Published : 09 Dec 2024 09:41 AM
Last Updated : 09 Dec 2024 09:41 AM
சென்னை: மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் முடிவைக் கைவிடுவது குறித்து மத்திய அமைச்சர் பரிசீலனை செய்வதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இன்று தொடங்கியுள்ள தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில், மதுரை மாவட்டத்தில் மாநில அரசின் அனுமதி பெறாமல் மத்திய அரசால் டங்ஸ்டன் சுரங்க உரிமம் வழங்கப்பட்டதை ரத்து செய்ய வலியுறுத்தி அரசினர் தனி தீர்மானத்தை முதல்வர் ஸ்டாலின் கொண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்படும் சூழலில் அண்ணாமலையில் இந்த ட்வீட் கவனம் பெறுகிறது.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “திமுக அரசின் தவறான, முழுமையற்ற தகவல்களால், மதுரை அரிட்டாபட்டி, நாயக்கர்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க, பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் சூழல் உருவாகியுள்ளது.
இது தொடர்பாக, மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் கிஷன் ரெட்டிக்கு கடிதம் எழுதியதோடு மட்டுமல்லாமல், மதுரை அரிட்டாபட்டி, நாயக்கர்பட்டி, கவட்டையம்பட்டி, எட்டிமங்கலம், ஏ.வல்லாளப்பட்டி, அரிட்டாபட்டி, கிடாரிப்பட்டி, நரசிங்கம்பட்டி உள்ளிட்ட கிராமங்கள் உள்ள பகுதிகளில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க, பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிப்பது குறித்து, தொலைபேசியிலும் அழைத்து, டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் முடிவைக் கைவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன்.
மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் கிஷன் ரெட்டி, டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் முடிவைக் கைவிடுவதைக் குறித்துப் பரிசீலிக்கிறேன் என்று உறுதி அளித்துள்ளார்.
மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பது குறித்து திமுக அரசு தெரிவித்த தகவல்களின் அடிப்படையில் மட்டுமே, இந்தச் சுரங்கம் அமைப்பது குறித்த பணிகள் மேற்கொள்ளப்பட்டன. தற்போது, பொதுமக்கள் எதிர்ப்பை அடுத்து, திமுக அரசு நாடகமாடிக் கொண்டிருக்கிறது.
பிரதமர் மோடி நல்லாட்சியில், விவசாயிகள் நலனுக்கான திட்டங்கள் மட்டுமே செயல்படுத்தப்பட்டிருக்கின்றன. விவசாயிகள் நலனுக்கு எதிரான எந்தச் செயல்பாடுகளையும், நமது பிரதமர் மேற்கொள்ள மாட்டார் என்பது உறுதி.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT