Published : 09 Dec 2024 11:00 AM
Last Updated : 09 Dec 2024 11:00 AM
சென்னை: தெற்கு ரயில்வேயில் சென்னை உட்பட 6 ரயில்வே கோட்டங்களில் நடைபெற்ற தொழிற்சங்க அங்கீகாரத் தேர்தலில், தபால் ஓட்டுகளை தவிர்த்து, 88.91 சதவீதம் ஓட்டுக்கள் பதிவாகியுள்ளன. இத்தேர்தல் முடிவு வரும் 12-ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.
ரயில்வேயில் முதல் முறையாக 2007-ம் ஆண்டில் தொழிற்சங்க அங்கீகாரத் தேர்தல் நடைபெற்றது. அத்தேர்தலில் வெற்றிபெற்று அங்கீகாரம் பெற்ற தொழிற்சங்கங்கள் ரயில்வே நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தையில் பங்கேற்றன.
கடந்த 2013-ல் நடைபெற்ற தேர்தலில், தெற்கு ரயில்வே மஸ்தூர் யூனியன் (எஸ்ஆர்எம்யு) வெற்றி பெற்றது. இதன்பிறகு, பல காரணங்களால் தொழிற்சங்க அங்கீகாரத் தேர்தல் நடைபெறாமல் இருந்தது. மீண்டும் அங்கீகாரத் தேர்தல் நடத்த தொழிற்சங்கங்கள் வலியுறுத்தி வந்தன.
இதனைதொடர்ந்து, ரயில்வே தொழிங்சங்க அங்கீகாரத் தேர்தல் டிச.4, 5, 6 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. தெற்கு ரயில்வேயில் தட்ஷிண ரயில்வே எம்ப்ளாயிஸ் யூனியன் (டிஆர்இயு), தட்ஷின ரயில்வே கார்மிக் சங்கம், ரயில் மஸ்தூர் யூனியன், தெற்கு ரயில்வே ஊழியர்கள் சங்க், தெற்கு ரயில்வே மஸ்தூர் யூனியன் (எஸ்ஆர்எம்யு) ஆகிய தொழிங்சங்கங்கள் தேர்தலில் போட்டியிட்டன.
தெற்கு ரயில்வேயில் சென்னை, திருச்சி, மதுரை உட்பட 6 ரயில்வே கோட்டங்களில் 140 வாக்குசாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. பெரும்பாலான இடங்களில் ரயில்வே ஊழியர்கள் ஆர்வமாக வாக்களித்தனர்.
ஓரிரு இடங்களை தவிர, பெரும்பாலான இடங்களிலும் வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்றது. இத்தேர்தலில் தபால் ஓட்டுகள் தவிர்த்து 88.91 சதவீதம் ஓட்டு பதிவாகியுள்ள தாக ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஓட்டுகள் எண்ணிக்கை மற்றும் முடிவுகள் அறிவிப்பு டிச.12-ம் தேதி நடைபெறவுள்ளது.
இதுகுறித்து ரயில்வே தொழிற்சங்க நிர்வாகி ஒருவர் கூறியதாவது: தெற்கு ரயில்வேயில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 76,653. இதில் தபால் ஓட்டுகள் தவிர்த்து, 68,153 பேர் வாக்களித்துள்ளனர். வாக்கு எண்ணிக்கை வரும் 12-ம் தேதி எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்பட உள்ளது. பல இடங்களில் எஸ்ஆர்எம்யு மற்றும் டிஆர்இயு இடையே கடுமையான போட்டி நிலவியது. இருப்பினும், முடிவுகள் என்ன என்பது விரைவில் தெரியவரும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்தமுறை தேர்தலில், டிஆர்இயு வெற்றிபெற்று அங்கீகாரம் பெறும் என்றும் எஸ்ஆர்எம்யு அமோக வெற்றிபெறும் என்றும் அந்தந்த தொழிற்சங்கத்தினர் தெரிவித்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT