Last Updated : 08 Dec, 2024 10:55 PM

 

Published : 08 Dec 2024 10:55 PM
Last Updated : 08 Dec 2024 10:55 PM

திருவள்ளூரில் விளை நிலங்களை கையகப்படுத்துவதை அரசு கைவிட வேண்டும்: மார்க்சிஸ்ட்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவள்ளூர் மாவட்ட 24- வது மாநாடு நேற்றும், இன்றும் கும்மிடிப்பூண்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

கும்மிடிப்பூண்டி: ‘திருவள்ளூர் மாவட்டத்தில் சாலைகள், தொழிற்பேட்டைகள் உள்ளிட்டவைக்காக விளை நிலங்களை கையகப்படுத்துவதை மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டும்’ என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவள்ளூர் மாவட்ட மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவள்ளூர் மாவட்ட 24- வது மாநாடு நேற்றும், இன்றும் கும்மிடிப்பூண்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. பேரணி, கட்சியின் தியாகிகளுக்கு அஞ்சலி, வரவு - செலவு கணக்கு சமர்ப்பிப்பு, பிரதிநிதிகள் விவாதம் என, நடைபெற்றது இந்த மாநாடு.

இதில், கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் ஜி.சுகுமாறன், மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.நம்புராஜன், மாநில கட்டுப்பாட்டுக்குழு தலைவர் ப.சுந்தரராசன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் துளசிநாராயணன் உள்ளிட்ட நிர்வாகிகள், பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட மாநாட்டில், திருவள்ளூர் மாவட்டத்தில் வளர்ச்சி என்ற பெயரில் சாலைகள், தொழிற்பேட்டைகள் உள்ளிட்டவைக்காக விளை நிலங்களை கையகப்படுத்துவதை மத்திய, மாநில அரசுகள் கைவிடவேண்டும், சென்னை - சூளூர்பேட்டை ரயில்வே மார்க்கத்தில் உள்ள 2 வழிப்பாதையை 4 வழிப்பாதையாக விரிவுப்படுத்த வேண்டும் என, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதுமட்டுமல்லாமல் இம்மாநாட்டில், கும்மிடிப்பூண்டி பகுதியில் உள்ள தொழிற்சாலை வளாகங்களில் அனுமதியின்றி ஆழ்துளை கிணறுகள் அமைத்து நிலத்தடி நீரை எடுப்பதை அரசு தடுக்க வேண்டும், மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் கடல் நீர் உட்புகுந்து, நிலத்தடி நீர் உப்புநீராவதை தடுக்கவேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும், மாவட்ட மாநாட்டில் விசைத்தறி கைத்தறி தொழிலை பாதுகாத்திட திருத்தணி, ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு வட்டங்களை மையப்படுத்தி ஜவுளி பூங்கா அமைக்க வேண்டும், நகரப் பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டத்தை கொண்டு வரவேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இம்மாநாட்டில், கட்சியின் திருவள்ளூர் மாவட்ட செயலாளராக எஸ்.கோபால் 3-வது முறையாக தேர்வு செய்யப்பட்டார். டி.பன்னீர்செல்வம், கே.ராஜேந்திரன், பி.துளசிநாராயணன், ஜி.சம்பத், கே.விஜயன், ஏ.ஜி.கண்ணன், ஏ.ஜி.சந்தானம், சி.பெருமாள், இ.மோகனா, ஆர்.தமிழ் அரசு ஆகிய செயற்குழு உறுப்பினர்கள் உட்பட 35 பேர் கொண்ட மாவட்ட குழு தேர்வு செய்யப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x