Published : 07 Dec 2024 05:00 PM
Last Updated : 07 Dec 2024 05:00 PM
சென்னை: “வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் 200 தொகுதிகளில் வெல்லும் என்ற நம்பிக்கை வீணாகும் என்று ஒரு சிலர் அதிமேதாவிகளாக, தற்குறிகளாக களத்துக்கே வராதவர்கள் எல்லாம் பேசிக் கொண்டிருக்கிறார்கள். எங்களுடைய நிலைப்பாடு 200 அல்ல... 234 தொகுதிகளையும் வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக கைப்பற்றும்” என்று அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.
சென்னையில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு இன்று (டிச.7) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில், 200 தொகுதிகளில் வெல்லும் என்ற நம்பிக்கை வீணாகும் என்று ஒரு சிலர் அதிமேதாவிகளாக, தற்குறிகளாக களத்துக்கே வராதவர்கள் எல்லாம் பேசிக்கொண்டிருக்கிறார்கள். எங்களுடைய நிலைப்பாடு 200 அல்ல... 234 தொகுதிகளையும் வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக கைப்பற்றும்.
திமுகவுக்கு எப்போதெல்லாம் அவதூறுகள் ஏற்படுகிறதோ, அப்போதெல்லாம் 80 கி.மீ வேகத்தில் பயணித்துக் கொண்டிருக்கக் கூடிய திமுக தொண்டன் 100 கி.மீ வேகத்தில் பயணிப்பான். 2026-ல் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை மீண்டும் அரியணையில் ஏற்றும்வரை எங்களுடைய பயணம், வேகம் குறையாது,” என்று அவர் கூறினார்.
முன்னதாக,சென்னையில் வெள்ளிக்கிழமை நடந்த ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ நூல் வெளியீட்டு விழாவில் பேசிய தவெக தலைவர் விஜய், “மக்கள் உணர்வுகளை மதிக்க தெரியாத, மக்களுக்கு அடிப்படை பாதுகாப்பை கூட உறுதி செய்ய இயலாத, கூட்டணி கணக்குகளை மட்டுமே நம்பி, இறுமாப்புடன் 200 வெல்வோம் என்று எகத்தாள முழக்கமிடும் மக்கள் விரோத ஆட்சியாளர்களுக்கு, என் மக்களோடு இணைந்து நான்விடும் எச்சரிக்கை. நீங்கள், உங்கள் சுய நலனுக்காக பல வழிகளில் பாதுகாத்து வரும் உங்கள் கூட்டணி கணக்குகள் அனைத்தையும் 2026-ல் மக்களே மைனஸ் ஆக்கிவிடுவார்கள்” என்று பேசியிருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT