Published : 09 Dec 2024 11:34 AM
Last Updated : 09 Dec 2024 11:34 AM
சென்னை: தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் இன்று (திங்கள்கிழமை) காலை 9.30 மணிக்கு தொடங்கியது. அவை கூடியதும் மறைந்த பேரவை உறுப்பினர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. பேரவையில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு முதல் வரிசையில் மூன்றாவது இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது. முதல்வர் மற்றும் அமைச்சர் துரைமுருகனை அடுத்து அவர் அமர்ந்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில், துறை வாரியாக மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் கடந்த ஜூன் 20 முதல் 29-ம் தேதி வரை 10 நாட்கள் நடத்தப்பட்டது. பேரவை விதிகளின்படி, ஒரு கூட்டம் முடிந்தால், அடுத்த 6 மாதங்களில் அடுத்த கூட்டம் நடத்த வேண்டும். அதன்படி, சட்டப்பேரவை கூட்டம் இன்று (டிச.9) காலை கூடியது.
முதலில், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர்கள், பிரமுகர்களுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. கோதண்டம், சுப்புராயர், முகமது கனி, தொழிலதிபர் ரத்தன் டாடா, சீதாராம் யெச்சூரி, முரசொலி செல்வம் உள்ளிட்டோருக்கு சட்டப்பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
மதுரை மாவட்டத்தில் மாநில அரசின் அனுமதி பெறாமல் மத்திய அரசால் டங்ஸ்டன் சுரங்க உரிமம் வழங்கப்பட்டதை ரத்து செய்ய வலியுறுத்தி அரசினர் தனி தீர்மானத்தை முதல்வர் ஸ்டாலின் கொண்டு வருகிறார். இந்த தீர்மானத்தின்மீது சட்டப்பேரவை கட்சி தலைவர்கள் பேசிய பிறகு, தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளது.
3வது வரிசையில் இருந்து 3-வது இருக்கைக்கு.... தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு சட்டப்பேரவையில் முதல் வரிசையில் மூன்றாவது இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின், அவை முன்னவர் துரைமுருகனுக்கு அடுத்தப்படியாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு 3-வது இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, திருவல்லிக்கேணி-சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ-வாக வெற்றிபெற்று சட்டப்பேரவைக்கு வந்த உதயநிதிக்கு, 3-வது வரிசையில் இருக்கை ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. அதன்பின்னர், தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்றபோது, அவருக்கு முதல் வரிசையில் 10-வது இருக்கை ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், துணை முதல்வராக இருக்கும் அவருக்கு தற்போது பேரவையில் முதல் வரிசையில், மூன்றாவது இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT