Last Updated : 07 Dec, 2024 07:51 PM

20  

Published : 07 Dec 2024 07:51 PM
Last Updated : 07 Dec 2024 07:51 PM

‘தூண்டில்’ விஜய், ‘ஆர்ப்பரிப்பு’ ஆதவ், ‘விழிப்புடன்’ விசிக... அடுத்து? - ஓர் உள்ளரசியல் பார்வை

விஜய், ஆதவ் அர்ஜுனா, திருமாவளவன்

1990-களில் விசிகவை நிறுவி வளர்த்துக் கொண்டிருந்த காலக்கட்டத்தில் மதுரையில் கட்சித் தொண்டர்கள் மத்தியில் பேசியபோது, “நாம் உண்மையாக, நேர்மையாக களப்பணி செய்தால் விடுதலை சிறுத்தைகளைப் பற்றி எழுதாமல் எந்தப் பத்திரிகை செய்தியும் வராது” என்று திருமாவளவன் கூறியிருந்தார். அவர் அன்று சொன்னது போலவே இன்றைக்கு “எந்தத் தேர்தல் வந்தாலும், தேர்தலே இல்லாவிட்டாலும்கூட விசிகவை பத்திரிகைகள் தவிர்த்துவிட முடியாத என்ற நிலையில் வளர்ந்திருக்கிறது” என்று விசிகவை சுற்றியுள்ள சமீபத்திய சர்ச்சைகளைப் பற்றிய உரையாடலின்போது அக்கட்சியின் விசுவாசி ஒருவர் நெகிழ்ச்சியுடன் சிலாகித்துப் பேசினார்.

சமீபத்திய சலசலப்புகளுக்கு மத்தியில் விசிகவின் வளர்ச்சி பற்றியும், அதன் எதிர்காலப் பயணம் திட்டம் பற்றியும் பார்ப்போம். அரசியல் குடும்பப் பின்னணியோ, பெரிய பொருளாதாரப் பின்னணியோ இல்லாமல் களத்தில் இறங்கி, கட்சியாக வளர்ந்து, விசிக என்றவுடன் சட்டென ’GenZ’ தலைமுறையினர் வரை ஈர்த்த தலைவராக திருமாவளவன் வளர்ந்திருக்கிறார் என்பதில் மாற்றுக் கருத்துகள் இருக்க இயலாது. இத்தனை சர்ச்சைகளுக்கு மத்தியிலும் திமுக அமைச்சர்களும் கூட, ‘திருமாவளவன் சுயமரியாதையுள்ள சிறந்த தலைவர்’ என்று அங்கீகரிக்கும் அளவுக்கு அவரது முக்கியத்துவத்தை உறுதிப்படுத்தியுள்ளார்.

ஆனால், சமீபகாலமாக திருமாவளவனைத் தாண்டி விசிக என்றவுடன் ஆதவ் அர்ஜுனாவின் கருத்துகளும் சேர்ந்து பேசுபொருளாகிறது. அதுவே தொலைக்காட்சி விவாதப் பொருளாகவும் ஆகி இருக்கிறது. ‘விசிகவின் ‘பவர் சென்டர்’ ஆதவ் தானா?’ என்றளவுக்கு அவர் கவனம் பெற்றிருக்கிறார். ‘வட மாவட்டங்களில் விசிக இல்லாமல் திமுகவால் வெல்ல முடியாது’ என்று ஆதவ் பேசியது முதன்முதலில் மிகப் பெரிய வீச்சை ஏற்படுத்தியது. அது தொடங்கி அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழா பேச்சு வரை அனைத்தும் விசிக மீது ஒட்டுமொத்த ஊடக கவனத்தையும் குவிக்க வைத்துள்ளது.

