Published : 08 Dec 2024 03:34 PM
Last Updated : 08 Dec 2024 03:34 PM

“2026-ல் மக்கள் விஜய்யை தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியில் அமர வைப்பார்கள்” - தவெக நம்பிக்கை

சென்னை: அச்சத்திலும், பதட்டத்திலும் உள்ள திமுகவினர் எம்ஜிஆரை போல விஜய்யையும் கூத்தாடி என ஏளனம் பேசுகிறார்கள் என தமிழக வெற்றிக் கழகம் விமர்சித்துள்ளது.

இதூகுறித்து தமிழக வெற்றிக் கழக மாநில செய்தித் தொடர்பாளர் எஸ்.ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட தவெக தலைவர் விஜய், மத்திய மற்றும் மாநில ஆட்சியின் அவலங்கள் குறித்து பேசினார். துணை முதல்வர் உதயநிதி இதை பற்றி பேசும் போது சினிமா செய்திகள் பார்ப்பதில்லை என்று பதில் கூறியிருப்பது அவரது அரசியல் புரிதலின்மையை காட்டுகிறது.

ஒட்டுமொத்த சினிமாவை கையில் வைத்துக்கொண்டு திரையுலகில் ஆதிக்கம் செலுத்தி வரும் உதயநிதி, சமூகநீதியை நிலைநாட்டிய அம்பேத்கர் பற்றிய புத்தக வெளியீட்டு விழாவை சினிமா செய்திகள் எனக் கூறியிருப்பது அம்பேத்கரை அவமதிக்கும் கருத்தாகும். ஒரு மக்கள் பிரதிநிதி இப்படி பேசுவதென்பது ஏற்க முடியாத செயல்.

அமைச்சர்களின் கருத்தியல் அற்ற விமர்சனம், இணையதள தாக்குதல்கள், ஊடகங்களில் பத்திரிக்கையாளர்கள் என்ற போர்வையில் ஒரு சிலரை கொண்டு நகைச்சுவையான உண்மைக்கு புறம்பான விஷயங்களை பேச வைப்பது போன்ற செயல்களை செய்வதன் மூலம் திமுக எங்கள் தலைவரின் செயல்பாட்டால் எந்தளவு அச்சத்திலும் பதட்டத்திலும் உள்ளது என்பது வெளிப்படையாக தெரிகிறது.

எம்ஜிஆரை கூத்தாடி என்று ஏளனம் செய்த திமுகவை மக்கள் 10 ஆண்டுகள் அதிகாரத்தில் இருந்து ஒதுக்கி வைத்தார்கள். இன்று மீண்டும் அதே ஏளனத்தை கட்டவிழ்த்து விடும் திமுகவை தமிழக மக்கள் 2026 சட்டப்பேரவை தேர்தலில் ஆட்சி அதிகாரத்தில் இருந்து நீக்கி தவெக தலைவரை தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியில் அமர வைப்பார்கள்” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x