Published : 23 Aug 2014 01:42 PM
Last Updated : 23 Aug 2014 01:42 PM
சென்னை மாநகரம் வந்தாரை வாழவைக்கும் நகரமாக பல தசாப்தங்களாக திகழ்ந்து வருகிறது. சென்னை என்றாலே 14 மாடி எல்.ஐ.சி. கட்டிடம்தான் என்று சினிமாக்களில் காட்டிய காலம் போய், டைடல் பார்க் பக்கம் சென்று, அதையும் தாண்டி ஓ.எம்.ஆரி.ல் 30 அடுக்கு, 40 அடுக்கு, 50 அடுக்குமாடிக் கட்டிடங்கள் என கால ஓட்டத்துக்கு ஏற்ப தனது முகத்தை தேவைக்கேற்றவாறு மாற்றி வந்துள்ளது சென்னை மாநகரம்.
பன்முகத்தன்மை கொண்ட இந்நகரத்தை பலவித கலவைகளைக் கொண்ட கூட்டாஞ்சோறு எனலாம். ஆந்திராவின் தென்மாவட்டங்களுக்கு அருகில் அமைந்திருப்பதாலும், முன்பு ஒன்றுபட்ட சென்னை மாகாணமாக இருந்ததாலும், தெலுங்கர்கள், கன்னடர்கள், மலையாளிகள் என்று பல்வேறு தரப்பு மக்களும் பரவலாக வசிக்கிறார்கள். சவுகார்பேட்டையைப் பற்றி விவரிக்கவே தேவையில்லை. வடஇந்தியர்கள், தெலுங்கு பேசும் மக்கள், இஸ்லாமியர்கள் உள்ளிட்ட பலதரப்பட்ட மக்களைக் கொண்டு விளங்கும் இதனை ‘பாரத விலாஸ்’ என்றே கூறலாம்.
கலாச்சாரத் தலைநகரம்
இந்தியாவின் கலாச்சாரத் தலைநகராகவும், கட்டுப்பெட்டி யான நகரம் என்றும் நம் சென்னை பெயரெடுத்துள்ளது. டெல்லி, மும்பை, பெங்களூரு போன்ற மாநகரங்களில் பெண்கள் சர்வசாதாரணமாக ஷாட்ஸ் அணிந்து நடமாடுவதையும், பொதுஇடங்களில் புகைப்பதையும் பார்க்கமுடியும். சென்னையில் அது கொஞ்சம் குறைவாகவே இருக்கிறது.
தமிழகத்தில் வேறெந்த நகரிலும் இல்லாத வகையில் பாரம்பரிய கட்டிடங்கள் நிறைந்த நகரமாக சென்னை விளங்கி வருகிறது.
சாமானியனுக்கும் சென்னை தினம்
சென்னை தினத்தை சிலர் கோலாகலமாக கொண்டாடும் அதேநேரத்தில், இங்கு வசிக்கும் அனைத்துத் தரப்பு மக்களும் அதையெண்ணி மகிழ்ச்சியடையும் நாள் வராதா என்றும் எண்ணத் தோன்றுகிறது. மாடமாளிகைகள் நிறைந்துள்ள சென்னை நகரில் இன்றும் படுப்பதற்குகூட இடமில்லாமல் ரோட்டோரங்களில் வசிக்கும் ஏராளமான குடும்பங்கள் இருக்கின்றன. சென்னை மாநகராட்சி, இரவுநேர தங்குமிடங்களைக் கட்டினாலும், அது சில நூறு பேருக்கு மட்டுமே புகலிடம் கொடுப்பதாக உள்ளது. எல்லோரும் நிம்மதியாக படுத்துறங்கும் வகையில் ‘தனிவளை’ கிடைக்கும் நாள் எதுவோ?
சென்னைக்கு பல பெருமைகள் இருந்தாலும் கூடவே சாக்கடை புரண்டோடும் கூவம், குண்டும், குழியுமான சாலைகள், அவற்றில் தேங்கும் நீரில் உற்பத்தியாகும் கொசுக் கூட்டங்கள், ஆக்கிரமிக்கப்பட்ட நடைபாதைகள் ஆகியவையும் நினைவுக்கு வருகிறது. இவையெல்லாம் மறைந்து, அனைத்துப் பகுதிகளுமே நிம்மதியாக வாழக்கூடிய தகுதிகளைப் பெற்று சிங்காரச் சென்னையாக மாறும்போதுதான் சாமானியனும், உண்மையான மகிழ்ச்சியுடன் சென்னை தினத்தைக் கொண்டாடும் நிலை உருவாகும் என்பதே நிதர்சனமான உண்மை.
மாடமாளிகைகள் நிறைந்துள்ள சென்னை நகரில் இன்றும் படுப்பதற்குகூட இடமில்லாமல் ரோட்டோரங்களில் வசிக்கும் ஏராளமான குடும்பங்கள் இருக்கின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT