Published : 09 Dec 2024 07:53 AM
Last Updated : 09 Dec 2024 07:53 AM

திருவண்ணாமலையில் மண் சரிவால் 7 பேர் உயிரிழந்த மகா தீப மலையில் புவியியல், சுரங்கத் துறை வல்லுநர் குழுவினர் ஆய்வு

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் மண் சரிவு ஏற்பட்ட மகா தீப மலையில் புவியியல் மற்றும் சுரங்கத் துறை வல்லுநர் குழுவினர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.

திருவண்ணாமலையில் கடந்த 1-ம் தேதி கனமழை காரணமாக மகா தீபம் ஏற்றப்படும் மலையில் மண்சரிவு ஏற்பட்டு, 7 பேர் உயிரிழந்தனர். மேலும், 6-க்கும் மேற்பட்ட இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. தீபத்தைத் தரிசனம் செய்ய பக்தர்கள் மலையேறும் பாதையிலும் மண் சரிவு ஏற்பட்டுள்ளது.

இதனால், கார்த்திகை தீபத் திருவிழாவின்போது 2,668 அடி உயரமுள்ள அண்ணாமலை உச்சியில் மகா தீபத்தைத் தரிசிக்க செல்லும் பக்தர்களுக்கு ஆபத்து ஏற்படலாம் என்பதால், 2 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்ற அறிவிப்பை மறுபர சீலனை செய்யுமாறு கோரிக்கை வலுத்துள்ளது. இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் கடந்த 4-ம் தேதி செய்தி வெளியானது.

8 பேர் கொண்ட குழு: இதன் எதிரொலியாக, மகா தீப மலையில் ஆய்வு செய்ய சென்னை அண்ணா பல்கலை. மண் இயக்கவியல் அடித்தள பொறியியல் துறைத் தலைவர் பிரேமலதா, புவியியல் மற்றும் சுரங்கத் துறை மண்டல இணை இயக்குநர் ஆறுமுக நயினார், இந்திய புவியியல் ஆய்வுத் துறை முதுநிலை புவியியல் வல்லுநர் ஜெயபால், புவியியல் மற்றும் சுரங்கத் துறை உதவி இயக்குநர்கள் லட்சுமி ராம் பிரசாத், சுரேஷ்குமார், அருள்முருகன், தமிழரசன் உட்பட 8 பேர் கொண்ட வல்லுநர் குழுவைத் தமிழக அரசு அமைத்துள்ளது.

இக்குழுவினர் நேற்று காலை மலையேறும் குழு மற்றும் பாதுகாப்புக் குழுவினருடன், மகா தீப மலையில் ஆய்வு செய்தனர். அங்குள்ள மண், சிறிய கற்கள் மற்றும் பாறைகளை ஆய்வுக்கு உட்படுத்தி, மாதிரிகளையும் சேகரித்துள்ளனர்.

வல்லுநர் குழுவுடன் சென்ற ஆட்சியர் தெ.பாஸ்கரபாண்டியன் கூறும்போது, “வல்லுநர் குழு, தங்களது ஆய்வறிக்கையை தமிழக அரசிடம் சமர்ப்பிக்கும். அதனடிப்படையில் கார்த்திகை தீபத் திருநாளன்று. மகா தீப மலை மீது பக்தர்கள் ஏறுவதற்கு அனுமதி அளிப்பது குறித்து அரசு முடிவெடுக்கும்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x