Published : 06 Dec 2024 07:27 AM
Last Updated : 06 Dec 2024 07:27 AM

தமிழகத்தில் 2024 ஜன. முதல் செப். வரை இணையவழியில் ரூ.1,100 கோடி மோசடி: அமைச்சர் பிடிஆர் தகவல்

தமிழகத்தில் இணையவழி நிதிமோசடி மூலம் கடந்த ஜனவரி முதல் செப்டம்பர் மாதம் வரை ரூ.1,100 கோடி பறிக்கப்பட்டுள்ளதாக தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

கணினி வைரஸ் தடுப்புக்கான ஆசிய ஆராய்ச்சியாளர்கள் சங்கம் (அவார்) சார்பில் 27-ம் ஆண்டு சர்வதேச இணைய பாதுகாப்பு உச்சி மாநாடு சென்னை மணப்பாக்கத்தில் நேற்று தொடங்கியது. இந்தியாவில் 6 ஆண்டுகளுக்குப் பிறகு நடத்தப்படும் இந்த மாநாடு ‘இணைய பாதுகாப்புக்கான போர்’ என்ற கருப்பொருளில் 6-ம் தேதி (இன்று) வரை நடத்தப்படுகிறது. மொத்தம் 250 பிரதிநிதிகள் பங்கேற்ற மாநாட்டில் 50-க்கும் மேற்பட்ட இணைய பாதுகாப்பு நிபுணர்கள் உரையாற்றுகின்றனர்.

இணைய பாதுகாப்பு தொடர்பான குழு விவாதங்களில் பிரபல கணினி வைரஸ் தடுப்பு மென்பொருள் நிறுவனங்களான இ-செட், கேஸ்பர்ஸ்கை, கே-7 செக்யூரிட்டி போன்றவைகளில் இருந்து தொழில்நுட்ப வல்லுநர்கள் கலந்து கொண்டனர்.

தமிழக அரசின் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மாநாட்டை காணொலி வாயிலாகத் தொடங்கி வைத்தார். செயலர் குமார் ஜெயந்த் முன்னிலை வகித்தார்.

இந்நிகழ்வில், அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாவது: இணைய பாதுகாப்பு என்பது ஒரு தேசத்தின் பாதுகாப்பை உறுதிசெய்யும் நம்பிக்கையின் தூணாகும். தகவல் திருட்டு தொடர்பாக ஐபிஎம் நிறுவனம் 2024-ல் வெளியிட்ட அறிக்கையின்படி, உலகளவில் நடைபெற்ற தகவல் திருட்டுகளின் மூலம் ரூ.42.36 கோடி வரை இழப்புகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இது கடந்த ஆண்டை விடை 10 சதவீதம் அதிகமாகும்.

இந்தியாவில் கடந்த 2023-ம் ஆண்டில் மட்டும் 7.9 கோடி சைபர் குற்றங்கள் பதிவாகியுள்ளன. உலகளவில் சைபர் குற்றங்கள் அதிகம் நடைபெறும் நாடுகளின் வரிசையில் இந்தியா மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளது. டிஜிட்டல் மாற்றத்துக்கான பயணத்தை நோக்கிய நம் பயணத்தில், நம் நாடு சராசரியாக ரூ.19.48 கோடி இழப்பை தகவல் திருட்டின் மூலம் சந்தித்து வருகிறது.

தமிழகத்தில் 2024 ஜனவரி முதல் செப்டம்பர் வரை, இணையவழி நிதி மோசடி குற்றங்களின் மூலம் ரூ.1,100 கோடிக்கு மேல் பணம் பறிப்பு நடந்துள்ளது. இந்த இழப்புகள் இணைய பாதுகாப்பை நாம் மேலும் உறுதிப்படுத்த வேண்டும் என்பதை நமக்கு உணர்த்துகிறது. ஒரு மாநிலமாக தமிழகம் டிஜிட்டல் பாதுகாப்புக்கு எப்போதுமே முன்னுரிமை அளிக்கும்.

இதுபோன்ற சவால்களை எதிர்கொள்ள, சைபர் குற்றங்களை எதிர்த்து போராட உலக தொழில்நுட்ப வல்லுநர்களுடன் இணைந்து பயணிக்க தமிழகம் தயாராக இருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்வில் இந்திய சைபர் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர், லெப்டினென்ட் ஜெனரல் ராஜேஷ் பந்த், கணினி வைரஸ் தடுப்புக்கான ஆசிய ஆராய்ச்சியாளர்கள் சங்கத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜெ.கேசவர்த்தன், கேஸ்பர்ஸ்கை நிறுவனத்தின் ஆராய்ச்சிப் பிரிவு இயக்குநர் இகோர் குஸ்நெட்சோவ், வெரிஜான் தொலைத்தொடர்பு நிறுவனத்தின் முதன்மை இயக்குநர் மாணிக்கம் கண்ணையா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x