Published : 06 Dec 2024 01:17 PM
Last Updated : 06 Dec 2024 01:17 PM

சொன்னதைச் செய்வாரா ஸ்டாலின்? - திமுகவுக்கு எதிராக திரும்பும் கும்பகோணம் தனி மாவட்ட கோரிக்கை

ஒரு காலத்தில் சோழ சாம்ராஜ்யத்தின் தலைநகராக விளங்கிய நகரம் கும்பகோணம். மாவட்ட தலைநகருக்கான அனைத்துத் தகுதிகளும் இருப்பதால் கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என இங்குள்ள அரசியல் கட்சிகளும், பொதுநல அமைப்புகளும் 26 ஆண்டுகளாக போராடி வருகின்றனர்.

இந்த நிலையில், கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது செம்ப​னார்​கோவில் மற்றும் ஒரத்த​நாட்டில் பிரச்​சாரம் செய்த திமுக தலைவர் ஸ்டாலின், “திமுக ஆட்சிக்கு வந்ததும் 100 நாட்களில் கும்பகோணம் தனி மாவட்டமாக அறிவிக்​கப்​படும்” என கும்பகோணத்து வாக்காளர்​களுக்கு நம்பிக்கையளித்​தார். இதோ, அடுத்த தேர்தலும் வரப்போகிறது. இன்னும் அந்த வாக்குறுதியை நிறைவேற்றித் தரவில்லையே ஸ்டாலின் என கும்பகோணத்து மக்கள் குறைபட்டுக் கொள்கிறார்கள்.

வி.சத்தியநாராயணன்

இது தொடர்பாக நம்மிடம் பேசிய கும்பகோணம் அனைத்து தொழில் வணிகர் சங்க கூட்டமைப்பு மற்றும் மாவட்ட வணிகர் சங்கங்​களின் பேரமைப்பின் செயலாளர் வி.சத்​தி​ய​ நா​ராயணன், “கும்​பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்பது எங்களின் கால் நூற்றாண்டு கால போராட்டம்.

கடந்த தேர்தலில் ஸ்டாலின் கொடுத்த வாக்குறுதியை நம்பி, இப்பகு​தியில் உள்ள 3 தொகுதி​களில் திமுகவை வெற்றிபெற வைத்தார்கள் மக்கள். அப்படி வாக்களித்த மக்கள் எல்லாம் தற்போது, சொன்னதைச் செய்ய​வில்லையே என திமுக மீது வருத்​தத்தில் இருக்​கிறார்கள். இது, வரும் தேர்தலில் திமுக​வுக்கு நிச்சயம் பாதிப்பை உண்டாக்​கும்” என்றார்.

கே.எஸ்.சேகர்

கும்பகோணம் புதிய மாவட்டம் கோரும் போராட்ட ஒருங்​கிணைப்புக் குழுவின் துணைத் தலைவர் கே.எஸ்​.சேகர் நம்மிடம் பேசுகை​யில், “கடந்த அதிமுக ஆட்சி​யில், இந்தப் பிரச்​சினைக்காக நாங்கள் பல்வேறு போராட்​டங்களை நடத்தினோம். அப்போதெல்லாம் திமுக எம்பி, எம்எல்​ஏ-க்கள் மற்றும் நிர்வாகிகள் அதில் பங்கேற்று எங்களின் குரலாக பேசினார்கள்.

ஆனால், அவர்கள் எல்லாம் தற்போது மக்களின் எண்ணத்தை தலைமைக்கு எடுத்துச் சொல்லாமல் மவுனமாக இருக்​கிறார்கள். வருகின்ற சட்டமன்றக் கூட்டத் தொடரில் கும்பகோணம் தனி மாவட்டமாக அறிவிக்​கப்​ப​டா​விட்​டால், இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி திமுக அரசுக்கு எதிராக நாங்கள் போராட்​டத்தில் குதிப்​போம்” என்றார்.

க.அன்பழகன்

இந்தப் பிரச்சினை தொடர்பாக கும்பகோணம் திமுக எம்எல்​ஏ-வான சாக்கோட்டை க.அன்​பழக​னிடம் கேட்டதற்கு, “விரைவில் தமிழக முதல்வர் கும்பகோணத்தை தலைமை​யிட​மாகக் கொண்ட புதிய மாவட்​டத்தை அறிவிப்​பார்” என்று ஒற்றை வரியில் முடித்துக் கொண்டார்.

1996 முதல் இதுவரை நடந்துள்ள 6 சட்டமன்றத் தேர்தல்​களிலும் தொடர்ச்​சியாக திமுகவை ஜெயிக்க வைத்திருக்​கிறார்கள் கும்பகோணம் தொகுதி மக்கள். அதற்காக​வாவது அவர்களின் இந்தக் கோரிக்கைக்கு செவிசாய்த்து திமுக அரசு கும்பகோணத்தை தலைமை​யிடமாக கொண்டு புதிய​மாவட்​டத்தை அவர்களுக்கு பரிசளிக்கும் என எ​திர்ப்​பார்​ப்​போம்!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x