யார் இந்த ஆதவ் அர்ஜுனா? - ஆதவ் அர்ஜுனாவின் சொந்த ஊர் திருச்சி. படித்தது அரசியல் அறிவியல். உடலை கட்டுமஸ்தாக வைத்துக் கொள்வதில் ஆர்வம் கொண்டவர். விளையாட்டு வீரரும் கூட. தமிழ்நாடு கூடைப்பந்து விளையாட்டு கூட்டமைப்பின் முக்கியப் பதவியில் இருக்கிறார். தமிழகத்தின் பெரும் பணக்காரர்களில் ஒருவராக அறியப்படும் லாட்டரி மார்ட்டினின் மகளை காதல் திருமணம் புரிந்து கொண்டார். அரசியல் அறிவியல் படிப்பை வீணாக்காமல் துறை சார்ந்து ‘வாய்ஸ் ஆஃப் காமன்ஸ்’ என்ற ஒரு தேர்தல் உத்தி வகுக்கும் நிறுவனத்தையும் உருவாக்குகிறார். அதற்கு முன்னதாக நாடே அறிந்த தேர்தல் உத்தி வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரின் அணியில் வேலை செய்த அனுபவத்தையும் பெற்றிருந்ததால் ‘வாய்ஸ் ஆஃப் காமன்ஸ்’ 2021-ல் திமுகவுக்கு தேர்தல் உத்தி வகுப்பதில் சில வேலைகளை செய்து கொடுத்திருக்கிறது. அப்படித்தான் அவர் விசிக தலைவர் திருமாவளவனுக்கும் அறிமுகமாகியுள்ளார்.

கூட்டணியில் இருந்த விசிக-வுக்கு தேர்தல் தொடர்பாக சில தகவல்களை சேகரித்துக் கொடுத்ததோடு, தொடர்ந்து விசிகவின் சில விழாக்கள், மாநாடுகளை ஒருங்கிணைக்க உதவியதாகத் தெரிகிறது. அப்படியே விசிக-விலும் சில கார்ப்பரேட் போன்ற கட்டுப்பாடுகள், நடைமுறைகள் வேண்டுமென தலைமையிடம் பேசி செயல்படுத்தியிருக்கிறார். பண பலம், தேர்தல் உத்தி நிறுவனம், பல்வேறு அரசியல் கட்சிகளுடன் தொடர்பு என எல்லாம் இருந்தும் அவர் தன்னை விசிகவில் ஈடுபடுத்திக் கொள்ள முன்வந்திருக்கிறார். தலித் சமூகத்தைச் சாராத ஒருவர் விசிகவில் காட்டிய ஈடுபாட்டின் காரணமாகவும், அவருடைய அரசியல் உத்திகளில் தெரிந்த நேர்த்தியின் காரணமாகவும் திருமாவளவனின் அபிமானத்தையும் பெற்றிருக்கிறார். கட்சியின் துணை பொதுச் செயலாளர் என்ற அந்தஸ்தையும் பெற்றிருக்கிறார்.

இப்படி துணைப் பொதுச் செயலாளரான ஆதவ் அர்ஜுனா, மிகக் குறுகிய காலத்தின் விசிகவின் அடையாளங்களில் ஒன்றாக கவனம் பெற்றுள்ளார். நிதானமான பேச்சுகளையே விசிக தலைமை தொடங்கி எம்.பி,, எம்.எல்.ஏ.,க்கள் வரை அனைவரும் வெளிப்படுத்திவரும் நிலையில் ஆதவின் அதிரடிப் பேச்சுகள் விசிகவில் இருக்கும் ‘ஜென்ஸி’ தலைமுறையினரை ஈர்க்கிறது. விசிகவின் இளைய உறுப்பினர்களிடம் பேசினால், ‘கட்சியில் ஓர் ஏற்றம் வேண்டும். ஆதவ் அண்ணா பேச்சு மாஸ். தலைவர் ஆதவ் அண்ணா பேச்சுகளை அங்கீகரிக்க வேண்டும்’ என்கிறார்கள்.

கடந்த செப்டம்பர் மாதம் ஆதவ் அர்ஜுனாவின் வீடியோ பேட்டி ஒன்று தமிழக அரசியலில் பெரிய சலசலப்பை ஏற்படுத்தியது. ‘சினிமாவில் இருந்து வந்தவர்களே துணை முதல்வர் ஆகும்போது, 40 ஆண்டுகளாக அரசியலில் இருக்கும் எங்கள் தலைவர் திருமாவளவன் துணை முதல்வர் ஆகக் கூடாதா? விசிக கூட்டணி இல்லாமல் வட மாவட்டங்களில் திமுக வெல்ல முடியாது, குறைந்தபட்ச செயல் திட்ட அடிப்படையில் தமிழகத்தில் கூட்டணி அமைய வேண்டும், தமிழக அமைச்சரவையில் விசிக, இடதுசாரிகள், இஸ்லாமிய கட்சிகளுக்கு இடம் அளிக்க வேண்டும்’ என்ற கருத்து திமுகவினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

திமுகவினர் பலரும் ஆதவ் மீது நடவடிக்கை கோரினர். அப்போது திருமாவளவன், “ஆதவ் அர்ஜுனா குறித்து உயர்நிலைக் குழுவில் பேசி முடிவெடுக்கப்படும்” என்றார். அப்போது ஆதவுக்கு எதிராக கட்சியில் சில முக்கியப் பிரமுகர்கள் கடுமையான அதிருப்தி தெரிவித்தனர். ஆதவின் பேச்சுகள் தொடர்ந்து ஏற்படுத்திய தாக்கத்தால் ஆதவின் குடும்பப் பின்னணியை சுட்டிக்காட்டி ‘லாட்டரி மார்ட்டின் எத்தனையோ அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் நிதி வழங்கியதுபோல் விசிகவுக்கும் வழங்கியிருப்பார். அதனால், அவர் விசிகவின் பவர் சென்டராக உருவாகி வருகிறார்’ என்றெல்லாம் விமர்சனங்கள் எழுந்தன.

பவர் சென்டரா அல்லது ஆர்எஸ்எஸ் ஆளா? ஆனால், ஆதவ் அர்ஜுனா அத்தனை பலமும் இருந்து விசிகவை ஏன் தேந்தெடுக்க வேண்டும், அவருக்குப் பின்னால் ஏதேனும் ‘ஹிடன் அஜெண்டா’ இருக்கிறதா? வேறொரு அரசியல் கட்சியின் பலம் இருக்கிறதா என்ற கேள்விகளும் கட்சியில் ஆதவுக்கு பதவி வழங்கப்பட்ட நாள் முதல் இன்று வரை முன்வைக்கப்படுகின்றன. கட்சிக்குள் ஒரு சிலர் ‘ஆதவ் ஆர்எஸ்எஸ் ஆள்’ என்று எச்சரிக்கின்றனர். விஜய் மேடையில் இருந்த அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழா பேச்சில் கூட ஆதவ், “கேள்வி கேட்டால் உடனே சங்கி என்கிறார்கள்.” என்று ஆதங்கப்பட்டார்.

ஆதவ் பேச்சும், திருமாவின் எதிர்வினையும்... - “காலச் சூழல் காரணமாக திருமாவளவன் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. ஆனால், அவரது மனசாட்சி இங்குதான் உள்ளது. ஒரு பட்டியலினத்தவர் முதல்வராக வரவேண்டும் எனும்போது அதற்காக முதல் குரலாக ஒலித்த குரல் விஜய்யின் குரல். ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்பதை உரக்க சொல்வோம். தமிழகத்தில் மன்னராட்சிக்கு இடமில்லை. 2026-ல் மன்னராட்சி முழுமையாக ஒழிக்கப்படும்” என்று பேசியிருந்தார் ஆதவ்.

இந்தப் பேச்சுக்கு எதிர்வினையாற்றியுள்ள விசிக தலைவர் தொல்.திருமாவளவன், “ஏற்கெனவே உயர்நிலைக் குழுவில் நாங்கள் விவாதித்தப்படி, கட்டாயமாக ஆதவ் அர்ஜுனாவிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்புவோம். அவர் விசிகவில் முக்கியமான ஒரு பொறுப்பில் இருக்கிறார். துணைப் பொதுச் செயலாளர் என்பது ஒரு முன்னணி பொறுப்பு. எடுத்தோம், கவிழ்த்தோம் என்ற ஒரு நிலைப்பாட்டை இதுவரை நாங்கள் யார் மீதும் எடுத்ததில்லை. எனவே, கட்சியின் முன்னணி நிர்வாகிகளுடன் கலந்துபேசி, கட்சியின் கட்டுப்பாட்டுக்கும், கட்சியின் கட்டுப்பாட்டைக் கேள்விக்குள்ளாக்கக் கூடிய வகையில், ஆதவ் அர்ஜுனா பேசி வருகிறார் என்ற நிலையில், உயர்நிலைக் குழுவில் ஏற்கெனவே நாங்கள் விவாதித்தப்படி அறிக்கை அனுப்புவோம்,” என்று கூறியிருக்கிறார்.

இதனால் விசிகவில் இருந்து ஆதவ் நீக்கப்படுவாரா? இல்லை, அவரே தனது விலகலை அறிவிப்பாரா என்ற எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன. இதற்கிடையில், விஜய்யின் தவெக-வுக்கும் 2026-ல் தேர்தல் உத்தி வகுப்பாளராக ஆதவ் அர்ஜுனாவின் ‘வாய்ஸ் ஆஃப் காமன்ஸ்’ செயல்படும் என்றும், அதற்காக அவர் விரைவில் விஜய்யை சந்தித்து ஆலோசிக்கவுள்ளார் என்றும் இரண்டு கட்சிக்குள்ளுமே பேசப்படுகிறது.

எந்த அழுத்தமும் இல்லை... - ஆதவ் பேச்சுக்கு மட்டுமல்ல, “விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனால் அம்பேத்கரின் புத்தக வெளியீட்டு விழாவில் கூட கலந்துகொள்ள முடியாத அளவுக்கு கூட்டணி கட்சிகள் சார்ந்து எவ்வளவு நெருக்கடி இருக்கும் என்பதை என்னால் யூகிக்க முடிந்தாலும், அவரின் மனது முழுக்க முழுக்க நம்முடன் தான் இருக்கும்” என்று பேசிய விஜய்க்கும் திருமாவளவன் பதிலடி கொடுத்துள்ளார்.

“விஜய்யின் மனது மேடையில் இல்லை. என்னை நோக்கியே இருந்திருக்கிறது என்பதை மட்டும் என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. விழாவில் கலந்துகொள்ள வேண்டாம் என்பது நான் சுதந்திரமாக எடுத்த முடிவு. கட்சியின் நலன், கூட்டணியின் நலன் கருதி சனாதன சக்திகளின் சூழ்ச்சிக்குப் பலியாகாமல் இருக்க வேண்டும் என்ற உறுதிப்பாட்டோடு எடுத்த முடிவு. இந்த விழாவில் நான் பங்கேற்க இயலாமல் போனதற்கு, தவெக தலைவர் விஜய் கூறுவது போல எந்த அழுத்தமும், காரணமும் இல்லை.” என்று திருமாவளவன் கூறியுள்ளார்.

“திமுகவோ, அதிமுகவோ எந்தக் கூட்டணியில் இருந்தாலும் கூட்டணி தலைமையின் அழுத்தம், பிற கட்சிகளின் மீது இல்லாமல் இருக்க வாய்ப்பே இல்லை. அந்த வகையில் விசிகவுக்கு திமுக நெருக்கடி இல்லாமல் இருக்காது. உண்மையில் திமுகவின் நெருக்கடியும் விசிகவின் வளர்ச்சிக்கு ஒரு காரணம். அதேபோல் கடந்த மக்களவைத் தேர்தலில் தருமபுரி மக்களவை தொகுதியில் கடைசி நேரத்தில் அதற்குட்பட்ட அரூர் சட்டப்பேரவை (தனி) தொகுதியின் வாக்குகள் எண்ணப்படவும் நிலைமை தலைகீழாக மாறி திமுக வெற்றி பெற விசிகவின் உழைப்பும் காரணம். இதெல்லாம் அரசியல் நுணுக்கம் தெரிந்தவர்களுக்குப் புரியும்” எனக் கூறுகின்றனர் அரசியல் நிபுணர்கள். இதைத்தான ஆதவ் சூசகமாகக் குறிப்பிட்டிருப்பார் என்றும் சொல்கின்றனர்.

என்ன செய்வார் திருமாவளவன்? - 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு வெகுதூரமில்லை. ஆட்சி, அதிகாரத்தில் பங்களிக்கும் மனநிலையில் ஆளும் திமுகவும், ஆண்ட அதிமுகவும் இல்லை, இனியும் இருக்கப்போவதில்லை. புதிதாக பிறந்த தவெக மீண்டும் மீண்டும் மறைமுகமாக, சூசகமாக விசிகவுக்கு அழைப்பு விடுத்துக் கொண்டே இருக்கிறது.

இந்தச் சூழலில் திருமாவளவன் திமுக கூட்டணியில் இருப்பாரா? இல்லை, புதிய கூட்டணிக்கு வித்திடுவாரா என்ற எதிர்பார்ப்பும் இல்லாமல் இல்லை. ஆனால், 2026 தேர்தலில் விசிக நிச்சயமாக திமுகவுடனேயே கூட்டணியைத் தொடரும். விஜய்யின் கட்சி இன்னும் தேர்தல் களத்தைப் பார்க்கவே இல்லை. அந்தக் கட்சி தேர்தல் களத்தைப் பார்க்க வேண்டும். அதற்கு மக்கள் வரவேற்பு என்னவென்பதை விக்கிரவாண்டி மாநாடு அல்ல, வாக்கு சதவீதமே முடிவு செய்யும். அதன் பின்னரே தவெக நிலைத்திருக்குமா இல்லையா என்பதே தெரியும். இந்தச் சூழலில் விஜய்யின் காதல் வலைக்குள் விசிக விழாது என்பதே கணிப்பாக இருக்கிறது.

பல தேர்தல்களைக் கண்டு தனக்கென தனி வாக்கு சதவீதத்தை வைத்திருக்கும் சீமான் கட்சிக்கு இருக்கும் ஒரு பெரும் சவால், அனைத்து தொகுதிகளிலும் மக்கள் செல்வாக்கு உள்ளவர்களையே வேட்பாளர்களாக நிறுத்த முடியாதது. இந்தச் சவால் இன்று உருவாகியுள்ள தவெகவுக்கும் இருக்கும். ஏன் விசிகவுக்கும் கூட இச்சிக்கல் ஓரளவு இருக்கலாம். அதனால் 2026 சட்டப்பேரவைத் தேர்தல் என்பது 2031 தேர்தலில் ஒரு தனிப் பெரும் சக்தியாக தன் தலைமையில் ஒரு கூட்டணியை உருவாக்கி களம் காண்பதற்காக விசிக எடுத்துக் கொள்ளும் தகவமைப்பு காலமாக இருக்கும் எனவும் கணிக்கப்படுகிறது.

காலமும், களமும் முடிவு செய்யும்... - “விடுதலை சிறுத்தைகள் ஆட்சி அமைக்க வேண்டும். திருமாவளவன் முதல்வராக வேண்டும் என்பதே ஒவ்வொரு தொண்டனின் கனவு. ஆனால், அதற்கு விசிகவை, அதன் தலைவரை தலித் அல்லாத மக்களும் ஏற்றுக்கொள்ள வேண்டும். ‘தேர்தல் அதிகார அரசியல்’ பாதையைக் கையிலெடுப்பவர்கள் தான் ‘நாளை நானே முதல்வர்’ என்ற அறிவிப்போடு கட்சி ஆரம்பிப்பார்கள். ‘கோட்பாட்டு உறுதி அரசியல்’ செய்வோர் கொள்கைகளை முன்னிறுத்தி அதன் மூலம் மக்களின் ஆதரவை, அபிமானத்தை முழுமையாகப் பெற முயற்சிப்பார்கள். அதுதான் திருமாவளவன் கையிலெடுத்துள்ள முயற்சி.

ஆட்சியில் அமர்வதற்கான விசிகவின் நீண்ட நெடிய பயணம் என்பது நிதானமானது. அதனால்தான் ஆதவ் அர்ஜுனாவின் எடுத்தோம், கவிழ்த்தோம் என்ற பேச்சுகளுக்கு எங்களின் தலைவர் எதிர்ப்பை பதிவு செய்கிறார். ஆதவ் மட்டுமல்ல, விசிகவில் யாரும் அதிகார மையமாக இருக்க முடியாது. விசிக-விலிருந்து ஒருவரைக் கூட பிற கட்சிகள் எதுவும் விலைக்கு வாங்க முடியாது. விஜய்யின் வருகையோ, ஆதவின் அதிரடி பேச்சுகளோ 2026-ல் விசிக திமுக கூட்டணியில் இருப்பதை எதுவும் செய்துவிடாது. ஆனால் 2031-ல் விசிகவின் நிலைப்பாட்டை அப்போதைய அரசியல் சூழல் முடிவு செய்யும். காலமும், களமும் அடுத்தடுத்த நகர்வுகளைத் தீர்மானிக்கும்” என்று விசிக மாநில துணை செயலாளர் இளைஞரணி தா.மாலின் நம்பிக்கை தெரிவிக்கிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x