Published : 08 Dec 2024 08:08 AM
Last Updated : 08 Dec 2024 08:08 AM
சென்னை: தமிழகத்தின் ஒவ்வொரு குடிமகனும், முப்படையினர் கொடி நாளுக்கு பெருமளவில் நிதியளிக்க வேண்டும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவியும் முதல்வர் மு.க.ஸ்டாலினும் அழைப்பு விடுத்துள்ளனர்.
ஆளுநர் மாளிகையில் நேற்று காலை கொடிநாள் நிதியாக ரூ.5 லட்சத்தை ஆளுநர் ஆர்.என்.ரவி, மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடேவிடம் வழங்கினார். உடன், பொதுத்துறை செயலர் ரீட்டா ஹரிஷ் தாக்கர், ஆளுநரின் செயலர் கிர்லோஷ்குமார், பொதுத்துறை துணை செயலர் பவன்குமார் ஜி.கிரியப்பானவர் ஆகியோர் இருந்தனர்.
பின்னர் ஆளுநர் வெளியிட்ட செய்தி: ஆண்டுதோறும் டிச.7-ம் தேதி, முப்படையினர் கொடிநாளை கடைப்பிடிக்கிறோம். இந்த நாளன்று நமது முப்படையினரின் தளர்வில்லாத துணிச்சல், தியாகம், தேசபக்தி ஆகியவற்றை நாம் பாராட்டுகிறோம். இவர்கள் தான் நம் தேசத்தின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மையின் உறுதியான தூண்களாக இருக்கின்றனர். நமது எல்லைகளை பாதுகாத்தல், அவசரகால துரித செயல்பாடுகள், உலகளவில் அமைதிகாக்கும் பணிகளுக்கு பங்களிப்பது ஆகியவற்றில் அசாதாரணமான தைரியம், வளைந்து கொடுக்கும் தன்மையை படையினர் வெளிப்படுத்தி வந்திருக்கின்றனர். நாம் நமது நெஞ்சுரம்மிக்க படைவீரர்களை நினைவுகூர வேண்டும். எப்போதெல்லாம் அதிகாரப்பூர்வமான சுற்றுப்பயணங்களை நான் மேற்கொள்கிறேனோ, அப்போதெல்லாம் முன்னாள் படையினர் சங்கங்களை சந்தித்து, அவர்களுடன் உரையாடி, அவர்கள் மனக்குறைகளைத் தெரிந்து கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன்.
முப்படையினர் கொடி நாள் நிதியளிப்பில் தமிழகம் தொடர்ந்து முன்னணி வகித்து வருகிறது. மாநில அரசும் கூட, முன்னாள் படையினருக்கும் அவர்தம் குடும்பத்தாருக்கும் சலுகைகள், விலக்குகள், இடஒதுக்கீடுகள் ஆகியவற்றை கல்வி, வேலைவாய்ப்பு போன்றவற்றில் அளித்து வருகிறது. மூத்த முன்னாள் ராணுவத்தார் மற்றும் அவர்களின் குடும்பத்தாருக்கு ஆதரவாக இருப்பதில் நமது அர்ப்பணிப்பை நாம் மீள் உறுதி செய்வோம். தமிழகத்தின் ஒவ்வொரு குடிமகனும், முப்படையினர் கொடிநாளுக்குத் தாராளமாக நிதியளிக்க முன்வர வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலின்: முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தம் பெற்றோர், தாம் பெற்றெடுத்த செல்வங்களையும், உற்ற மனைவியையும், உறவினர்களையும் பிரிந்து, பிறந்த நாட்டின் பெருமை காத்திடும் முப்படை வீரர்களின் தியாகத்தை நினைவில் நிறுத்தும் திருநாள், "படைவீரர் கொடி நாள்". நாட்டின் எல்லைகளையும், நமது சுதந்திரத்தையும் காக்கும் பணியில் எண்ணற்ற படைவீரர்கள் தங்கள் இன்னுயிரை ஈந்திருக்கின்றனர். எத்தனையோ ஆயிரம் வீரர்கள் தங்கள் உடல் உறுப்புகளை இழந்திருக்கின்றனர். ஏனையோர், எப்பொழுது எத்தகைய துன்பம் வந்தாலும், சிறிதும் அஞ்சாமல் தங்கள் கடமையே பெரிதென்று எண்ணிப் பணியாற்றுகின்றனர்.
இவர்கள் தனி மனிதர்கள் அல்ல. தங்கள் குடும்பத்தினரையும் காப்பாற்றும் பொறுப்பு ராணுவ வீரர்களுக்கு உண்டு. அந்தப் பொறுப்பினை நாட்டு மக்கள் தங்கள் கடமையாக ஏற்றுக்கொள்ள வேண்டும். பல நலத் திட்டங்களை வழங்கி, முன்னாள் படைவீரர் மற்றும் அவர்தம் குடும்பத்தினர் நலன் காப்பதில், நமது மாநிலம் முன்னோடியாகத் திகழ்கிறது. எனவே, இவ்வாண்டு கொடி நாளிலும் பெருமளவில் நிதி வழங்கி, முன்னாள் படைவீரர்களுக்கும், அவர்தம் குடும்பத்தாருக்கும் நம் நன்றியையும் நல்வணக்கத்தையும் காணிக்கையாக்குவோம். இவ்வாறு முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT