Published : 09 Dec 2024 12:35 AM
Last Updated : 09 Dec 2024 12:35 AM
நாகர்கோவில்: சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு தமிழகம்-கேரள எல்லைப் பகுதியான களியக்காவிளையில் தகவல் மையம் திறக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து, விரதம் இருந்து செல்வது வழக்கம். கார்த்திகை மாதம் 1-ம் தேதியில் இருந்து நடைபெறும் மண்டல பூஜையில் பங்கேற்பதற்காக தமிழகத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் செல்கின்றனர்.
இவர்களின் வசதிக்காக தமிழக அரசு சார்பில் தமிழக-கேரள எல்லையான களியக்காவிளையை அடுத்த ஒற்றாமரத்தில், அறநிலையத் துறையின் தகவல் மையம் அமைக்கப்பட்டுள்ளது. குழித்துறை தேவசம் போர்டு கண்காணிப்பாளர் சிவக்குமார் தகவல் மையத்தை நேற்று முன்தினம் மாலை திறந்துவைத்தார்.
சபரிமலை தகவல் மையத்தில் குழித்துறை தேவசம் போர்டு கண்காணிப்பாளர் (எழுத்தர்) மினி, திருமலை தேவசம் போர்டு தகவல் பணியாளர் மோகன், பளுகல் தேவசம் போர்டு காவலர் வினோத், அண்டு கோடு தேவசம் போர்டு காவலர் மோகனகுமார் உள்ளிட்டோர் சுழற்சி முறையில் பணியாற்றிட நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் 24 மணி நேரமும், 2025-ம் ஆண்டு ஜனவரி 20-ம் தேதி வரை பணியாற்றுவார்கள்.
சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு செய்ய வேண்டிய அடிப்படை வசதிகளை எந்தவித தொய்வுமின்றி செய்யவும், தகவல் மற்றும் உதவிகளை செய்து கொடுக்கவும், சிறப்பு பணியைக் கண்காணித்து முறைப்படுத்தவும் இவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT