Last Updated : 08 Dec, 2024 03:47 PM

 

Published : 08 Dec 2024 03:47 PM
Last Updated : 08 Dec 2024 03:47 PM

வெள்ள பாதிப்புக்கு ரூ.2000 நிவாரணம்; வீடுகளை பெருக்கி துடைப்பதற்கு கூட போதாது: அன்புமணி விமர்சனம்

கடலூர்: தமிழக அரசு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமாக ரேஷன் அட்டைக்கு ரூ.2,000 வழங்கியிருப்பது ஆணவமான செயல். சேதம் அடைந்துள்ள வீடுகளை பெருக்கி துடைப்பதற்கு கூட இந்த 2,000 ரூபாய் போதாது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சனம் செய்துள்ளார்.

ஃபெஞ்சல் புயல் மற்றும் தென்பெண்ணையாற்று வெள்ளம் காரணமாக கடலூர் ஒன்றிய பகுதிகளில் பல்வேறு இடங்களில் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளநீர் புகுந்து கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியது. மாவட்ட நிர்வாகம் பொதுமக்களை மீட்டு பாதுகாப்பு மையத்தில் தங்க வைத்து மருத்துவ முகாம், உணவு உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து வருகிறது.

இந்த நிலையில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வெள்ளம் பாதித்த கடலூர் அருகே கண்ட காடு கிராமத்தில் பொதுமக்களுக்கு பொது மருத்துவ முகாமை இன்று (டிச.8) நடத்தியது. மருத்துவ முகாமை பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு துவக்கி வைத்து பொதுமக்களுக்கு மருத்துவம் பார்த்து மருத்துவ ஆலோசனைகளை வழங்கினார். இந்த முகாமில் புதுச்சேரி மகாத்மா காந்தி மருத்துவ கல்லூரி மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவ குழுவினர் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்து ஆலோசனை வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து அன்புமணி ராமதாஸ் பேசுகையில், “சென்னையில் வெள்ளம் வந்தால் 9-வது மாடியில் இருப்பவருக்கு கூட நிவாரணமாக ரூ.6000 வழங்கப்படுகிறது. ஆனால் வட மாவட்டங்களில் வெள்ளம் வந்தால் ரூ. 2000 தான் வழங்கப்படுகிறது.
சாத்தனூர் அணையை திறக்கப் போகிறோம் என்பதை குறைந்தது 5 மணி நேரத்திற்கு முன்பாக பொதுமக்களுக்கு அறிவுறுத்தி இருக்க வேண்டும். முன்கூட்டியே அறிவுறுத்தல் வழங்காததால் டிவி, பைக் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் சோதாரமாகியுள்ளது.

இந்த சேதாரங்களுக்கு தமிழக அரசு தான் முழுமையாக பொறுப்பேற்க வேண்டும். இது கடுமையாக கண்டிக்கத்தக்கது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமாக ரேஷன் அட்டைக்கு ரூ 2000 வழங்கியிருப்பது ஆணவமான செயல். சேதம் அடைந்துள்ள வீடுகளை பெருக்கி துடைப்பதற்கு கூட இந்த 2000 ரூபாய் போதாது. அந்த வீட்டில் உள்ள பொருட்களுக்கு யார் நிவாரணம் கொடுப்பது?

கடலூர்,விழுப்புரம், திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி போன்ற மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டால் தமிழக அரசு வெறும் ரூ. 2000 மட்டும் கொடுப்பது ஏன்? இந்த மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் என்ன பாவப்பட்ட மக்களா? சென்னையில் இருப்பவர்கள் மட்டும் என்ன புண்ணியம் செய்தவர்களா? எங்கு வந்தாலும் வெள்ளம் வெள்ளம் தான் பாதிப்பு பாதிப்பு தான். வரும் வழியில் பார்த்தேன் விவசாய நிலங்கள் விவசாயம் செய்ய முடியாத அளவிற்கு மண்மூடி போய் கிடக்கிறது. அவற்றை சீர் செய்வதற்கு தமிழக அரசு எந்த இழப்பீடும் அறிவிக்கப்படவில்லை.

சில பகுதிகளில் திமுக கிளை செயலாளர்கள் மூலமாக வெள்ள பாதிப்புகள் தொடர்பாக கணக்கெடுக்கப்படுகிறது ஏனென்றால் பணம் வந்தால் அவர்கள் மூலமாக கமிஷன் எடுத்துக் கொண்டு மீதி கொடுப்பார்கள். செந்தில் பாலாஜி இந்திய சுதந்திரத்திற்காக போராடி விட்டு 400 நாள் சிறையில் இருந்து திரும்பி உள்ளார். அவருக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது என்றார். பாமக சொத்து பாதுகாப்பு குழு தலைவர் டாக்டர் கோவிந்தசாமி, வன்னியர் சங்க மாநிலத் தலைவர் புதா அருள்மொழி, கடலூர் மாவட்ட பாமக செயலாளர் சண். முத்துகிருஷ்ணன் உள்ளிட்ட பாமக நிர்வாகிகள் பல உடன் இருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x