Published : 08 Dec 2024 11:02 AM
Last Updated : 08 Dec 2024 11:02 AM
அதிரடி பேச்சுகளால், தமிழக அரசியல் களத்தை அவ்வப்போது அலற விடுபவர் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். பிற கட்சிகள் எல்லாம் கூட்டணி கடை விரித்து காத்துக் கொண்டிருக்க, அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் இப்போதே 50-க்கும் மேற்பட்ட தொகுதிகளின் வேட்பாளர்களை தில்லாக அறிவித்து தேர்தல் பணிகளில் பரபரப்பாகிவிட்டார் சீமான். ரஜினியுடனான சந்திப்பு, விஜய்யின் அரசியல் விஜயம், கஸ்தூரிக்கு ஆதரவான கருத்து என பல்வேறு விவகாரங்கள் குறித்து, 'இந்து தமிழ் திசைக்கு அவர் அளித்த பேட்டியிலிருந்து...
ரஜினியை நீங்கள் சந்தித்தது ஒரு பெரிய விவாதமாக மாறி விட்டது. இந்த சந்திப்பு உங்களைப் பலவீனப்படுத்திவிட்டதாக உணர்கிறீர்களா?
நீண்ட காலமாக ரஜினிகாந்தை திரைத்துறையில் ரசித்து வந்தவர்களில் நானும் ஒருவன். அசாத்திய ஆற்றல் கொண்ட திரைக்கலைஞர். நாட்டின் மதிப்பு மிக்க மனிதர்களில் ஒருவர். அவருடனான சந்திப்பு என்னை பலவீனப்படுத்தும் என்று நினைக்கவில்லை.
ஆனால், கடந்த காலங்களில் நீங்கள் ரஜினியை கடுமையாக விமர்சனம் செய்துள்ளீர்களே..?
ஒரு காலத்தில், அவர் அரசியலுக்கு வருவதாக சொன்ன பொழுது, நான் ஏற்றுக் கொண்ட தமிழ் தேசிய கொள்கை அடிப்படையில், முரண்பாடு ஏற்பட்டு அவரை எதிர்த்தோம். இப்போதைய சந்திப்பில் நான் ரஜினியிடம், “நீங்கள் மகிழ்ச்சியாக நிம்மதியாக உள்ளீர்களா?” என்று கேட்டேன். “ஆமாம்” என்று சொன்னார். அவர் மீதுள்ள அக்கறையில்தான், நான் அவரை அரசியலுக்கு வர வேண்டாம் என்று சொன்னேன். கமலிடமும் நான் இதைச் சொல்லியுள்ளேன்.
அப்படி என்றால், நடிகர்கள் அரசியலுக்கு வரக்கூடாது என்கிறீர்களா?
அரசியல் என்பது கொஞ்சிக் கொஞ்சிக் கடிக்கும் மீன்கள் நிறைந்த குளம் அல்ல. கொடிய முதலைகள் நிறைந்து வாழும் அகழி. எனவே, ஒவ்வொரு காலையும் நாம் கவனமாக எடுத்து வைக்க வேண்டும் என்று நான் தம்பி விஜய்யிடம் கூட சொன்னேன். மற்றபடி அவரை அரசியலுக்கு வர வேண்டாம் என்று சொல்லவில்லை. அன்று நான் சொன்னதை, ரஜினிகாந்த் இப்போது ஏற்றுக் கொள்கிறார். அவர் நிம்மதியாக, மகிழ்ச்சியாக இருக்கிறார். இன்னும் இரண்டு, மூன்று படங்களில் நடிக்க அவர் திட்டமிடுகிறார். அவர் கட்சி ஆரம்பித்திருந்தால், நிம்மதியாக தூங்க விட்டிருப்பார்களா?
எம் ஜி ஆர், ஜெயலலிதா அரசியலுக்கு வந்த காலகட்டம் வேறு. அதோடு. அவர்கள் ஏற்கெனவே இருந்த கட்டமைப்பில் தங்களை பொருத்திக் கொண்டனர். ஆனால், புதிதாக ஒன்றை கட்டமைத்துக் கொண்டு பயணிப்பது என்பது கடுமையான வேலை. எம்ஜிஆர் கட்சி ஆரம்பித்ததும் உடனே நடந்த திண்டுக்கல் இடைத்தேர்தலை தைரியமாக எதிர்கொண்டார். ஆனால், கமல், விஜய் இடைத்தேர்தல்களில் போட்டியிடவில்லை. எம்ஜிஆருக்கு இருந்த துணிச்சல், திரையுலகில் உள்ளவர்களுக்கு இல்லை. துணிச்சலான, உண்மையான வீரர்கள் எம்ஜிஆர் மற்றும் விஜயகாந்த் இருவர்தான்.
ரஜினியிடம் அரசியல் பேசினீர்களா?
இரண்டேகால் மணி நேர சந்திப்பில் சினிமா பற்றி நிறைய பேசினோம். எனது காணொலிகளை அவர் தொடர்ந்து பார்த்திருக்கிறார். அதைப்பற்றி அவர் பேசினார். “நீங்கள் மொத்தமாக சினிமாவை விட்டு விட்டீர்களே…” என்று வருத்தப்பட்டார். தமிழகத்தில் எதிர்கால அரசியல் எப்படி இருக்கும் என இருவரும் பேசினோம். அவ்வளவுதான் இப்போது சொல்ல முடியும்.
ரஜினிகாந்த் சினிமா சூப்பர் ஸ்டார்... நான் அரசியல் சூப்பர் ஸ்டார் என்று சொல்லி இருக்கிறீர்களே..?
அதில் உங்களுக்கு என்ன சந்தேகம்? எந்த பின்புலமும் இல்லாமல், திரைத்துறைக்கு வந்து, நட்சத்திரமாக ஜொலிக்கும் அவர் திரையுலக சூப்பர் ஸ்டார். அதேபோல், சாதாரண மனிதராக அரசியலுக்கு வந்து தனித்து போட்டியிட்டு, வாக்குக்கு பணம் கொடுக்காமல், 36 லட்சம் வாக்குகளை, 8.22 சதவீத வாக்குகளைப் பெற்று அங்கீகாரம் பெற்ற கட்சியாக நாம் தமிழர் கட்சியை மாற்றியுள்ள நான் அரசியல் சூப்பர் ஸ்டார் தான். இன்று என்னை பேசாமல் தமிழக அரசியல் இல்லை. பலபேரை தூங்கவிடாமல் செய்துவிட்டேனே. தமிழக அரசியலில், பாடும் பொருள், பரம்பொருள் எல்லாமே இப்போது சீமான் தான்.
அரசியலுக்கு வரும் முன்பு உங்களின் பாசத்திற்குரிய தம்பியாக இருந்த விஜய், இப்போது எதிரியாகி விட்டாரே..?
அண்ணன் தம்பி பாசம் வேறு. நானும் என் தம்பியும் கொள்கையில் முரண்படுவது வேறு. மொழி, இனம் என்று மக்களைப் பிரிக்கிறார்கள் என்று அவர் நேரடியாக எங்களை விமர்சனம் செய்கிறார். உலகம் முழுவதும் மொழி, இனம் அடிப்படையில் தான் அரசியல் கட்டமைக்கப்பட்டுள்ளது. அப்படி இருக்க, இளைய தலைமுறை பிள்ளைகளிடம் இப்படி ஒரு கோட்பாட்டை விஜய் விதைப்பது தவறாகப் போய்விடும். ஆனால், விஜய் என் தம்பி என்பதில், அன்பிலும் பாசத்திலும் குறைவில்லை. நாளைக்கே விஜய்க்கு ஏதாவது ஒரு சிக்கல் என்றால் நான் தான் முதலில் நிற்பேன்.
அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் உங்களையும் விஜய்யுடன் ஒரே மேடையில் அமர வைக்க ஒரு முயற்சி நடந்ததாமே.?
தம்பி ஆதவ் அர்ஜுனா என்னிடம் பேசினார். “ராகுல் காந்தி, ஸ்டாலின், திருமாவளவன் பங்கேற்கும் மேடையில் நீங்களும் பங்கேற்க வேண்டும்” என்றார். “பார்ப்போம்” என்றேன். கடைசியில் அவர்கள் பங்கேற்காத நிலையில், விஜய் இந்த பட்டியலில் சேர்ந்துவிட்டார். அதனால், இது நமக்கு சரியாக வராது என்று சொல்லி மறுத்துவிட்டேன். அதோடு, அம்பேத்கரை பேசுவதற்கு எனக்கு இன்னொருவர் மேடை போட்டுத் தரவேண்டிய அவசியம் இல்லை.
அந்த விழாவில் ஆளுங்கட்சியை எச்சரிக்கும் விதமாக விஜய் பேசியிருப்பதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
பயணத்தில் இருந்ததால், நூல் வெளியீட்டு விழா நிகழ்வை நான் பார்க்கவில்லை. அதனால் அது குறித்து எனக்கு கருத்து இல்லை. ஆனால், நாங்கள் நீண்ட நாட்களாக ஆளுங்கட்சிக்கு பல்வேறு விவகாரங்களில் கடும் எச்சரிக்கைகளை கொடுத்து வருகிறோம்.
ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்பதில் உங்களுக்கு உடன்பாடு உள்ளதா?
இது வரவேற்கக் கூடிய ஒன்று. எங்களது கோட்பாட்டை, கொள்கைகளை ஏற்கும் போது, கூட்டணி ஆட்சி அமைவது தவறில்லை. அதேசமயம், தனித்து அதிகாரத்தை பெறாமல் என் கனவை நிறைவேற்ற முடியாது என்பதால், அதுவரை தனித்துத்தான் நின்றாக வேண்டும்.
உங்களுக்கு ரூ.2000 கோடியும் முதல்வர் பதவியும் தருவதாக பேரம் பேசியதாக கூறினீர்கள். அது யார் என்று சொல்ல முடியுமா?
திமுக, காங்கிரஸ் பேசாது என்பது உங்களுக்குத் தெரியும். 234 தொகுதிகளுக்கும் நான் வேட்பாளர்களை அறிவித்து களத்தில் நிற்கும் வரை, பேரம் பேசிக்கொண்டுதான் இருப்பார்கள். இதையெல்லாம் கண்டு சலனமடையவும், சமரசம் செய்யவும் போவதில்லை.
நாம் தமிழர் கட்சியில் இருந்து அதிருப்தியாளர்கள் அடுத்தடுத்து வெளியேறுகிறார்களே..?
என்னைக் கண்டு திமுக பயப்படுகிறது. அவர்கள் தான் பின்னணியில் இருந்து இதனைச் செய்கின்றனர். அவர்கள் என்னை சிதைப்பதாக நினைக்கின்றனர். ஆனால், என் கட்சியை அவர்கள் செதுக்குகிறார்கள். என் வீட்டை நான் கேட்காமலேயே ஒரு ரூபாய் செலவில்லாமல் அவர்களே சுத்தப்படுத்தி, வெள்ளை அடித்துக் கொடுக்கிறார்கள்.
(பேட்டி நாளையும் தொடரும்)
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT