Published : 07 Dec 2024 04:55 PM
Last Updated : 07 Dec 2024 04:55 PM
ஃபெஞ்சல் புயலால் ஏற்பட்ட கனமழையில் சாத்தனூர் அணை நிரம்பி 1 லட்சத்து 70 ஆயிரம் கனஅடிநீர் திறக்கப்பட்டதால், விழுப்புரம் மாவட்டத்தில் தென்பெண்ணை ஆறு மற்றும் மலட்டாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால் சித்தலிங்கமடம், புதுப்பாளையம், பையூர், தொட்டிகுடிசை, திருவெண்ணெய்நல்லூர், ஏமப்பூர், கிராமம், ஆலங்குப்பம், அரசூர் உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட கரையோர கிராமங்களில் வெள்ளநீர் புகுந்து கடும் சேதத்தை ஏற்படுத்தியது.
இந்த வெள்ளத்தில் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள ஏமப்பூர் கிராமத்தைச் சேர்ந்த கலையரசன் (57) என்பவரது வீடு கடந்த 1-ம் தேதி இரவு மூழ்கியது. கலையரசன் மற்றும் அவரது மனைவி சுந்தரி (50), மகன் புகழேந்தி (25) ஆகியோர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். உயிர் தப்பிக்க 3 பேரும் ஆற்றின் நடுவே இருந்த வேப்பமரத்தை பிடித்தனர். அந்த மரமும் சற்று நேரத்தில் வேரோடு பிடுங்கிக்கொண்டு ஆற்றில் அடித்து சென்றதால், மரத்தை பிடித்து இருந்த 3 பேரும் மீண்டும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். இதில் சுந்தரியும், புகழேந்தியும் மற்றொரு வேப்ப மரத்தின் கிளையைப் பற்றி கரை சேர்ந்தனர். ஆனால் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட கலையரசன் பரிதாபமாக உயிரிழந்தார்.
கிளையில் ஏறி அமர்ந்து காப்பாற்றும்படி சுந்தரியும், புகழேந்தியும் கதறினர். ஆனால், பெருவெள்ளத்தின் சத்தத்தில் யாருக்கும் அவர்களது குரல் கேட்கவில்லை. மறுநாள் 2-ம் தேதி பிற்பகல் பொதுமக்கள் சிலர் அவர்களைப் பார்த்து வீடியோ பதிவு செய்து, அவற்றை சமூக வலைதளத்தில் வெளியிட்டு ஆட்சியரின் உதவியை கோரினர். தகவலறிந்த ஆட்சியர் பழனி கேட்டுக்கொண்டதன் பேரில், கோவை சூலூர் விமானப்படை விமான தளத்தில் இருந்து ராணுவ ஹெலிகாப்டர் அனுப்பி வைக்கப்பட்டது. மாலை 6 மணிக்கு மேல் வந்த ஹெலிகாப்டரால் மரத்தில் அமர்ந்திருந்த தாய், மகனை அடையாளம் காண முடியவில்லை. இடி, மின்னல், மழை, இருட்டு காரணமாக சம்பவ இடத்தை துல்லியமாக கணிக்க முடியாமல் ஹெலிகாப்டர் திரும்பியது.
பின்னர் ஆற்றில் நீர்வரத்து குறைந்ததும், தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் விசைப்படகில் சென்று சுந்தரி, அவரது மகன் புகழேந்தி ஆகிய இருவரும் மீட்கப்பட்டனர். இதற்கிடையே தீயணைப்பு மற்றும் மீட்பு படையினரால் மலட்டாற்று நடுவே மண்ணில் புதையுண்ட நிலையில் இருந்த கலையரசனின் உடல் மீட்கப்பட்டது. இந்நிலையில் நேற்று முன் தினம் முதல்வர் அறிவித்த நிவாரண உதவித்தொகை பெறுவதற்காக விழுப்புரம் ஆட்சியர் அலுவலகம் வந்த புகழேந்தி நம்மிடம் கூறியது: எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமம் அணையை திறந்தார்கள். இரவு நேரத்தில் ஏன் அணையை திறந்தார்கள் என்பது தெரியவில்லை.
எங்களுக்கு குடியிருக்க வீடு இல்லை. கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம். மேலும் நாங்கள் வளர்த்த 4 மாடுகள், 2 கன்று குட்டிகள், 10 ஆடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. வெள்ளத்தில் சிக்கிய டிராக்டர், இன்னும் சரிசெய்யப்படவில்ல. இன்னும் அந்த திகில் அனுபவம் எனக்கும் எனது அம்மாவுக்கும் உள்ளது. இரவில் சரிவர தூக்கம் வருவதில்லை.
ஆட்சியர் எனக்கு அரசு வேலைக்கு சிபாரிசு செய்வதாக கூறியுள்ளார். எங்களுடைய 5 சென்ட் நிலத்தில், அரசின் திட்டத்தின் கீழ் இலவச வீடு தரவேண்டும் என்று வருத்தத்துடன் தெரிவித்தார். இந்த நிவாரணங்கள் அவர்களுடைய இழப்பை ஈடு செய்யாது என்றாலும், பெருவெள்ளத்தில் ஏற்பட்ட பெரு ரணத்துக்கு சிறு மருந்தாக அமையும். அரசு அதை நிச்சயம் செய்யும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT