Published : 07 Dec 2024 05:39 AM
Last Updated : 07 Dec 2024 05:39 AM
சென்னை: மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று வெளியிட்ட அறிக்கை: தொழிலதிபர் அதானியை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்தது போலவும், அதிக விலை கொடுத்து அதானியிடம் இருந்து சூரிய ஒளி மின்சாரம் பெற ஒப்பந்தம் போட்டிருப்பது போலவும் தொடர்ந்து எதிர்க்கட்சிகளும், ஊடகங்களும் கற்பனையான தகவலை கட்டுக்கதைகள் போல் வெளியிட்டு வருகின்றன.
தமிழக முதல்வர் அதானியைச் சந்திக்கவும் இல்லை. அதானி நிறுவனத்துடன் நேரடியாக சூரிய ஒளி மின்சாரம் பெற எந்த ஒப்பந்தமும் போடவும் இல்லை. பிற மாநிலங்களைச் சேர்ந்த மின்சார வாரியங்களைப் போல தமிழ்நாடு மின்வாரியமும் மத்திய அரசின் சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்துடன் மட்டுமே மின்சாரம் கொள்முதல் செய்து வருகிறது.
மத்திய அரசால் கட்டாயமாக்கப்பட்டுள்ள மரபுசாரா கொள்முதல் இலக்குகளை அடைவதற்கு, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதல் பெற்று செய்யப்பட்ட ஒப்பந்தங்களாகும். இதில், எவ்வித முறைகேடும், விதிமுறை மீறல்களும் இல்லை.
ஆகவே, இது சம்பந்தமாக 2024-ம் ஆண்டு அதானி நிறுவனத்தின் பிரதிநிதியை முதல்வர் சந்தித்ததாக கூறுவது முற்றிலும் தவறான தகவல். இதுதொடர்பாக, பொய் தகவல்களைத் தொடர்ந்து பரப்புவார்களேயானால், அவர்கள் மீது கடும் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT