Published : 09 Dec 2024 10:31 AM
Last Updated : 09 Dec 2024 10:31 AM
சென்னை: அனைத்து மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கும் பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
சர்க்கரை நோய் மற்றும் உயர் ரத்த அழுத்த பாதிப்புகளை சமூகத்தில் கண்டறிந்து சிகிச்சை அளிப்பதற்காக பல்வேறு வழிகாட்டுதல்களும், செயல் திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. அதற்கான வழிமுறைகள் சூழலுக்கேற்ப திருத்தப்பட்டு வருகின்றன. மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் உள்ளிட்ட அனைத்து சுகாதார நலத்திட்டங்களில் பங்கேற்பவர்கள் மற்றும் சுகாதார நிலைய மருத்துவப் பணியாளர்களுக்கு அதற்கான தகவல்கள் பகிரப்பட்டுள்ளன. இருந்தபோதிலும், புதிய வழிமுறைகளுக்கு மாற்றாக பழைய நடைமுறைகளே பல இடங்களில் பின்பற்றப்பட்டு வருவது கண்டறியப்பட்டுள்ளது.
சுகாதாரத் துறையினரிடையே உரிய விழிப்புணர்வு இல்லாததே அதற்கு காரணம் என தெரியவந்தது. அதுமட்டுமல்லாது புதிய வழிமுறைகளை ஒருங்கிணைந்த ஒரே விளக்கப் படமாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது. அதனடிப்படையில் சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தத்துக்கான சிகிச்சை மற்றும் பரிசோதனை வழிமுறைகள் ஒரே விளக்கப்படமாக தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.
அதனை அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், மருத்துவ மையங்களிலும் மருத்துவப் பணியாளர்களுக்கு தெளிவாக தெரியும் வகையில் காட்சிப்படுத்த வேண்டும். அதுமட்டுமல்லாது, விளக்கப்படத்தை ஏ3 அளவில் அச்சு பிரதியெடுத்து லேமினேசன் செய்து தேவைப்படும் போது அதனை சரிபார்த்துக் கொள்ள வகை செய்ய வேண்டும். இந்த அறிவுறுத்தல்களை வரும் 15-ம் தேதிக்குள் செயல்படுத்தி அதற்கான அறிக்கையை உரிய அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT