Published : 06 Dec 2024 06:10 AM
Last Updated : 06 Dec 2024 06:10 AM
சென்னை: வேளாங்கண்ணியில் இருந்து சென்னைக்கு பகல் நேரத்தில் விரைவு ரயில் இயக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் நாகப் பட்டினம் தொகுதி எம்.பி.வை.செல்வராஜ் வலியுறுத்தினார்.
இதுதொடர்பாக நாடாளுமன்றத்தின் மக்களவையில் நேற்று முன்தினம் அவர் பேசியதாவது: இந்திய ரயில்வே துறை மிகப் பெரிய அளவில் சேவையாற்றும் ஒரு பொதுத் துறையாகும். தினசரி செய்தித்தாள்களில் எதிரே வந்த ரயிலுடன் மோதல், மொழி பிரச்சினையால் பயணிகளுக்கும் ரயில்வே ஊழியருக்கும் மோதல் என பல செய்திகள் வருகின்றன. இதை படிக்கும்போது, அச்சம் ஏற்படுகிறது. காலத்துக்கு ஏற்ப ரயில்வே தன்னை புதுப்பித்துக் கொள்ளவில்லையோ என்ற எண்ணம் தோன்றுகிறது.
பாதுகாப்பு, தொழில்நுட்பம் அவசியம்: ‘வந்தே பாரத்’ ரயிலை இயக்க ஆர்வம் காட்டும் ரயில்வே துறை, இருக்கும் மக்களின் தேவை என்ன என்பதை அறிந்து கவனிக்க தவறுகிறது. ‘கவாச்’ போன்ற சாதனங்களும், அதிக தொழில்நுட்பம் கொண்ட புதுப்புது சாதனங்களும் அனைத்து வழித்தடங்களிலும் நிறுவப்பட வேண்டும். அனைத்து வழித்தடங்களையும் இரட்டை வழிப்பாதையாக மாற்றம் செய்ய வேண்டும். மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்ட அனைத்து கட்டண சலுகைகளும் வழங்கப்பட வேண்டும்.
தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்டத்தில் விழுப்புரம் மற்றும் திருச்சியில் பிட்லைன் என்ற ரயில் பராமரிப்பு வசதி உள்ளது. அந்த வசதியை திருவாரூருக்கு வழங்க வேண்டும். ‘அம்ரித் பாரத்’ திட்டத்தின்கீழ், அனைத்து ரயில் நிலையங்களும் மேம்படுத்தப்பட வேண்டும். பயணத்தை ரத்து செய்தால் 2 மணி நேரத்தில் பயணிக்கு கட்டணம் திரும்பக் கிடைக்க வேண்டும்.
முன்பதிவு செய்து காத்திருப்போர் எண்ணிக்கை அதிகமாக இருந்தால், அந்தத் தடத்தில் கூடுதலாக ஒரு ரயில் இயக்க வேண்டும். அப்படி இல்லை என்றால், பொதுப் பெட்டிகளை கூடுதலாக இணைத்துவிட வேண்டும்.
புதிய ரயில்கள்: மதுரை - புனலூர் ரயிலை காரைக்காலுக்கு நீட்டிக்க வேண்டும். அதேபோல், வேளாங்கண்ணி அல்லது காரைக்காலில் இருந்து காலையில் திருவாரூர் வழியாக சென்னைக்கு விரைவு ரயில் இயக்க வேண்டும். வேளாங்கண்ணியில் இருந்து கோயம்புத்தூர், பெங்களூருக்கு ரயில் இயக்க வேண்டும். திருச்சியில் இருந்து தஞ்சாவூர், நீடாமங்கலம், திருவாரூர், மயிலாடு துறை வழியாக சென்னைக்கு விரைவு ரயில் இயக்க வேண்டும். இவ்வாறு செல்வராஜ் எம்.பி. பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT