Published : 07 Dec 2024 06:20 AM
Last Updated : 07 Dec 2024 06:20 AM
தாம்பரம்: பல்லாவரம் கண்டோன்மெண்ட் பகுதி மற்றும் பல்லாவரம் பகுதிகளில் குடிநீரில் கழிவுநீர் கலந்துள்ளதா என்பது குறித்து தண்ணீர் மாதிரி பரிசோதனைக்காக கிங் இன்ஸ்டிடியூட் ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: பல்லாவரம் கண்டோன்மெண்ட் பகுதி மற்றும் பல்லாவரம் பகுதிகளில் குடிநீரில் கழிவுநீர் கலந்தது என்ற புகாரின் அடிப்படையில் குரு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பல்லாவரம் தொகுதி எம்எல்ஏ, தாம்பரம் மாநகராட்சி ஆணையர், பல்லாவரம் மண்டலக்குழு தலைவர் உள்ளிட்டோர் பல்லாவரம் கண்டோன்மெண்ட் மற்றும் தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பல்லாவரம் காமராஜர் நகர் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
பல்லாவரம் கண்டோன்மெண்ட் பகுதியில் வரலட்சுமி (88) மற்றும் மோகனரங்கா (42) வசித்து வந்தனர். இதில் மோகனரங்கா மருத்துவமனைக்கு கொண்டும் செல்லும் வழியில் இறந்துவிட்டார். பல்லாவரம் காமராஜர் நகரில் உள்ள உறவினர் வீட்டுக்கு மாங்காடு பகுதியில் இருந்து வந்த திரிவேதி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது வழியிலேயே உயிரிழந்தார்.
மோகனரங்கா, திரிவேதி இரண்டு பேரின் உடல்களும் உடற்கூறாய்வுக்கு செய்து, இறந்ததற்கான காரணம் தரமற்ற உணவா, குடிநீரா அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளனவா என்பது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.
பல்லாவரம் கண்டோன்மெண்ட் பகுதியில் 5 இடங்களிலும், தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பல்லாவரம் காமராஜர் நகர் பகுதியில் 5 இடங்களில் தண்ணீர் மாதிரி பரிசோதனை செய்ய கிங் இன்ஸ்டிடியூட் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆய்வகத்தில் இருந்து 3 தினங்களுக்குள் அறிக்கை வரப்பெறும். இந்நிகழ்வை தொடர்ந்து தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பல்லாவரம் காமராஜர் நகரில் தனியார் குடிநீர் வாகனம் மூலம் குடிநீர் விநியோகம் செய்த வாகனம், மாநகராட்சி மூலம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பல்லாவரம் கண்டோன்மெண்ட் பகுதியில் 3 இடங்களிலும், தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பல்லாவரம் காமராஜர் நகரில் 3 இடங்களில் உள்ள பொதுமக்களுக்கு மருத்துவ முகாம் மேற்கொள்ளப்பட்டு அவர்களுக்கு டாக்சிசைக்ளின், எரித்ரோமைசின், சிங்க் மாத்திரைகள் மற்றும் ஓஆர்எஸ் பவுடர் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT