Published : 07 Dec 2024 02:46 PM
Last Updated : 07 Dec 2024 02:46 PM
சென்னை: “சமூக நீதியைப் பாதுகாக்கும் வகையில் காவல் உதவி ஆய்வாளர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பட்டியலை உடனடியாக தயாரித்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்து வெளியிட தமிழக அரசும், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையமும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாடு காவல் துறைக்கு 621 உதவி ஆய்வாளர்களை தேர்வு செய்வதற்காக கடந்த ஆண்டு மே மாதம் வெளியிடப்பட்ட அறிவிக்கையின் அடிப்படையில் நடத்தப்பட்ட தேர்வுகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியலை தமிழக அரசு இன்றுவரை வெளியிடவில்லை. உதவி ஆய்வாளர்கள் தேர்வில் இட ஒதுக்கீட்டை கடைபிடிப்பதில் நடந்த குளறுபடிகளை சரி செய்யும்படி சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவையும் தமிழக அரசு இன்னும் முழுமையாக செயல்படுத்தவில்லை. சமூக நீதி சார்ந்த இந்த சிக்கலில் தமிழக அரசும், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையமும் காட்டும் அலட்சியம் கண்டிக்கத்தக்கது.
உதவி ஆய்வாளர்கள் பணிக்கான தேர்வில், அதிக மதிப்பெண் பெற்றவர்களை பொதுப்போட்டிப் பிரிவில் நிரப்பி விட்டு, அதன் பிறகும் தான் இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான இடங்கள் நிரப்பப்பட வேண்டும். ஆனால், அதற்கு மாறாக, அதிக மதிப்பெண் பெற்ற இட ஒதுக்கீட்டுப் பிரிவினரை பொதுப்போட்டிப் பிரிவில் சேர்க்காமல் இட ஒதுக்கீட்டுப் பிரிவில் சேர்த்ததால் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் உள்ளிட்ட இட ஒதுக்கீட்டுப் பிரிவினர் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இட ஒதுக்கீட்டை கடைபிடிப்பதில் நிகழ்ந்த குளறுபடிகளை சரி செய்ய வேண்டும் என்று ஆணையிட்டது.
அதன்படி பழைய பட்டியலில் இருந்து 41 பேரை நீக்கி விட்டு, புதிதாக 41 பேர் சேர்க்கப்பட்டதாக தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்தது. ஆனால், அவர்களின் இட ஒதுக்கீட்டுப் பிரிவு, மதிப்பெண் உள்ளிட்ட எந்த விவரங்களும் வெளியிடப்படவில்லை. அதை எதிர்த்து மீண்டும் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அனைத்து விவரங்களுடன் கூடிய புதிய பட்டியலை நவம்பர் 18-ஆம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் கடந்த அக்டோபர் 28-ஆம் நாள் ஆணையிட்டது. ஆனால், அந்த ஆணையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் இன்னும் செயல்படுத்தவில்லை.
காவல் உதவி ஆய்வாளர் பணிக்கான தேர்வை தேர்வர்கள் எழுதி 15 மாதங்கள் நிறைவடைந்து விட்டன. அதன்படி தேர்வு செய்யப்பட்டவர்களின் முழுமையான பட்டியல் இன்னும் வெளியிடப்படாததால் தேர்வர்கள் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். எனவே, சமூகநீதியைப் பாதுகாக்கும் வகையில் காவல் உதவி ஆய்வாளர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பட்டியலை உடனடியாக தயாரித்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்து வெளியிட தமிழக அரசும், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையமும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT