Published : 06 Dec 2024 07:05 AM
Last Updated : 06 Dec 2024 07:05 AM

திமுக அரசு மின் கொள்முதல் முடிவை மாற்றியது ஏன்? - அண்ணாமலை கேள்வி

அதானி நிறுவனம் வருவாய் ஈட்ட உதவியாக திமுக அரசு தனது மின் கொள்முதல் முடிவை மாற்றி கொண்டது ஏன்? என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக மின்வாரியத்தின் சிறிய வகை மீட்டர்களுக்கான ஒப்பந்தம், அதானி நிறுவனத்துக்கு வழங்கப்படலாம் என்ற செய்தி செய்திதாள்களில் வெளியாகியிருக்கிறது. இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு ரூ.19,000 கோடி ஆகும். தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் கடந்த 2014-ம் ஆண்டு அதானி கிரீன் எனர்ஜி நிறுவனத்திடமிருந்து சூரிய சக்தி மின்சாரம் கொள்முதல் செய்ய, ஒரு யூனிட்டுக்கு ரூ.7.01 கட்டணத்தை நிர்ணயித்தது. மேலும் இந்தக் கட்டணமானது, 2016 மார்ச் வரை செல்லுபடியாகும் எனக் கால நீட்டிப்பு செய்யப்பட்டது.

பின்னர், கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம், தமிழ்நாடு மின்சார வாரியம், அதானி திட்டத்தைச் செயல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டதாகக் கூறி, 25 மெகாவாட் சூரிய ஒளி மின்சாரத்திற்கு மட்டும், ஒரு யூனிட்டுக்கு ரூ.7.01 விலையில் கொள்முதல் செய்வதாகவும், மீதமுள்ள 47 மெகாவாட் திட்டத்துக்கு, ஒரு யூனிட்டுக்கு ரூ.5.01 விலையிலும், மற்றொரு 216 மெகாவாட் திட்டத்திற்கும், யூனிட் ஒன்றுக்கு ரூ.5.01 என்ற விலையில் அதானி கிரீன் எனர்ஜி நிறுவனத்திடமிருந்து கொள்முதல் செய்ய இரண்டு கட்டண ஆணைகளை வெளியிட்டது.

அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம், தமிழக மின்சார வாரியத்தின் இந்த கட்டண மாறுபாட்டுக்கு எதிராக, தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் மேல்முறையீடு செய்தது. ஆனால், கட்டணத் திருத்தம் குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. 2021-ம் ஆண்டு ஜூலை மாதம், தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அதானி கிரீன் எனர்ஜி நிறுவனங்களின் சூரிய சக்தி மின் திட்டங்களுக்கு ஒரு யூனிட்டுக்கு ரூ.7.01 கட்டணத்தைத் தமிழக மின்சார வாரியத்திடம் இருந்து பெறுவதற்கு ஒரு குறிப்பிட்ட கால நீட்டிப்பு வழங்குவதற்கான கோரிக்கைகளை நிராகரித்தது. ஆனால், 2023-ம் ஆண்டு, ஜூலை மாதம், தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையம், அதானி கிரீன் எனர்ஜி நிறுவனத்துக்கு ஆதரவாக, தமிழக மின்சார வாரியம் நிர்ணயித்த மாறுபட்ட கட்டணத்தை ரத்து செய்து தீர்ப்பளித்தது.

தங்களுக்குச் சாதகமான தீர்ப்பு வந்தால், ஒரு முறை வருவாயாக, தங்களுக்கு ரூ.568 கோடி வருவாய் கிடைக்கும் என்று அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தது. கடந்த 2019-ம் ஆண்டு, அதானி நிறுவனத்துக்கு ஆதரவாகத் தீர்ப்பாயம் தீர்ப்பளித்தது. ஆனால் கடந்த 2021-ம் ஆண்டு, தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையம் அதனை நிராகரித்தது. அதானியை எதிர்ப்பதாகக் கூறிக் கொண்டு, அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம், ஒரு முறை வருவாயாக ரூ.568 கோடி வருவாய் ஈட்ட உதவியாக, திமுக அரசு தனது மின் கொள்முதல் தொடர்பான முடிவை மாற்றிக் கொண்டதன் காரணம் என்ன என்பதுதான் எங்கள் கேள்வி. பதில் வருமா? இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x