Published : 09 Dec 2024 06:10 AM
Last Updated : 09 Dec 2024 06:10 AM
சென்னை: மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டத்தில், முதல் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயிலின் முக்கிய சோதனைகள் இந்த மாதம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு மார்ச்சில் பிரதான சோதனை ஓட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்று மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், ரூ.63,246 கோடி மதிப்பில் 116.1 கி.மீ. தூரத்துக்கு 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. இந்த வழித்தடங்களில் ஓட்டுநர் இல்லாத 138 ரயில்களை இயக்க மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஒவ்வொரு ரயிலிலும் 3 பெட்டிகள் இருக்கும். இதில் முதல்கட்டமாக, 36 ரயில்களை ரூ.1,215.92 கோடி மதிப்பில் தயாரித்து வழங்க, அல்ஸ்டாம் டிரான்ஸ்போர்ட் இந்தியா நிறுவனத்துக்கு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஒப்பந்தம் வழங்கியது.
இந்த வகையை சேர்ந்த முதல் மெட்ரோ ரயில் தயாரிக்கும் பணி, ஆந்திர மாநிலம் ஸ்ரீசிட்டியில் கடந்த பிப்.8-ம் தேதி தொடங்கி, செப்.22-ம் தேதி நிறைவடைந்தது. தொடர்ந்து, சோதனை தடத்துக்கு இந்த ரயில் மாற்றப்பட்டு, பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டது. இந்த ரயில் கடந்த அக்டோபரில் சென்னைக்கு வந்தடைந்தது. இந்த ரயில் தற்போது நிலையான சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், முதல் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயிலின் முக்கிய சோதனைகளை இந்த மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:
ஓட்டுநர் இல்லாத முதல் ரயில், 2 மாதங்களுக்கு முன்பு பூந்தமல்லியில் உள்ள பணிமனைக்கு கொண்டு வரப்பட்டது. இந்த ரயிலின் பல்வேறு அமைப்புகளின் செயல்பாட்டை சரிபார்க்க தற்போது சோதனை செய்யப்படுகிறது. அனைத்து பரிசோதனைகளையும் முடித்து, முதல் ஓட்டுநர் இல்லாத ரயிலை மெட்ரோ ரயில் நிறுவனத்திடம் அல்ஸ்டாம் நிறுவனம் இந்த மாதம் ஒப்படைக்க உள்ளது. தொடர்ந்து, பல்வேறு முக்கிய சோதனைகள் நடத்தப்படும்.
இதையடுத்து, சோதனை ஓட்டத்தை தொடங்கவும், தொடர்ந்து டைனமிக் சோதனைகளை அடுத்த ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரலில் தொடங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. ரயில் இயக்கப்படுவதற்கு முன்பு, டைனமிக் சோதனைகள் மிக முக்கியம். வேக மாறுபாடுகளுடன் ரயில் எப்படி இயங்குகிறது என்பதை ஆய்வு செய்வது இதன் நோக்கம்.
நிலையான சோதனைகள் வெற்றியடைந்தால், டைனமிக் சோதனைகள் தொடங்கப்படும். இதில், 3 பெட்டிகள் கொண்ட ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் மெதுவாக சோதனை பாதையில் இயக்கப்படும். மணிக்கு 10 கி.மீ., வேகத்தில் தொடங்கி, ரயிலின் வேகம் முறைப்படி அதிகரிக்கப்பட்டு, அதிகபட்ச வேகம் வரை இயக்கி சோதிக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT