Published : 06 Dec 2024 09:09 PM
Last Updated : 06 Dec 2024 09:09 PM
கோத்தகிரி: வாக்குகளை குறித்தும், தேர்தலை குறித்தும் சிந்திக்கும் ஆட்சி, எப்படி மக்கள் சேவையை பற்றி சிந்திக்கும் என திமுக அரசை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார். மேலும், அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவுக்கு என்னையும் அழைத்தனர் என்று அவர் கூறினார்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் செயல் வீரர்கள் கலந்தாய்வு கூட்டம் இன்று நடைபெற்றது. கோத்தகிரியில் உள்ள படுகர் இன மக்களின் குலதெய்வமான ஹெத்தையம்மன் கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்து, படுகர் இன மக்களின் குலதெய்வமான ஹெத்தையம்மனுக்கு காணிக்கை செலுத்தி சிறப்பு வழிபாடு செய்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், "ஒரு ஐபிஎஸ் அதிகாரி செய்கிற தவறால் ஆயிரக்கணக்கான ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு கெட்ட பெயரை உண்டாக்குகிறது. ஒரு கட்சியை எதிர்த்து தொடர்ச்சியாக குரல் செய்தியை வெளியிடுவது, கைது செய்து அலைபேசியில் உள்ள குரல் செய்தியை எடுத்து அதை ஒரு கட்சியின் தகவல் தொழில்நுட்பப் பிரிவுக்கு கொடுத்து அதை வெளியிடுவது, எங்கோ ஒரு இடத்தில் தவறு செய்தால் அவரை கைது செய்து அடித்து, சிறைப்படுத்துவது சித்தரவதை செய்வது என்பது அவருடைய வேலை இல்லை. ஆனால், அவர் செய்கிறார். அதை இந்த அதிகாரம் ரசிக்கிறது.
தற்போது உள்ள ஆட்சியாளர்கள் இதை ரசிக்கிறார்கள். ஆனால் முன்பிருந்த ஆட்சியாளர்கள் ஜெயலலிதா, எடப்பாடி பழனிச்சாமி இருக்கும் பொழுதும், அதற்கு முன்னாள் இருந்த ஆட்சியாளர்கள் இருந்த பொழுது இதுபோன்று நடந்துள்ளதா? அதை எதிர்கொள்வோம். புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருந்தால் இவ்வளவு இழப்புகள் வந்திருக்காது. மூன்று மாதத்துக்கு முன்பு ஒரு பாலம் கட்டி திறந்து வைத்தது பொதுப்பணித் துறை அமைச்சர். ஆனால், கனமழையின் போது அந்த பாலம் இருந்த சுவடே இல்லாமல் இடிந்துள்ளது.
எந்த தன்மையில் அந்தப் பாலத்தைக் கட்டி உள்ளார்களோ அதேபோலத்தான் தற்போது உள்ள ஆட்சியும் உள்ளது. இது எல்லாமே ஒரு ஏமாற்றமாகவே தான் உள்ளது. எத்தனை அரசு பள்ளிக்கூடங்களில் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. அதில் எத்தனை மாணவர்கள் காயமடைகின்றனர். அரசு குடியிருப்பு கட்டிக் கொடுத்த குடிசை மாற்று குடியிருப்பு இடிந்து விழுந்து ஒருவர் உயிரிழந்து உள்ளார். அவர் குடிச்சையில் இருந்து இருந்தால் கூட அவர் உயிரோடு இருந்திருப்பார். ரூ.2000 நிவாரணம் கொடுத்து முடித்து விடலாம் என நினைப்பார்கள் நிரந்தர தீர்வு என்ன.
நெற்பயிர்கள் சேதம் ஆகிவிட்டது. ரூ.2000 ரூபாய் கொடுத்தால் என்ன செய்ய முடியும். குடும்பத் தலைவிக்கு ஆயிரம் ரூபாய், படிக்கச் செல்லும் இளம் பெண்களுக்கு ஆயிரம் ரூபாய், படிக்கின்ற மாணவர்களுக்கு தமிழ் மகன் தொகை என கொடுத்தே வாக்குகளை குறித்தும், தேர்தலை குறித்தும் சிந்திக்கும் கட்சியின் ஆட்சியில் எப்படி மக்கள் சேவையை பற்றி சிந்திக்க முடியும். இரண்டாயிரம் வைத்து மக்கள் என்ன செய்ய முடியும் இதைப்பற்றி மக்கள் கேட்டால் மத்திய அரசு எந்த நிதியும் வழங்கவில்லை என கூறுவார்கள்.
எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவுக்கு என்னையும் அழைத்தனர். முதல்வர் ஸ்டாலின், காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி உள்ளிட்ட பலரையும் அழைத்திருந்தனர். திருமாவளவன் வெளியிட்டு நான் பெற்றிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். தம்பி விஜய், அம்பேத்கர் புத்தகத்தை வெளியிடுவதை வரவேற்கிறேன். அம்பேத்கரை மக்கள் மத்தியில் யார் கொண்டு சேர்த்தாலும் மகிழ்ச்சி தான். 2026-ம் ஆண்டு தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்தே போட்டியிடும்” என்று சீமான் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT