Published : 08 Dec 2024 09:23 AM
Last Updated : 08 Dec 2024 09:23 AM
சென்னை: பல்லாவரத்தில் கழிவுநீர் கலந்த குடிநீரை பருகியதால் பலர் வாந்தி, பேதி, மயக்கம் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு ஆளாகினர். இதையடுத்து, பலர் தாம்பரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில், கன்டோன்மென்ட் பல்லாவரம் மோகனரங்கன் (42), காமராஜர் நகர் திருவேதி (56) ஆகியோர் உயிரிழந்தனர்.
நேற்று முன்தினம் நிலவரப்படி, தாம்பரம் அரசு மருத்துவமனையில் 36 பேர், சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் 8 பேர், தனியார் மருத்துவமனையில் 6 பேர் சிகிச்சை பெற்றனர். நேற்று காலை, மேலும் 6 பேர், தாம்பரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், பாதிப்பு குணமடைந்ததை அடுத்து தாம்பரம் அரசு மருத்துவமனையில் இருந்து, 26 பேர், நேற்று வீடு திரும்பினர். பாதிப்பு ஏற்பட்ட பல்லாவரம் காமராஜர் நகர், கண்டோன்மென்ட் மலைமேடு பகுதியை சேர்ந்த 16 பேர், அங்கு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் சிலர் சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் பல்லாவரம் கன்டோன்மென்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜெயவர்ஷினி (70) ஜெயந்தி (45) ஆகிய இருவருக்கும் தற்போது காலரா நோய்த்தொற்று ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பல்லாவரம் பகுதியில் தொடர்ந்து பலர் பாதிக்கப்பட்டு வரும் சம்பவம் பகுதிகளில் வசிப்போர் பீதி அடைந்துள்ளனர்.
இதற்கிடையே நேற்றும் பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில், 6 மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. தாம்பரம் மாநகராட்சி சுகாதார அதிகாரிகள், மருத்துவர்கள் இணைந்து, வீடு வீடாக சென்று ஒவ்வொருவரையும் பரிசோதனை செய்து மருந்து மாத்திரைகளை வழங்கி வருகின்றனர்.
இதனிடையே, தாம்பரம் மாநகராட்சி 50-வது வார்டில் பல இடங்களில் கழிவுநீர் கலந்த குடிநீர் விநியோகிக்கப்பட்டதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும், பலமுறை இது தொடர்பாக புகார் அளித்தும் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு தெரிவித்துள்ள வார்டு மாமன்ற உறுப்பினர் எம்.யாகூப் டிச. 10-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT