Published : 09 Dec 2024 11:59 AM
Last Updated : 09 Dec 2024 11:59 AM
சென்னை: விசிக துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனாவை கட்சியிலிருந்து ஆறுமாத காலத்துக்கு இடைநீக்கம் செய்வதாக அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அறிவித்துள்ளார். மேலும், கட்சியின் நலன்களை முன்னிறுத்தி, கட்சித் தலைவர் மற்றும் பொதுச் செயலாளர்கள் ஆகிய மூவர் உள்ளடங்கிய தலைமை நிர்வாகக் குழுவில், ஆதவ் அர்ஜுனா மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்வதென தீர்மானிக்கப்பட்டதன் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக திருமாவளவன் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக அண்மையில் நடந்த அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் ஆதவ் அர்ஜுனா பேசிய கருத்துகள் தமிழக அரசியல் களத்தில் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் திருமாவளவன் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார். “தமிழகத்தில் கூட்டணி ஆட்சியை உருவாக்க வேண்டும். அதில் பட்டியலின மக்கள் பங்கேற்க வேண்டும். இங்கே மன்னராட்சிதான் நிலவுகிறது. கேள்வி கேட்டால் உடனே சங்கி என்கிறார்கள். தமிழகத்தில் மன்னராட்சிக்கு இடமில்லை. 2026-ல் மன்னராட்சி முழுமையாக ஒழிக்கப்படும்” என ஆதவ் அர்ஜுனா பேசியிருந்தார். மேலும் வாசிக்க >> “2026-ல் மன்னராட்சி ஒழிக்கப்படும்...” - விஜய் மேடையில் விசிக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா பேச்சு
இந்நிலையில், விசிக துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனாவை கட்சியிலிருந்து ஆறுமாத காலத்துக்கு இடைநீக்கம் செய்யப்படுவதாக அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கட்சியின் துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா அண்மைக் காலமாக கட்சியின் நலன்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறார் என்பது தலைமை நிர்வாகத்தின் கவனத்துக்குத் தெரிய வந்தது.
இது குறித்து கடந்த 07-12-2024 அன்று கட்சியின் பொதுச் செயலாளர்கள் உள்ளிட்ட முன்னணித் தோழர்களுடன் கலந்தாய்வு செய்யப்பட்டது. கட்சித் தலைமையின் அறிவுறுத்தல்களையும் மீறி, தொடர்ச்சியாக அவர் எதிர்மறையாக செயல்பட்டு வருவதும்; அத்தகைய செயல்பாடுகள், மேலோட்டமாக நோக்கினால் கட்சியின் நலன் மற்றும் அதிகார வலிமைக்கானதாகத் தோன்றினாலும்; அவை கட்சி மற்றும் தலைமையின் மீதான நன்மதிப்பையும் நம்பகத் தன்மையையும் கேள்விக்குள்ளாக்கும் வகையில், பொதுவெளியில் கடுமையான விமர்சனங்களை உருவாக்கியிருக்கிறது.
இத்தகைய போக்குகள், கட்சிப் பொறுப்பாளர்களிடையே நிலவும் கட்டுக்கோப்பைச் சீர்குலைக்கும் வகையில், கட்சிக்குள்ளேயே ஒரு எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன், கட்சியினருக்கு இது ஒரு "தவறான முன்மாதிரியாக" அமைந்து விடும் என்கிற சூழலையும் உருவாக்கியுள்ளது.
இத்தகைய சூழலைக் கருத்தில் கொண்டு, கட்சியின் நலன்களை முன்னிறுத்தி, கட்சித் தலைவர் மற்றும் பொதுச்செயலாளர்கள் ஆகிய மூவர் உள்ளடங்கிய தலைமை நிர்வாகக் குழுவில், ஆதவ் அர்ஜுனா மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்வதென தீர்மானிக்கப்பட்டது. அதன்படி, ஆதவ் அர்ஜூனா கட்சியிலிருந்து ஆறுமாத காலத்துக்கு இடைநீக்கம் செய்யப்படுகிறார்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT