Published : 07 Dec 2024 06:08 AM
Last Updated : 07 Dec 2024 06:08 AM
சென்னை: பதிவுத் துறையில் இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த 5-ம் தேதி ஒரே நாளில் பத்திரப் பதிவு மூலம் ரூ.238.15 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் வருவாய் ஈட்டுவதில் முக்கிய துறையாக விளங்குவது பதிவுத் துறை. இந்நிலையில், இத்துறையின் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் கடந்த நவம்பர் மாதத்தில் ரூ.1,984.02 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.
வசூலில் புதிய மைல்கல்: அந்த வகையில், கடந்த 2023 நவம்பர் மாதத்தைவிட கூடுதலாக ரூ.301.87 கோடி வருவாய் ஈட்டி சாதனை படைக்கப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் 5-ம் தேதி கார்த்திகை மாத சுபமுகூர்த்த நாளில் ஆவணங்கள் அதிக அளவில் பதிவுக்கு தாக்கல் செய்யப்படும் என்பதால் சிறப்பு நிகழ்வாக, மக்கள் பயன் பெறும் வகையில் முன்பதிவு டோக்கன் எண்ணிக்கை 100-ல் இருந்து 150 ஆக உயர்த்தப்பட்டது.
இந்த டோக்கன்களை பயன்படுத்தி, கடந்த 5-ம் தேதி ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவில் ரூ.238.15 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இதன்மூலம் ஒருநாள் வருவாய் வசூலில் புதிய மைல்கல்லை பதிவுத் துறை எட்டியுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT