Published : 06 Dec 2024 07:48 AM
Last Updated : 06 Dec 2024 07:48 AM
சூரியனை ஆராய்ச்சி செய்வதற்காக ஐரோப்பிய கூட்டமைப்பு உருவாக்கிய ப்ரோபா-3 இரட்டை செயற்கைக் கோள்கள், பிஎஸ்எல்வி-சி59 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டன.
விண்வெளி ஆராய்ச்சியில் தொடர்ந்து பல சாதனைகளை படைத்துவரும் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ), வணிகரீதியாகவும் வெளிநாட்டு செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தி வருகிறது. இதற்கிடையே, சூரியனை ஆராய்வதற்காக ப்ரோபா-3 எனும் இரட்டை செயற்கைக் கோள்களை ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஎஸ்ஏ) வடிவமைத்தது. இவற்றை இந்தியாவின் பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்த இஸ்ரோவின் என்எஸ்ஐஎல் (Newspace India Limited) அமைப்புடன் இஎஸ்ஏ நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது.
2 செயற்கைக் கோள்களையும் பிஎஸ்எல்வி-சி59 ராக்கெட் மூலம் டிசம்பர் 4-ம் தேதி செலுத்த இஸ்ரோ முடிவு செய்தது. ராக்கெட் ஏவுதலுக்கான பணிகள் மும்முரமாக நடந்தன. கடைசி கட்ட சோதனையின்போது, ஐரோப்பிய செயற்கைக் கோளில் தொழில்நுட்ப கோளாறு இருப்பது கண்டறியப்பட்டதால் ஏவுதல் திட்டம் நிறுத்தப்பட்டது. ஐரோப்பிய, இந்திய விஞ்ஞானிகளின் கூட்டிணைப்பில் செயற்கைக் கோளில் இருந்த கோளாறு சரிசெய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் மையத்தின் முதல் ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி-சி59 ராக்கெட் நேற்று மாலை 4.04 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது. தரையில் இருந்து புறப்பட்ட 19 நிமிடத்தில் இரட்டை செயற்கைக் கோள்கள் திட்டமிட்ட சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டன.
செயற்கை கிரகண ஆராய்ச்சி: விண்ணில் செலுத்தப்பட்டுள்ள ப்ரோபா-3 செயற்கைக் கோள்கள் 550 கிலோ எடை கொண்டது. இவை இரண்டும் பூமியில் இருந்து அதிகபட்சம் 60,500 கி.மீ. தொலைவில் உள்ள சுற்றுவட்ட பாதையில் 150 மீட்டர் இடைவெளியில் அருகருகே பயணிக்கும். ஒரு செயற்கைக் கோள், ஒளியை மறைத்து செயற்கையாக சூரிய கிரகணத்தை உருவாக்கும். அப்போது, மற்றொரு செயற்கைக் கோள்,
சூரியனின் வெளிப்பகுதியை ஆய்வு செய்யும். இதுபோல ஓராண்டில் 50 முறை செயற்கையாக கிரகணத்தை உருவாக்கி இந்த ஆய்வு மேற்கொள்ளப்படும். ப்ரோபா-3 திட்டத்தில் ஸ்பெயின், இத்தாலி, பெல்ஜியம், போலந்து, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் குழுவினர் பணியாற்றியுள்ளனர். இதில் முதல் செயற்கைக் கோளான ப்ரோபா-1 கடந்த 2001-ல் இஸ்ரோ மூலமாக விண்ணில் செலுத்தப்பட்டது. ஒட்டுமொத்தமாக கடந்த 1993 முதல் இதுவரை 34 நாடுகளை சேர்ந்த 425 செயற்கைக் கோள்கள் பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன.
ராக்கெட் பயண வெற்றியை தொடர்ந்து, இஸ்ரோ தலைவர் எஸ்.சோமநாத் கூறியபோது, ‘‘நமது ஆதித்யா விண்கலம்போலவே, ப்ரோபா-3 செயற்கைக் கோளும் வருங்காலத்தில் பல்வேறு புதிய தகவல்களை நமக்கு அளிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. விண்வெளியில் விண்கலனை ஒருங்கிணைக்கும் ஆய்வை மேற்கொள்வதற்கான ஸ்பேடெக்ஸ் திட்டம் இந்த மாதத்திலேயே செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கான பிஎஸ்எல்வி-சி60 ராக்கெட் தயார் நிலையில் உள்ளது’’ என்றார்.
ராக்கெட் மூலம் ஏவப்படும் இரட்டை விண்கலன்கள், புவிவட்ட பாதையில் தனித்தனியே நிலைநிறுத்தப்பட்டு பின்பு ஒன்றாக ஒருங்கிணைக்கப்படும். மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும்போது ஒரு விண்கலத்தில் இருந்து மற்றொன்றுக்கு இடம்பெயரவும், எரிபொருளை மாற்றிக் கொள்ளவும் இந்த தொழில்நுட்பம் பயன்படும். இந்த திட்டம் வெற்றி பெறும்போது, அமெரிக்காபோல விண்வெளியில் இந்தியாவாலும் ஆய்வு மையம் அமைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT