Published : 07 Dec 2024 01:27 PM
Last Updated : 07 Dec 2024 01:27 PM

மீண்டும் பூதாகரமாகும் வருண்குமார் ஐபிஎஸ் - சீமான் கருத்து மோதல்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கும் திருச்சி மாவட்ட எஸ்பி-யான வருண்குமாருக்கும் இடையிலான கருத்து மோதல் மீண்டும் கணகணக்க ஆரம்பித்திருக்கிறது. சில மாதங்​களுக்கு முன்பு, நாதக நிர்வாகி சாட்டை துரைமுருகன் ஒரு குறிப்​பிட்ட சமூகத்​தினரை இழிவு​படுத்திப் பேசியதாக புகார் வெடித்தது.

இது தொடர்பாக அவரை கைது செய்த திருச்சி போலீஸார், அவரது செல்போனையும் பறிமுதல் செய்தனர். இதைத் தொடர்ந்து நாதக மகளிர் பாசறையின் மாநில ஒருங்​கிணைப்​பாளர் காளியம்மாள் குறித்து சீமான் பேசியதாக சர்ச்​சைக்​குரிய ஆடியோ ஒன்று சமூக ஊடகங்​களில் வெளியானது. அப்போது இதன் பின்னணியில் திருச்சி எஸ்பி-யான வருண்​குமார் இருப்பதாக சீமான் வெளிப்​படை​யாகவே குற்றம்​சாட்​டி​னார். இதையடுத்து, வருண்​குமார் மற்றும் அவரது மனைவி​யும், புதுக்​கோட்டை மாவட்ட எஸ்பி-​யுமான வந்திதா பாண்டே ஆகியோரை அநாகரிகமாக விமரிசித்து நாதகவினர் சமூக ஊடகங்​களில் கருத்துகளை பதிவிட்​டனர்.

இவர்களுக்கு வருண்​குமார் சமூக ஊடகங்​களில் தொடர்ந்து பதிலடி கொடுத்​தார். மேலும், இவ்வாறு பதிவிடத் தூண்டியதாக சீமான் மீதும், மற்றும் அவதூறு கருத்து​களைப் பரப்பியதாக 22 பேர் மீதும் திருச்சி தில்லைநகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து அதில் இருவரை கைது செய்தனர். அத்துடன், சமூக ஊடகங்​களி​லிருந்து வெளியேறிய வருண்​கு​மார், தனது குடும்பத்​தினர் மீது அவதூறு பரப்பும் நாதக-​வினர் மீது மானநஷ்ட வழக்கு தொடரப்​போவதாக அறிவித்​தார்.

அத்தோடு இரு தரப்பினரும் அமைதி​யாகி​விட்ட நிலையில், இப்போது மீண்டும் வெடிக்கத் தொடங்​கி​யுள்​ளனர். பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் அண்மையில் சண்டிகரில் ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாட்டை தொடங்கி வைத்தனர். நாடு முழுவதும் திறம்பட செயல்​படும் நூற்றுக் கணக்கான போலீஸ் அதிகாரிகள் இந்த மாநாட்​டிற்கு அழைக்​கப்​பட்​டிருந்​தனர்.

வருண்​கு​மாரையும் இந்த மாநாட்டில் பங்கேற்க அழைத்​திருந்த உள்துறை அமைச்​சகம், நாடு முழுவது​மிருந்து வந்திருந்த 22 ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட குழு ஒன்றுக்கு அவரைத் தலைமையேற்று சைபர் க்ரைம், இணையதள மிரட்டல் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்​தும், அதனை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றி விளக்​கும்​படியும் அறிவுறுத்​தி​யிருந்தது.

இக்கூட்​டத்தில் பேசிய வருண்​கு​மார், சைபர் குற்றங்​களால் ஒரு ஐபிஎஸ் அதிகாரியான தானும் தன்னுடைய குடும்பத்​தினருமே தமிழ்​நாட்டில் பாதிக்​கப்​பட்​ட​தாக​வும், அதற்கு காரணம், நாம் தமிழர் என்ற கட்சி என்றும், இந்த கட்சியை சேர்ந்​தவர்கள் பிரிவினை​வாதத்தை தூண்டு​வ​தாக​வும், அந்தக் கட்சியை கண்காணிக்க வேண்டும் எனவும் பேசினார்.

ஏற்கெனவே, என்ஐஏ உள்ளிட்ட தேசிய அமைப்பு​களின் சோதனை வளையத்தில் இருக்கும் நாதக குறித்து, தேசிய அளவிலான ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாட்டில் பகிரங்கமாக வருண்​குமார் ஐபிஎஸ் பேசியுள்ள​தால், அந்த கட்சிக்கு மேலும் சிக்கல் ஏற்படலாம் என்று கூறப்​படு​கிறது. இந்நிலை​யில், நேற்று முன் தினம் கோவையில் செய்தி​யாளர்​களிடம் பேசிய சீமான், “ரொம்ப நாளாக அவர் (வருண்​கு​மார்) எங்களை கண்காணித்துக் கொண்டிருக்​கிறார்.

நாம் தமிழர் கட்சி இந்திய அரசியலமைப்பின் படி பதிவுசெய்​யப்​பட்டு, 13 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. தனித்து நின்று போட்டி​யிட்டு 36 லட்சம் வாக்குகள் பெற்ற கட்சியை, பிரிவினைவாத இயக்கம், கண்காணிக்க வேண்டும் என எந்த அடிப்​படையில் கூறுகிறார்? அவருக்கு மட்டும் தான் குடும்பம் இருக்​கிறதா? என்னை, என் குடும்பத்​தினரை இழிவாக பேசியதற்கு வழக்குப் போடுவாரா? இந்த காக்கி உடையில் எத்தனை ஆண்டுகள் இருப்​பார்? 30, 40 ஆண்டுகள் கழித்து இறங்கித்தானே ஆக வேண்டும். நாங்கள் இங்கேயே தான் இருப்​போம். பார்த்துப் பேச வேண்டும். மோதுவோம் என்றாகி​விட்டது, வா மோதுவோம்” என சவால் விட்டிருப்பது விவகாரத்தை மேலும் சூடாக்கி இருக்​கிறது

இதுகுறித்து வருண்​கு​மாரின் கருத்தை அறிய அவரது செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டோம். அவரை தொடர்​பு​கொள்ள முடிய​வில்லை. அடங்கிக் கிடந்த விவகாரம் மீண்டும் கணகணக்கத் தொடங்கி இருக்​கிறது. என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்க்​கலாம்​!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x