Published : 07 Dec 2024 06:15 AM
Last Updated : 07 Dec 2024 06:15 AM
சென்னை: தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் பட்டியலின மக்களுக்கு எதிரான குற்றங்கள் 40 சதவீதம் அதிகரித்துள்ளதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அம்பேத்கர் மக்கள் இயக்கம் சார்பில் பி.ஆர்.அம்பேத்கரின் 69-வது நினைவு தின விழா சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நேற்று நடைபெற்றது. விழாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமை வகித்து, வெவ்வேறு துறைகளில் சிறப்பாக செயல்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட 10 நபர்களுக்கு விருதுகளை வழங்கி கவுரவப்படுத்தினார். அதன்படி நடிகர் பிரேம்ஜி, பாடகர்கள் செந்தில் கணேஷ், ராஜலட்சுமி உள்ளிட்டோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது: அம்பேத்கர் உருவாக்கிய அரசியலமைப்பு சட்டமானது நமது நாடு எதை நோக்கி செல்லவேண்டும் என்பதற்கான கனவை தாங்கி நிற்கிறது. இதில் சமுகநீதி, பொருளாதாரம், அரசியல் என அனைத்தையும் குறிப்பிட்டிருக்கிறார் அம்பேத்கர். சமூகநீதி என்பது அவர்களுக்கு மட்டுமே சொந்தமானது என சிலர் நினைக்கின்றனர். ஆனால் அம்பேத்கர் உருவாக்கிய அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படையே சமூக நீதிதான்.
அம்பேத்கர் பெயரை சிலர் அரசியல் ஓட்டுகளுக்காக மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர். 75 ஆண்டு சுதந்திரத்துக்கு பிறகும் கூட இன்றைக்கு பட்டியலின மக்கள் கோயில்களுக்குள் அனுமதிக்க மறுக்கப்படுகின்றனர். பட்டியலின மக்கள் குடிக்கும் குடிநீர் தொட்டியில் மலம் கழிக்கப்படுகிறது. சில பள்ளிகளில் பட்டியலின மாணவர்கள் தனித்து அமர்த்தப்படுகின்றன. அந்தவகையில் 75 ஆண்டுகள் கடந்தும் நம் சமூகநீதியை நாம் அடையவில்லை.
ஆனால் சமூகநீதி குறித்து மட்டும் பேசிக்கொண்டே இருக்கிறோம். இதெல்லாம் தமிழகத்தில் நடந்து கொண்டிருப்பது தான். தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் பட்டியலின மக்களுக்கு எதிரான குற்றங்கள் 40 சதவீதம் அதிகரித்து இருக்கிறது. நம் மாநிலத்தில் பட்டியலின பெண்களை கற்பழிப்பவர்களுக்கு வழங்கப்படும் தண்டனை விகிதம் தேசிய சராசரியை விட பாதிக்கும் குறைவாகவே உள்ளது. இவையெல்லாம் மிகவும் கவலை அளிக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்வில் தமிழ்நாடு அம்பேத்கர் மக்கள் இயக்கத்தின் தலைவர் இளமருகு முத்து, தேசிய ஆதிதிராவிடர் நல ஆணையத்தின் இயக்குநர் எஸ்.ரவிவர்மன், வி.வரபிரசாத் ராவ் ஐஏஸ், மருத்துவர் திலிப் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT