Published : 06 Dec 2024 06:15 AM
Last Updated : 06 Dec 2024 06:15 AM
சென்னை: உண்மை தகவல்களை மறைத்து பொதுநல வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ. 20 லட்சம் அபராதம் விதித்தும், ஓராண்டுக்கு பொதுநல வழக்கு தொடரக்கூடாது என தடை விதித்தும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருவள்ளுர் மாவட்டம் திருமுல்லைவாயில் பகுதியில் 40.95 ஏக்கர் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியை, தனியார் நிலமாக வகை மாற்றம் செய்து கடந்த 2007-ம் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, ராஜ்மோகன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அதில், ‘முன்னாள் எம்எல்ஏ ஞானசேகரன், தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி நிலத்தை, தனியார் நிறுவனத்துக்கு ஒதுக்கீடு செய்து அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியுள்ளார். எனவே, அந்த நிலத்தை அளந்து மீண்டும் வனப்பகுதி என அறிவிப்பு பலகை வைக்க சம்பந்தப்பட்ட துறையினருக்கு உத்தரவிட வேண்டும்# என அவர் கோரியிருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:
கடந்த 2007-ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையை எதிர்த்து இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு வழக்கு தொடர்ந்துள்ளதற்கு உரிய காரணம் தெரிவிக்கப்படவில்லை. வழக்கை தொடர்ந்துள்ள மனுதாரரின் வயது மற்றும் வருமானம் குறித்த தகவல்கள் முன்னுக்குப்பின் முரணாக உள்ளன. அந்த நிலம் வகைமாற்றம் செய்யப்பட்டது தொடர்பான உண்மைத் தகவல்களை மறைத்து மனுதாரர் பொதுநல வழக்கை தொடர்ந்துள்ளார். எனவே, அவருக்கு ரூ.20 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது.
அந்த தொகையில், வழக்கால் பாதிக்கப்பட்டுள்ள கட்டுமான நிறுவனத்துக்கு ரூ.10 லட்சமும், மாநில சட்டப்பணிகள் ஆணைக் குழுவுக்கு ரூ.10 லட்சமும் 4 வாரங்களில் செலுத்த வேண்டும்.
இவ்வாறு உத்தரவில் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். அத்துடன், மனுதாரர் அடுத்த ஓராண்டு காலத்தில் நீதிமன்றத்தின் அனுமதியின்றி எந்தவொரு பொதுநல வழக்கும் தொடரக்கூடாது என தடை விதித்து வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT