Published : 09 Dec 2024 04:46 PM
Last Updated : 09 Dec 2024 04:46 PM
சென்னை: ஜாமீன் கிடைத்தும் பிணைத்தொகை செலுத்த வழியின்றி சிறைகளில் இருக்கும் கைதிகளை வெளியே கொண்டுவர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவுக்கு உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவி்ட்டுள்ளனர்.
குற்ற வழக்குகளில் கைதான 800-க்கும் மேற்பட்டவர்கள் ஜாமீன் கிடைத்தும் பிணைத்தொகை உள்ளிட்ட நீதிமன்றங்கள் விதிக்கும் நிபந்தனைகளை பூர்த்தி செய்ய முடியாமல் சிறைகளில் இருந்து வெளியே வர முடியாமல் இருப்பதாக வெளியான செய்தியின் அடிப்படையில் சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரித்தது. இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், எம்.ஜோதிராமன் ஆகியோர் அடங்கிய அமர்வு, ஜாமீன் கிடைத்தும் தமிழகம் முழுவதும் வெளியே வர முடியாமல் தவிக்கும் கைதிகள் குறித்த விவரங்களை தாக்கல் செய்ய அரசு தரப்புக்கு உத்தரவிட்டிருந்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கு மீண்டும் இதே அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.முனியப்பராஜ், "தமிழகம் முழுவதும் ஜாமீன் கிடைத்தும் பிணைத் தொகையை செலுத்த முடியாமல் 22 தண்டனை கைதிகளும், 153 விசாரணை கைதிகளும் வெளியே வர முடியாமல் சிறைக்குள்ளேயே இருந்து வருகின்றனர். மாவட்ட நீதிமன்றங்களில் இருந்து ஜாமீன் உத்தரவுகள் சிறைகளுக்கு தாமதமாக அனுப்பப்படுவதும் ஒரு காரணம். மத்திய அரசின் திட்டத்தை பின்பற்றி ஏழை, எளிய கைதிகளுக்கு நிதியுதவி செய்யும் வகையில் தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது” என்றார்.
அதையடுத்து நீதிபதிகள், “ஜாமீன் கிடைத்த 7 நாட்களில் கைதிகள் விடுதலையாவதை உறுதி செய்யும் வகையில் உரிய நடவடிக்கைகளை மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழு எடுக்க வேண்டும்” என அறிவுறுத்தினர். மேலும், “மாநிலம் முழுவதும் 800-க்கும் மேற்பட்ட கைதிகள், ஜாமீன் கிடைத்தும் சிறைகளில் இருந்து வெளியே வர முடியாமல் உள்ளதாக கூறப்படும் நிலையில், கைதிகளின் எண்ணிக்கை, அவர்களின் பின்னணி குறித்த விவரங்களை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மூலமாக சேகரித்து, அவர்களை ஜாமீனில் விடுவிக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறி்த்தும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் மற்றும் மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு உறுப்பினர் செயலருக்கு உத்தரவிட்டுள்ளனர்.
மேலும், அரசின் உதவித் திட்டங்கள் மூலமாக பயன் அடைந்த கைதிகள் குறித்து விவரங்களை தமிழக அரசும் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை மூன்று வாரங்களுக்கு தள்ளி வைத்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT