Published : 09 Dec 2024 05:36 AM
Last Updated : 09 Dec 2024 05:36 AM
சென்னை: சென்னை கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி மெட்ரோ வழித்தடத்தில் அமைந்துள்ள பனகல் பூங்காவில், தரையில் இருந்து 16 மீட்டர் ஆழத்தில் பிரம்மாண்ட மெட்ரோ ரயில் நிலையம் அமைக்கும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது.
சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 116 கி.மீ. தூரத்துக்கு 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. இதில் ஒன்றான கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி (26 கி.மீ.) 4-வது வழித்தடத்தில், கலங்கரை விளக்கம் முதல் கோடம்பாக்கம் மேம்பாலம் வரை சுரங்கப் பாதையாகவும், பவர்ஹவுஸ் முதல் பூந்தமல்லி வரை உயர்மட்ட பாதையாகவும் அமைக்கப்படுகிறது.
இந்த வழித்தடத்தில் 9 சுரங்க மெட்ரோ ரயில் நிலையங்கள், 18 உயர்மட்ட மெட்ரோ ரயில் நிலைங்கள் அமைகின்றன. இதில் பல்வேறு பகுதிகளிலும் உயர்மட்ட, சுரங்கப் பாதை பணிகள், ரயில் நிலையங்கள் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. அந்த வகையில், பனகல் பூங்கா மெட்ரோ ரயில் நிலையம் அமைக்கும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது.
இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்ட பணிகளில் அதிநவீன தொழில்நுட்ப கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன. இதனால், கட்டுமானத்துக்கு பயன்படுத்தும் இட அளவை குறைத்துள்ளோம்.
பயணிகள் வருகை அதிகம் இருக்கக்கூடிய மெட்ரோ ரயில் நிலையங்கள் பெரிதாக அமைக்கப்படுகின்றன. கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி வழித்தடத்தில் உள்ள பனகல் பூங்காவில் ஆரம்பகட்ட பணிகள் முடிந்து, தற்போது மெட்ரோ ரயில் நிலையம் அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடக்கின்றன.
தரைமட்டத்தில் இருந்து 16 மீட்டர் ஆழத்தில், 230 மீட்டர் நீளத்துக்கு 20 மீட்டர் அகலத்தில் பிரம்மாண்டமான மெட்ரோ ரயில் நிலையம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
பயணிகள் வந்து செல்ல மின்தூக்கி, நகரும் படிக்கட்டுகள் அமைக்கப்படும். பயணிகளை கவரும் விதமாக, பல்வேறு உள்அலங்காரமும் செய்யப்படும். கடைகளும் இடம்பெறும்.
தற்போது 20 சதவீத பணிகள் முடிந்துள்ளன. 2026 மே மாதத்துக்குள் இப்பணிகளை முடித்து, பயன்பாட்டுக்கு கொண்டுவர திட்டுமிட்டுள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT