Published : 07 Dec 2024 12:00 PM
Last Updated : 07 Dec 2024 12:00 PM
சென்னை: “விஜய்யின் மனது மேடையில் இல்லை. என்னை நோக்கியே இருந்திருக்கிறது. புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ள வேண்டாம் என்பது நான் சுதந்திரமாக எடுத்த முடிவு. கட்சியின் நலன், கூட்டணியின் நலன் கருதி சனாதன சக்திகளின் சூழ்ச்சிக்குப் பலியாகாமல் இருக்க வேண்டும் என்ற உறுதிப்பாட்டோடு எடுத்த முடிவு” என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் விசிக தலைவர் திருமாவளவன் சனிக்கிழமை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது நேற்று நடந்த புத்தக வெளியீட்டு நிகழ்வில், 'திருமாவளவன் மனது முழுக்க முழுக்க எங்களோடு தான் இருக்கும்' என்று தவெக தலைவர் விஜய் பேசியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “விஜய்யின் மனது மேடையில் இல்லை. என்னை நோக்கியே இருந்திருக்கிறது என்பதை மட்டும் என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. அவர் மேடையில் இருந்தாலும், நான் எங்கே இருக்கிறேன் என்பதை எண்ணிக்கொண்டே இருக்கிறார். அந்த நிகழ்ச்சியில் நான் கலந்து கொள்ளவில்லை என்பதில் அவருக்கு வருத்தம். ஓர் ஆதங்கம், அதனால் அவர் அவ்வாறு பேசியிருக்கிறார். மற்றபடி எனக்கு எந்த நெருடலும் இல்லை.
விழாவில் கலந்துகொள்ள வேண்டாம் என்பது நான் சுதந்திரமாக எடுத்த முடிவு. கட்சியின் நலன், கூட்டணியின் நலன் கருதி சனாதன சக்திகளின் சூழ்ச்சிக்குப் பலியாகாமல் இருக்க வேண்டும் என்ற உறுதிப்பாட்டோடு எடுத்த முடிவு. இந்த விழாவில் நான் பங்கேற்க இயலாமல் போனதற்கு, தவெக தலைவர் விஜய் கூறுவது போல எந்த அழுத்தமும், காரணமும் இல்லை. நான் சுதந்திரமாக எடுத்த முடிவு. தொடக்கத்திலேயே பதிப்பகத்தாரிடம் இதுகுறித்து விளக்கி கூறியிருக்கிறேன்.
விஜய்யும் நானும் ஒரே மேடையில் நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்கிற சூழல் இருந்தால், இதை வைத்து அரசியல் செய்யக்கூடிய சிலர், அல்லது அதற்கான செயல்திட்டத்தை வகுத்துக் காத்துக்கொண்டிருக்கிற சிலர், திரிபுவாதம் செய்வதற்கும், திசை திருப்புவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. எனவே, அதற்கு இடம் தரக்கூடாது என்ற அடிப்படையில் ஒரு தொலைநோக்குப் பார்வையோடுதான் இந்த முடிவை எடுப்பதாக விளக்கி கூறியிருந்தேன். விஜய் குறிப்பிடுவது போல திமுகவோ, அதன் தலைமையிலான கூட்டணிக் கட்சிகளோ, எனக்கு எந்த அழுத்தமும் தரவில்லை. அவ்வாறு அழுத்தத்துக்குப் பணிந்து, இணங்கி முடிவெடுக்க முடியாமல் தேங்கி நிற்கிற நிலையில் விசிகவும் நானும் இல்லை.” என்று அவர் கூறினார்.
| அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் தவெக தலைவர் விஜய் பேசியது என்ன? - வாசிக்க > “ஆட்சியாளர்களின் கூட்டணி கணக்குகள் 2026 தேர்தலில் எடுபடாது” - திமுக மீது விஜய் கடும் தாக்கு |
விசிக துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா பேச்சு குறித்த கேள்விக்கு பதிலளித்த திருமாவளவன், “ஏற்கெனவே உயர்நிலைக் குழுவில் நாங்கள் விவாதித்தப்படி, கட்டாயமாக ஆதவ் அர்ஜுனாவிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்புவோம். அவர் விசிகவில் முக்கியமான ஒரு பொறுப்பில் இருக்கிறார். துணைப் பொதுச் செயலாளர் என்பது ஒரு முன்னணி பொறுப்பு. எடுத்தோம், கவிழ்த்தோம் என்ற ஒரு நிலைப்பாட்டை இதுவரை நாங்கள் யார் மீதும் எடுத்ததில்லை. எனவே, கட்சியின் முன்னணி நிர்வாகிகளுடன் கலந்துபேசி, கட்சியின் கட்டுப்பாட்டுக்கும், கட்சியின் கட்டுப்பாட்டைக் கேள்விக்குள்ளாக்கக் கூடிய வகையில், ஆதவ் அர்ஜுனா பேசி வருகிறார் என்ற நிலையில், உயர்நிலைக் குழுவில் ஏற்கெனவே நாங்கள் விவாதித்தப்படி அறிக்கை அனுப்புவோம்,” என்று அவர் கூறினார்.
சென்னையில் நடந்த மற்றொரு நிகழ்வில் கலந்துகொள்ள சென்ற திருமாவளவனிடம், ஆதவ் அர்ஜுனாவை கட்சியில் இருந்து நீக்க மூத்த நிர்வாகிகள் அழுத்தம் கொடுக்கின்றனரா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “ஆதவ் அர்ஜுனாவை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்று யாரும் எந்த அழுத்தமும் கொடுக்கவில்லை. அவருடைய பேச்சு கூட்டணி நலன் மற்றும் கட்சி நலனுக்கு எதிராக இருக்கிறது என்ற கருத்தை கட்சி நிர்வாகிகள் என்னுடன் பகிர்ந்துகொண்டனர். ஆதவ் அர்ஜுனாவை கட்சியில் இருந்து யாரும் நீக்க வேண்டும் என்ற எந்த அழுத்தத்தையும் கொடுக்கவில்லை. ஆதவ் அர்ஜுனா பேசியது தவறு. அவர் பேசியது தன்னுடைய கருத்தாக இருந்தாலும்கூட, விசிகவில் அவர் துணைப் பொதுச் செயலாளராக இருக்கிறார். அது கட்சியின் கருத்தாகத்தான் மக்களால் பார்க்கப்படும்” என்றார் திருமாவளவன்.
> அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? - வாசிக்க > “2026-ல் மன்னராட்சி ஒழிக்கப்படும்...” - விஜய் மேடையில் விசிக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா பேச்சு
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT