Published : 06 Dec 2024 12:54 PM
Last Updated : 06 Dec 2024 12:54 PM

இனி தென்பெண்ணை - பாலாறு இணைப்பு திட்டம்தான்: அமைச்சர் துரைமுருகன் வாக்குறுதி

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில்‌ குடியாத்தம் கவுன்டன்யா ஆற்றின் குறுக்கே தாழையாத்தம் மற்றும் சுண்ணாம்புபேட்டை இடையே ரூ.8.41 கோடி மதிப்பீட்டில் தரைப்பாலம் அமைக்கும் பணி, திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் வட்டம் கதவாளம் கானாற்றின் குறுக்கே ரூ.6 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை அமைக்கும் பணி மற்றும் வெள்ளக்கல் அருகே கானாற்றின் குறுக்கே ரூ.4 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை அமைக்கும் பணிகளுக்கு அமைச்சர் துரைமுருகன் நேற்று அடிக்கல் நாட்டினார். அருகில், மாவட்ட ஆட்சியர்கள் வி.ஆர்.சுப்புலட்சுமி, தர்ப்பகராஜ் உள்ளிட்டோர். | படம்: வி.எம்.மணிநாதன் |

குடியாத்தம்: தென்பெண்ணை - பாலாறு இணைப்பு திட்டத்தை இனி செயல்படுத்த போகிறேன் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார். வேலுர் மாவட்டம் குடியாத் தத்தில் கவுன்டன்யா ஆற்றின் குறுக்கே தாழையாத்தம் மற்றும் சுண்ணாம்புபேட்டை இடையே ரூ.8.41 கோடி மதிப்பீட்டில் தரைப்பாலம் அமைக்கும் பணி, திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் வட்டம் கதவாளம் கானாற்றின் குறுக்கே ரூ.6 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை அமைக்கும் பணி மற்றும் வெள்ளக்கல் அருகே கானாற்றின் குறுக்கே ரூ.4 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை அமைக்கும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது.

இந்த திட்டங்களை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தொடங்கி வைத்து பேசும்போது, ‘‘எனது இளம் வயதில் இந்த குடியாத்தம் நகரில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ், அண்ணாவின் பேச்சுகளை எல்லாம் கேட்டுள்ளேன். குடியாத்தத்தில் நடிகர் எஸ்.எஸ்.ஆர் நாடகத்தை பார்த்துள்ளேன்.

எனது தொகுதிக்கு போக்குவரத்து காவல் நிலையத்தை கொண்டுவர வேண்டும் என கருணாநிதியிடம் சட்டப்பேரவையில் துண்டு சீட்டு கொடுத்து கேட்டபோது சுதந்திர போராட்ட காலத்து ஊரான குடியாத்தத்துக்கும் சேர்த்து போக்குவரத்து காவல் நிலையம் வேண்டும் என கேட்டுப்பெற்று வந்தேன்.

இங்கு கவுன்டன்யா ஆற்றின் கரையோரம் அழகான சாலை அமைத்து கொடுத்துள்ளேன். அதை பாதுகாக்க வேண்டிய கடமை உங்களுடையது. அங்குள்ள டாஸ்மாக் மதுபானக் கடையை அகற்றி கொடுத்த ஆட்சியரை பாராட்டுகிறேன்.

அதேபோல், அங்கு இருந்த எதிர்கட்சி தலைவர்களின் சிலையை அதிமுக நிர்வாகிகளிடம் பேசி சற்று நகர்த்தி கொடுத்து சாதித்துள்ளார் நந்தகுமார். இதற்கு உதவிய அதிமுக நண்பர்களுக்கும் நன்றி சொல்லிக்கொள்கிறேன். மோர்தானா அணை பகுதியில் அழகான பூங்காவுடன் சுற்றுலாத் தலமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

மேல்அரசம்பட்டு அணைக்காக ஆம்பூர் பகுதியில் நிலம் ஒதுக்கீடு செய்து கொடுத்த திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியருக்கும் எனது பாராட்டுக்கள். நாம் மக்களுக்கு செய்தால் மக்கள் நமக்கு செய்வார்கள். நாம் மக்களை மறந்தால் மக்கள் நம்மை மறந்துவிடுவார்கள். தென்பெண்ணை ஆற்றில் அதிகமான தண்ணீர் வந்ததால் பிரச்சினை வந்தது. கிருஷ்ணகிரி அணையில் இருந்து வந்த தண்ணீர் சாத்தனூர் அணைக்கு செல்லும். அங்கிருந்து கடலுக்கு செல்கிறது.

எனவே, இதுதான் சரியான நேரம். எப்படியாவது தென்பெண்ணை ஆற்றில் வழிந்து வரும் தண்ணீரை திருப்பத்தூரில் உள்ள காக்கங்கரை ஏரிக்கு கொண்டு வந்துவிட்டால் அங்கிருந்து பாலாற்றில் கலக்கவிட்டால் எப்போதும் பாலாற்றுக்கு தண்ணீர் வந்துகொண்டே இருக்கும். இதை வேறு யாரும் செய்ய முடியாது.

நான் இருக்கும் காரணத்தால் நான் செய்வேன். நான் இதுவரை 48 அணை கட்டி இருக்கிறேன். இனி அணை கட்ட இடமில்லை. இதனால், தடுப்பணைகளை கட்டி வருகிறேன். எனது தொகுதிக்கு எல்லாம் செய்துவிட்டேன். வரும் பட்ஜெட்டில் எனது தொகுதிக்கு சிப்காட் வந்துவிடும். இனி மற்ற தொகுதிகளுக்கு செய்யப்போகிறேன்’’ என்றார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர்கள் வி.ஆர்.சுப்புலட்சுமி (வேலூர்), தர்ப்பகராஜ் (திருப்பத்தூர்), சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஏ.பி. நந்தகுமார் (அணைக்கட்டு), தேவராஜி (ஜோலார்பேட்டை), அமலு விஜயன் (குடியாத்தம்), வில்வநாதன் (ஆம்பூர்), குடியாத்தம் நகராட்சி மன்றத் தலைவர் சௌந்தரராசன், மேல்பாலாறு வடிநில கோட்ட கண்காணிப்பு பொறியாளர் ரமேஷ், செயற்பொறியாளர் பிரபாகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் துரைமுருகன் கூறும்போது, ‘‘தென்பெண்ணை பாலாறு இணைப்பு திட்டத்தை வரும் பட்ஜெட்டுக்குள் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்போகிறேன்’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x