Published : 08 Dec 2024 04:55 PM
Last Updated : 08 Dec 2024 04:55 PM
மதுரை: 2026 தேர்தலில் 234 தொகுதியிலும் திமுக தனித்து நிற்க தயாரா? என முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ சவால் விடுத்துள்ளார்.
மதுரை ஜெய்ஹிந்த் புரம், பாரதியார் ரோட்டிலுள்ள தனியார் பள்ளியில் தமிழ்மணி சாரிட்டபிள் அண்ட் எஜுகேஷனல் டிரஸ்ட் சார்பில், இலவச கண் சிகிச்சை, மருத்துவ முகாம் நடந்தது. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தொடங்கி வைத்தார். ஏராளமானனோர் பங்கேற்று பயன் பெற்றனர்.
பிறகு செய்தியாளர்களிடம் பேசிய செல்லூர் ராஜு கூறியதாவது: "அதிமுக ஆட்சியில் வந்த புயலின் சேதாரம் மிகுதியாக இருந்தபோதும், மக்களை நேரில் சந்தித்து நிவாரணம் வழங்கினோம். திமுக வரும் தேர்தலில் 200 தொகுதிக்கு மேல் வெற்றி பெறுவோம் என அமைச்சர்கள் சொல்வது தான் நடப்பாண்டின் பெரிய ஜோக். தங்கள் குடும்பத்திலுள்ளவர்களை துணை முதல்வர் ஆக்கியுள்ளனர். உதயநிதி சினிமா துறையில் இருந்து வந்தவர். சினிமா செய்தியே பார்ப்பதில்லை என சொல்வது வேடிக்கையானது.
சினிமா துறையில் இவர்கள் அனுமதிக்காமல் ஒரு படம் ரிலீஸ் ஆகாது. மக்கள் விழித்து கொண்டுள்ளனர். விரைவில் ஆட்சி மாற்றம் வரப் போகிறது. மழை வெள்ளத்தை திமுக அரசு சரியாக கையாளவில்லை, தரம் இல்லாத நலத்திட்ட பொருட்களை மக்களுக்கு கொடுத்துள்ளது. போட்டோஷூட் நடத்துகிறது. திமுக மீது மக்கள் நம்பிக்கையை இழந்து வருகிறது. அதிமுக ஆட்சி காலத்தில் அதிக கனமழை கொட்டிய போதும் சிறப்பாக கையாண்டோம். அரசு பள்ளி ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள் என, பல அரசு ஊழியர்களின் நம்பிக்கையை திமுக அரசு இழந்துள்ளது.
ஆட்சி சுகம் கண்டு குடும்பத்தில் இருப்பவர்களை துணை முதல்வர் ஆக்கிவிட்டு குடும்பமே சேர்ந்து இந்த ஆட்சியை நடத்துகின்றனர். மருமகன் சபரீசன் ஒருபுறம் அதிகாரம் மையமாக செயல்படுகிறார். உதயநிதி ஸ்டாலின் சினிமா துறையில் இருந்து வந்து சினிமா செய்தியே நான் பார்ப்பதில்லை என பேசுகிறார். உதயநிதி இன்றி ஒரு திரைப்படமும் வெளியிட முடியாது. மக்களுக்கு ஒன்றுமே தெரியாது என திமுக ஆட்சி நினைக்கிறது. தமிழக மக்கள் ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப தயாராகிவிட்டனர். ஒருபுறம் வேங்கைவயல், மறுபுறம் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் இறப்பு இது போன்ற விஷயங்களில் திமுக அரசு சரியாக செயல்படவில்லை என்பதால் இவ்வழக்கை உச்சநீதிமன்றம் சிபிஐ வசம் ஒப்படைத்தது.
மன்னர் பரம்பரையை நாம் ஒழித்துவிட்டோம். கலைஞர் பரம்பரையை இன்னும் ஒழிக்க முடியவில்லை. தாத்தா முதல்வர், தந்தை முதல்வர், பேரனும் துணை முதல்வர், திமுக குடும்பத்தினரின் அதிகார மையமே நடக்கிறது. சனாதனம் பேசும் நபர்கள் குடும்பத்தை முதலில் திருத்த வேண்டும். வீட்டுக்குள் பூஜை நடக்கிறது. அப்புறம் எதற்கு சமாதானம் பற்றி பேசுகிறார்கள், விஜய் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை. திருமாவளவனுக்கு யாரும் நெருக்கடியை கொடுக்க முடியாது. மற்றவர்கள் பேசுவர் என, அவர் அடக்கி வாசிக்கிறார். நான் சவால் விடுகிறேன். 234 தொகுதிகளிலும் திமுக தனித்து நிற்க தயாரா?” என்று செல்லூர் ராஜு கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT