னை: “துணைப் பொதுச் செயலாளர் என்ற பொறுப்பு கடிதம் கிடைக்கப் பெற்றபோது என்ன மனநிலையில் இருந்தேனோ, அதே மனநிலையில் இப்போது வெளியாகியுள்ள எனது இடைநீக்கம் குறித்த கடிதத்தையும் எதிர்கொள்கிறேன். அம்பேத்கர், பெரியார், அண்ணா ஆகியோரின் கருத்துகளை உள்வாங்கி அரசியல் பயணத்தைத் துவங்கினேன். அந்தக் கொள்கைகளின் வழியில் எனது பயணம் எப்போதும் தொடரும்” என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “‘அதிகாரத்தை அடைவோம்’ என்று திருமாவளவன் எந்த முழக்கத்தோடு இந்தக் கட்சியைக் கட்டமைத்தாரோ, அந்த அதிகாரத்தை ஒடுக்கப்பட்ட மக்கள் அடைய வேண்டும் என்ற உயர்ந்த நோக்குடனே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியுடன் எனது பயணத்தைக் கடந்த ஜனவரி மாதம் ஆரம்பித்தேன். எனக்கு அளிக்கப்பட்ட பொறுப்பினை உணர்ந்து கொள்கை உறுதிப்பாட்டுடன் கட்சியை அடுத்தகட்டத்துக்கு வளர்த்தெடுக்கும் பணியினையே நான் முழுமையாக மேற்கொண்டேன்.

கட்சியின் பிரச்சார வியூகத்தையும் கொள்கை வழியிலேயே கட்டமைத்தேன். நான் கட்சியில் என்ன பணி செய்தேன் என்பதை அடிமட்ட தொண்டர்களாய் களமாடும் தோழர்கள் நன்கு அறிந்திருப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. அந்த தொண்டர்களின் குரலாக நான் எப்போதும் இருப்பேன். தலைவரின் கையெழுத்திட்ட துணைப் பொதுச் செயலாளர் என்கிற பொறுப்பு கடிதம் கிடைக்கப்பெற்ற போது என்ன மனநிலையில் இருந்தேனோ, அதே மனநிலையில் இப்போது தலைவரின் கையெழுத்துடன் வெளியாகியுள்ள எனது இடைநீக்கம் குறித்த கடிதத்தையும் எதிர்கொள்கிறேன்.

தலித் மற்றும் பிற ஒடுக்கப்பட்ட மக்களுக்கான ‘ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு’ என்ற முழக்கத்தை அந்த மக்களுக்கான அதிகாரம் கிடைக்கும் வரை தொடர்ந்து முழங்கிக் கொண்டு இருப்பதே நேர்மையான மக்கள் அரசியலாக இருக்கும்’ என்ற எனது உள்ளார்ந்த எண்ணத்தை தோழர்கள் மத்தியில் இப்போதும் பதிவு செய்யக் கடமைப்பட்டுள்ளேன். குறிப்பாக, ‘ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அதிகாரம் கிடைத்துவிடக் கூடாது என்று நினைக்கும் மனநிலைதான் மன்னர் பரம்பரைக்கான மனநிலை’ என்பதை அழுத்தமாகப் பதிவு செய்ய விரும்புகிறேன்.

இந்த மக்களுக்கான அதிகாரத்தைத் தட்டிப்பறிக்கும் அந்த மனநிலையை எதிர்காலத்தில் தேர்தல் பிரச்சாரத்தின் மூலம் உடைத்தெறிந்து, ஜனநாயக வழியில் அதைப் பெறும் போராட்டத்தில் பங்கெடுக்கும் பணியில் தீவிரமாக ஈடுபடுவேன். கருத்தியல் வழியாகத் தோன்றும் தலைவர்களே மக்களுக்கான ஆட்சியாளர்களாக விளங்க முடியுமே தவிர, பிறப்பால் அல்ல என்ற கொள்கையில் உறுதியாகப் பயணிக்கிறேன். மக்களே ஜனநாயகத்தின் நீதிபதிகள்.

கருத்தியல் பேசிக்கொண்டு ஊழலை உருவாக்கும் போலி கருத்தியல்வாதிகளை மக்கள் மத்தியில் அடையாளப்படுத்திக் காட்டுவோம். மத பெரும்பான்மைவாதம், சாதி ஆதிக்கம், பெண்ணடிமைத்தனம், சிறுபான்மையினருக்கு எதிரான அச்சுறுத்தல், எளிய மக்களுக்கு எதிரான ஆதிக்க மனநிலை என இந்த சமூகத்தில் தொடர்ந்து நடந்துவரும் அநீதிகளுக்கு எதிரான என்னுடைய குரல் சமரசமில்லாமல் ஒலித்துக்கொண்டே இருக்கும்.

அம்பேத்கர், பெரியார், அண்ணா ஆகியோரின் கருத்துகளை உள்வாங்கி அரசியல் பயணத்தைத் துவங்கினேன். அந்தக் கொள்கைகளின் வழியில் எனது பயணம் எப்போதும் தொடரும். அம்பேத்கர் சுட்டிக் காட்டியது போல், ‘சிந்திப்பதற்கான சுதந்திரமே, உண்மையான சுதந்திரம்’ என்பதில் உறுதியான நம்பிக்கை கொண்டு புதிய ஜனநாயகத்தை உருவாக்குவோம். எனது சிறுவயதிலிருந்து ஏமாற்றம், தோல்விகள், இழப்புகள் எனக் காலம் தந்த நெருக்கடிகளே என்னை உத்வேகத்துடன் பயணிக்கச் செய்தன. கட்சித் தலைமையின் இந்த நடவடிக்கையினையும் அந்த காலத்தின் கரங்களில் ஒப்படைக்கிறேன். ஆயிரம் கைகள் மறைத்தாலும்… ஆதவ(ன்) மறைவதில்லை!” என்று அவர் கூறியுள்ளார். யார் இந்த ஆதவ் அர்ஜுனா? - வீடியோ பதிவு:

6 மாதம் சஸ்பெண்ட்: முன்னதாக, விசிக துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனாவை கட்சியிலிருந்து ஆறுமாத காலத்துக்கு இடைநீக்கம் செய்வதாக அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அறிவித்துள்ளார். மேலும், கட்சியின் நலன்களை முன்னிறுத்தி, கட்சித் தலைவர் மற்றும் பொதுச் செயலாளர்கள் ஆகிய மூவர் உள்ளடங்கிய தலைமை நிர்வாகக் குழுவில், ஆதவ் அர்ஜுனா மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்வதென தீர்மானிக்கப்பட்டதன் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக திருமாவளவன் குறிப்பிட்டுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், “நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற ஆதவ் அர்ஜுனாவிடம், அரசியல் எதுவும் பேச வேண்டாம். அம்பேத்கர் குறித்தும், நூல் உருவாக்கத்தில் அவருடைய பங்கு குறித்தும் பேசுமாறு, சில வழிகாட்டுதல்களைத் தெரிவித்தேன். அதைமீறி, அவரது பேச்சு பல்வேறு சர்ச்சைகளுக்கு இடம் கொடுத்தது. விசிக-வின் மீதான நம்பகத்தன்மையை நொறுக்கும் அளவுக்கு அது அமைந்துவிட்டது. உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டியதன் தேவை அமைந்ததன் அடிப்படையில் கட்சியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, ஆதவ் அர்ஜுனா மீதான நடவடிக்கை எடுக்கப்பட்டது” என்று அவர் விளக்கம் அளித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x