Published : 09 Dec 2024 05:46 AM
Last Updated : 09 Dec 2024 05:46 AM
சென்னை: சென்னை மாநகராட்சி சார்பில், மணலி கடப்பாக்கம் ஏரியை ரூ.58 கோடியில் சுற்றுச்சூழல் பூங்காவாக மாற்ற நவீன இயந்திரங்கள் மூலம் தூர் வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன் தொடர்ச்சியாக மடிப்பாக்கம் ஏரியையும் புனரமைக்கும் பணிகள் தொடங்கப்பட உள்ளது.
சென்னை மாநகரப் பகுதியில் கடந்த 2015-ம் ஆண்டு ஏற்பட்ட பெருவெள்ளத்துக்கு பிறகு, மாநர பகுதியில் ஆக்கிரமிப்பிலும், பராமரிப்பின்றியும் இருந்த ஏரிகள், குளங்கள் மீட்கப்பட்டு சுற்றுச்சூழல் பூங்காக்களாக மாற்றப்பட்டு வருகின்றன. அவ்வாறு 100-க்கும் மேற்பட்ட குளங்கள் மற்றும் ஏரிகள் மீட்கப்பட்டுள்ளன.
இதன் ஒரு பகுதியாக மணலி மண்டலம், 16-வது வார்டில் அமைந்துள்ள 145 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரியை சுற்றுச்சூழல் பூங்காவாக மாற்ற மாநகராட்சி முடிவெடுத்துள்ளது. அதற்கான பணிகளை தற்போது தொடங்கியுள்ளது. தற்போது ஏரியில் உள்ள கழிவுகள் அகற்றப்பட்டு வருகின்றன. சுமார் 3 மீட்டர் ஆழத்துக்கு தூர்வாரும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இதன் மூலம் ஏரியின் நீர் கொள்திறன் இரட்டிப்பாகும்.
அதாவது 1.9 மில்லியன் கன மீட்டராக கொள்திறன் உயர்த்தப்படும். மேலும் இப்பூங்காவில் பொதுமக்களை கவரும் வகையில் 2.8 கிமீ சுற்றளவில் நடைபாதை, வண்ணத்துப்பூச்சி பூங்கா, இரு பறவைகள் தீவுகள், செயற்கை நீரூற்று, பொதுமக்கள் அமர்ந்து ஓய்வெடுக்க சாய்வு இருக்கை வசதி மற்றும் நடைபாதை வசதி உள்ளிட்டவை அமைக்கப்பட உள்ளன.
இப்பணியின் ஒரு பகுதியாக நவீன இயந்திரங்களை கொண்டு ஏரியில் தூர்வாரும் பணிகளை மாநகராட்சி தொடங்கியுள்ளது. பருவமழைக்கு பிறகு தூர்வாரும் பணிகள் தீவிரப்படுத்தப்பட உள்ளன. அடுத்த ஆண்டு ஜூன் மாதத்துக்குள் பணிகளை முடித்து, பொது மக்கள் பயன்பாட்டுக்கு திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அடுத்ததாக மடிப்பாக்கம் ஏரியை புனரமைக்க விரிவான அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. இதுபோன்றும் மேலும் பல ஏரிகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாநகராட்சி ஆணையர் ஜெ.குமருகுருபரன் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT