Published : 09 Dec 2024 06:20 AM
Last Updated : 09 Dec 2024 06:20 AM
சென்னை: ஃபெஞ்சல் புயல் தாக்கம் காரணமாக கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட சில மாவட்டங்கள் பெரியளவில் பாதிக்கப்பட்டுள்ளன. மழை, வெள்ள பாதிப்பில் பள்ளி மாணவர்களின் பாடநூல்கள், நோட்டுப்புத்தகங்கள், பைகள், சான்றிதழ்கள் ஆகியவை சேதம் அடைந்தன. அவ்வாறு பாதிக்கப்பட்ட மாணவர்களின் விவரங்களை சேகரிக்க பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது.
அதன்படி முதன்மை, மாவட்ட, வட்டாரக் கல்வி அதிகாரிகள், ஆசிரியர்கள் களத்தில் ஆய்வு செய்து அதுதொடர்பான புள்ளி விவரங்களை பள்ளி கல்வித்துறை வசம் ஒப்படைத்தனர்.
அதில் கடலூர் மாவட்டத்தில் மட்டும் 6 முதல் 12-ம் வகுப்பு வரையில் தமிழ் வழி பாடநூல்களை 3,447 மாணவர்களும், ஆங்கில வழி பாடநூல்களை 1,865 மாணவர்களும் என மொத்தம் 5,312 பேர் இழந்துள்ளனர்.
இதுதவிர 2,900 மாணவர்கள் பள்ளி சீருடைகளையும் 2,567 பேர் புத்தக பைகளையும் 3,219 பேர் நோட்டு புத்தகங்களையும் மழை வெள்ளத்தில் இழந்துள்ளனர். அவர்களுக்கு புதிய பொருட்கள் வழங்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதே போல், விழுப்புரம் உட்பட மழை பாதிப்பில் புத்தகங்கள், பைகள் மற்றும் சீருடைகளை இழந்த மாணவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும், அவர்களுக்கும் விரைவில் வழங்கப்பட உள்ளதாகவும் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT