Published : 09 Dec 2024 06:30 AM
Last Updated : 09 Dec 2024 06:30 AM
சென்னை: மனநலம் பாதிக்கப்பட்ட மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தவர்களை விடுதலை செய்த காவல் துறைக்கு அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: சென்னை அயனாவரம் பகுதியை சேர்ந்த மனநலம் குன்றிய கல்லூரி மாணவியை 10-க்கும் மேற்பட்டோர் தொடர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய செய்தி அதிர்ச்சிஅளிக்கிறது. இது சம்பந்தமாக பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை புகார் அளித்த நிலையில், வழக்கம்போல் காவல்துறை மிக அலட்சிய போக்குடன் செயல்பட்டுள்ளது. புகாரளித்தவர்கள் அலைக்கழிக்கப்பட்டுள்ளனர்.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து புகார் வந்தால், அதன் தீவிரத்தன்மையை உணர்ந்து முறையாக விசாரிக்க வேண்டும் என்பதுகூட காவல் துறைக்கு தெரியாதா? பெண்களுக்கு எதிரான வழக்குகளை மெத்தனப் போக்குடன் கையாளும் திமுக அரசுக்குஎனது கண்டனங்கள்.
அண்ணாமலை: சென்னை அயனாவரம் பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவியை 7 பேர் கொண்ட கும்பல் கடந்த பல மாதங்களாக பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய செய்தி மிகுந்தஅதிர்ச்சி அளிக்கிறது. இதுகுறித்து மாணவியின் தந்தை, அயனாவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தும், குற்றவாளிகளுக்கு எச்சரிக்கை மட்டும் அளித்து, விடுதலை செய்திருக்கின்றனர். பாலியல் வன்முறை குறித்த புகாருக்கு உள்ளானவர்களை விடுதலை செய்யும் அதிகாரத்தை காவல் துறைக்கு யார் கொடுத்தது? இந்த சம்பவம் குறித்து முதல்வர் எதுவும் தெரிவிக்காதது ஏன்? இதற்கு முதல்வர் விளக்கமளிக்க வேண்டும்.
பிரேமலதா: பாலியல் குற்றவாளிகளை விடுவிக்கும் அதிகாரத்தை காவல் துறைக்கு யார் கொடுத்தது? விலங்குகளைவிட மிகவும் கீழ்த்தரமாக, மனநலம் பாதிக்கப்பட்ட மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தகயவர்களை இந்த நாடும் மன்னிக்காது, தமிழக மக்களும் மன்னிக்க மாட்டார்கள்.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் மீது பாலியல் வன் கொடுமையில் ஈடுபட்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து, சிறையில் அடைத்து அவர்களுக்கு கடுமையான தண்டனை பெற்றுத்தர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது தமிழக அரசின் கடமை. ஆனால், குற்றவாளிகளை எச்சரித்து அனுப்பிய காவல்துறையினரின் நடவடிக்கைகள் முறையானதாக இல்லை. காவல்துறையினர் மீது தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: மனநலம் பாதிக்கப்பட்ட மாணவி ஒருவரை ஒராண்டுக்கும் மேலாக அடையாளம் தெரியாத கும்பல் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியிருப்பது, தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் சர்வ சாதாரணமாகி வருவதையே வெளிப்படுத்துகிறது. கும்பலை சேர்ந்த அனைவரையும் கைது செய்து கடுமையான தண்டனையை பெற்றுத்தர வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT